உடல் ஆரோக்கியம் கட்டுரை

Udal Arokiyam Tamil Katturai

இந்த பதிவில் ஆரோக்கியமான வாழ்விற்கு உதவும் “உடல் ஆரோக்கியம் கட்டுரை” பதிவை காணலாம்.

வாழ்வை மகிழ்ச்சியாக வாழ்ந்திட உடல் ஆரோக்கியம் அவசியம் தேவையாகும்.

உடல் ஆரோக்கியம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. உடல் ஆரோக்கியத்தின் அவசியம்
  3. உடல் பாதுகாப்பு
  4. உடல் ஆரோக்கியத்தைப் பேணும் வழிமுறைகள்
  5. ஆரோக்கியம் தரும் உணவுகள்
  6. முடிவுரை

முன்னுரை

ஆரோக்கியம் என்பது மனித வாழ்வில் இன்றியமையாததாகும். உள மற்றும் உடல் ஆரோக்கியம் இரண்டுமே ஆரோக்கிய வாழ்வில் முதன்மையானவை ஆகும்.

அந்த வகையில் மன ஆரோக்கியத்திற்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அந்த அளவு உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தல் வேண்டும்.

ஏனெனில் உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் ஒன்றையொன்று சார்ந்தவையாகும். உடல் ஆரோக்கியம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

உடல் ஆரோக்கியத்தின் அவசியம்

எமது உடலானது ஆரோக்கியமாக இருந்தால்தான் சாதாரணமாக நம்மால் அனைத்து வேலைகளையும் செய்ய முடியும். அதாவது உடல் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்தால் தான் எக்காரியத்தையும் எளிதில் செய்ய முடியும்.

நோய்கள் உடலை அண்டாமல் இருப்பதற்கு உடல் ஆரோக்கியம் அவசியமாகும். உடல் ஆரோக்கியத்தை பேணாமல் விட்டால் எளிதில் நோய் தொற்றிக்கொள்ளும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் குறைவடையும் போது நோய்கள் தொற்றிக்கொள்ளும்.

எனவே நோய்கள் ஏற்படாமல் இருப்பதற்கு உடல் ஆரோக்கியம் அவசியமாகும். அழகான உடல் அமைப்பை பெறவும் மன அமைதியைப் பெற்று மகிழ்வான வாழ்வு வாழவும் உடல் ஆரோக்கியம் மிகமிக அவசியமானதாகும்.

உடல் பாதுகாப்பு

உடலைப் பாதுகாப்பது உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்களிப்பைச் செய்கின்றது. இதற்காக தினமும் குளிப்பது அவசியமாகும்.

நமது உடலில் சுமார் 30 லட்சம் கோடி செல்கள் இருப்பதாக ஆய்வு கூறுகின்றது. ஒரு பக்கம் இறந்த செல்கள் மறுபக்கம் புது செல்கள் உருவாக்கம் இயற்கையாக நடந்து கொண்டிருக்கின்றது.

குளிக்காமல் இருப்பதால் இறந்த செல்களின் எண்ணிக்கை தினம் தினம் அதிகமாகி தோலின் மேற்புறத்தில் படிந்து நமைச்சல், அரிப்பு ஏற்பட்டு தோல் கடினமாகிவிடும். இதன் மூலம் தோல் நோய் ஏற்படும்.

தினமும் குளிப்பதால் உடலுக்கு புத்துணர்ச்சியும் கிடைக்கின்றது. உடலையும் சருமத்தையும் பாதுகாத்து வைத்துக் கொள்ள தினமும் குளிப்பது அவசியமாகும்.

உடல் ஆரோக்கியத்தைப் பேணும் வழிமுறைகள்

உடல் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சி செய்தல் வேண்டும். தினமும் உடற்பயிற்சி மேற்கொண்டால் உடல் ஆரோக்கியமாகும். கொழுப்பு சத்து இல்லாத உணவுகளை சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.

அதிக அளவு காய்கறிகள், பழங்கள் உண்பது நன்று. புகைப்பிடித்தல், மது அருந்துதல், எதிர்மறை எண்ணங்கள் போன்றவை அனைத்தையும் தவிர்த்தல் வேண்டும். தினமும் நாம் உண்ணும் உணவுகளை நன்கு மென்று உண்ணப் பழகவேண்டும்.

இவ்வாறு சாப்பிட்டால் தேவையற்ற கொழுப்பு சேர்வதிலிருந்தும், வாயுத் தொல்லை, செரிமான பிரச்சினை போன்ற அனைத்திலிருந்தும் பாதுகாப்பு பெறலாம்.

ஆரோக்கியம் தரும் உணவுகள்

ஒருவரின் ஆரோக்கியத்தின் அடிப்படை உணவு ஆகும். புரதச்சத்து அதிகம் உள்ள பாதாம் பருப்பானது இதயநோய் ஏற்படாமல் பாதுகாக்க கூடியது. மற்றும் உலர் திரைட்சை சாப்பிடுவது நல்லது.

சிட்ரஸ் பழங்கள் உடல் ஆரோக்கியத்தில் முக்கியமான அங்கம் வகிக்கின்றனர். எலுமிச்சை, ஆரஞ்சு, நார்த்தங்காய் மற்றும் சாத்துக்குடி என புளிப்புச்சுவை கொண்ட பழங்களில் விட்டமின் சி சத்து நிறைந்து இருக்கின்றன.

இவை சருமத்திற்கு பொலிவூட்டுபவையாகவும் செரிமானத்தை வழங்குபவையாகவும் உள்ளன.

முடிவுரை

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ஆகும். எனவே ஊட்டச்சத்தான உணவுகளை உண்ண வேண்டும். ஏனெனில் உணவு உடலுக்கு முதலீடு அதேபோல் ஆரோக்கியம் உயிருக்கான முதலீடு ஆகும்.

எனவே சிறந்த உணவுகளை உண்டு உடற்பயிற்சிகளை தினமும் மேற்கொண்டு ஆரோக்கியமான வாழ்வை வாழ்வோம்.

You May Also Like :
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் கட்டுரை
உடல் நலம் காப்போம் கட்டுரை