இந்த பதிவில் மனித வாழ்வுடன் பின்னிப் பிணைந்த “அறிவியல் வளர்ச்சி கட்டுரை” பதிவை காணலாம்.
அறிவியல் வளர்ச்சியானது மனித வாழ்வில் பல நன்மைகளை வழங்கினாலும் பல பாதகமான விளைவுகளையும் தந்துள்ளது.
அறிவியல் வளர்ச்சி கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- அறிவியலின் தோற்றம்
- தகவல் மற்றும் அறிவின் அதிகரிப்பு
- அறிவியலின் நன்மைகள்
- அறிவியலின் தீமைகள்
- முடிவுரை
முன்னுரை
அறிவியல் வளர்ச்சி இன்றைக்கு விண்ணைத் தொட்டு விட்டது எனலாம். நம் வாழ்வின் எல்லாத் துறைகளையும் அறிவியல் தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருக்கின்றது. நாளுக்கு நாள் வளர்ந்து வரும் அறிவியலின் பங்கு நம் அன்றாட வாழ்வில் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
நாம் அறிவியலின் துணையின்றி வளமாகவும், நலமாகவும் வாழ்தல் இயலாது என்பது உறுதியாகி விட்டது. அறிவியல் வளர்ச்சி பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
அறிவியலின் தோற்றம்
மனிதனானவன் எப்போது தனது வாழ்க்கையை இலகுபடுத்த ஒவ்வொரு விடயத்தையும் கண்டுபிடிக்கத் தொடங்கினானோ அன்றே அறிவியலானது தோற்றம் பெற்று விட்டது எனலாம்.
எனவே அறிவியல் மனிதனைப் போலவே பழமையானது. பண்டைய காலங்களில் மத்திய கிழக்கில் வசித்த நாகரிகங்கள் அறிவியலின் முதல் கருத்துக்களை உருவாக்கியது.
பழங்கால மனிதர்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், தினமும் எழும் சந்தேகங்களுக்குப் பதிலளிக்கவும் முயன்றனர். இன்று நாம் அந்த செயல்முறையை அறிவியல் என்று அழைக்கிறோம்.
16, 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் மனித நாகரிகம் விஞ்ஞான புரட்சியின் பிறப்பைக் கண்டது, இது அறிவியல் வளர்ச்சியை மேலும் உயர்த்தியது.
தகவல் மற்றும் அறிவின் அதிகரிப்பு
மனிதகுலத்தால் முன்னர் கண்டிராத அறிவு மற்றும் தகவல் சார்ந்த துறைகள் வளர்ந்து வருகின்றன. எனவே, இப்போதெல்லாம் தொழில்நுட்பத்தின் வருகையுடன், ஆராய்ச்சி, அறிவியல் மற்றும் புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சித் துறை அதிகரித்துள்ளது.
அறிவியலின் நன்மைகள்
இன்று அறிவியலின் பயனானது எண்ணிலடங்காததாக உள்ளது. மனிதன் சில மணித்துளிகளிலேயே உணவைச் சமைத்து முடிக்கும் மின்னடுப்புகள், காற்றழுத்த அடுப்புகள் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறான்.
அறிவியல் தொழில் வளர்ச்சிக்கும் பேருதவியாக உள்ளன. தொழிற்சாலைகளை இயக்க மின்சாரத்தை வழங்குவதும் அறிவியலே.
மருத்துவத் துறைக்கு அறிவியல் பெரும் பங்களிப்பினைச் செய்துள்ளது. மருத்துவ ஆராய்ச்சிகள், மருத்துவக் கண்டுபிடிப்புக்கள், புதிய மருந்துகள், மருத்துவ முறைகள் போன்றவற்றின் வெற்றிக்கு அறிவியலே முதற்காரணமாகும்.
அறிவியலின் தீமைகள்
மாணவர்கள் கணித செயல்முறைகள் மனரீதியாக மேற்கொள்வது குறைந்துள்ளது. அதற்குப் பதிலாக செல்போனில் நிறுவப்பட்ட எளிய கால்குலேட்டர் மூலம் கணிதச் செயன்முறைகளைக் கணிப்பிடுகின்றனர். இதனால் மாணவர்கள் சிந்திக்கும் திறனை இழப்பதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றது.
மனித மூலதனம் குறைந்துவிட்டது, இதனால் வேலையின்மை அதிகரித்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு சேதம் ஏற்படுகிறது, இது நீர், வளி மற்றும் கடல்களை மாசுபடுத்தியுள்ளது.
மனித உறவுகள் குறைந்துவிட்டன. மக்கள் பிறருடன் நட்புறவு பேணும் நேரம் குறைவடைந்துள்ளது. தங்கள் ஓய்வு நேரங்களை கையடக்கத் தொலைபேசி, தொலைக்காட்சி முதலானவற்றிலேயே செலவிடுகின்றனர்.
முடிவுரை
அறிவியல் என்பது மனிதனுக்கு முக்கியானதாகவும், மனித வாழ்வின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானதாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை. நமது அன்றாட வாழ்வு முதல் அனைத்திலும் அறிவியல் வளர்ச்சி பின்னிப் பிணைந்துள்ளது.
அறிவியல் வளர்ச்சியானது மனித வாழ்வில் பல நன்மைகளை வழங்கினாலும் பல பாதகமான விளைவுகளையும் தந்துள்ளது.
இன்று நாடுகளின் அணுவாயுதப் போட்டியானது அறிவியலின் பின்னணியிலேயே இடம்பெறுகின்றது என்பதில் துளியும் ஐயமில்லை. எனினும் உலக மக்களின் நல்வாழ்விற்காக அறிவியலைப் பயன்படுத்தி அதன் பயனை அடைவதே சாலச் சிறந்ததாகும்.
You May Also Like: |
---|
அறிவியலின் நன்மைகள் கட்டுரை |
அன்றாட வாழ்வில் அறிவியல் கட்டுரை |