உலக வானொலி தினம் | பெப்ரவரி 13 |
World Radio Day | February 13 |
வானொலி நம்மில் பலருக்கு உற்ற தோழன், வானொலியைக் கேட்டுக்கொண்டே உறக்கத்தைத் தழுவுவோர் இப்போதும் பலருண்டு.
ரேடியஸ் (Radius) என்ற லத்தீன் மொழியில் இருந்து தான் ரேடியோ என மருவியுள்ளது. வானொலியை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் இத்தாலியைச் சேர்ந்த குலீல்மோ மார்கோனி ஆவார்.
இவர் அறிமுகப்படுத்திய வானொலியினைத் தொடர்ந்தே நாம் தற்பொழுது பாவிக்கும் நவீன வானொலிகள் உருவாகின. இன்று உலகம் முழுவதிலும் ஒரு லட்சத்திற்கும் மேலான வானொலி நிலையங்கள் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களுக்கு அவசியமான தகவலை வழங்கும் தொடர்பு சாதனமாக மட்டுமல்லாமல் நல்ல பொழுதுபோக்கு கருவியாகவும் வானொலி காணப்படுகின்றது.
உலக வானொலி தினம் வரலாறு
கடந்த 2011 ஆம் ஆண்டு ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் முதன் முதலாக ஸ்பெயின், நவம்பர் 3-ம் தேதியை உலக வானொலி தினமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியது.
இதனைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவினால் பெப்ரவரி மாதம் 13 ஆம் தேதி உலக வானொலி தினமாக கடந்த 2011 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.
ஐ.நா வானொலி அலைவரிசை தொடங்கப்பட்டது 1946 பெப்ரவரி 13ஆம் திகதி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அதனடிப்படையில் உலகின் ஒவ்வொரு நாடும் ஆண்டுதோறும் பெப்ரவரி மாதம் 13ஆம் திகதியை உலக வானொலி தினமாகக் கொண்டாடி வருகின்றன.
உலக வானொலி தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம்
ஒரு தகவலை ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்காற்றிய முதல் ஊடகம் என்றால் அது வானொலியே ஆகும்.
இத்தகைய வானொலியின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஒவ்வொரு ஆண்டும் உலக வானொலி தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
உலக வானொலி தினம் முக்கியத்துவம்
தகவல் தொலைத்தொடர்பு சாதனங்களுக்கும் முன்னோடியாக இருப்பது வானொலியே ஆகும். பரபரப்பு செய்திகளாகட்டும், பயனுள்ள தகவல்களாகட்டும் படிக்காத பாமரர்களுக்கும் அதனைக் கொண்டு சேர்ப்பதில் வானொலியின் பங்கு அளப்பரியது.
இத்தகைய வானொலியின் முக்கியத்துவம் தொடர்பாக உலக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வாய்ப்பை வழங்கும் ஒரு நாளாக உலக வானொலி தினம் உள்ளது. தகவலை மக்களிடம் விரைவாக கொண்டு சேர்ப்பதில் வானொலியின் பங்கு அளவிடற்கரியது.
வானொலி மக்களுக்கு அறிவை வழங்கும் பணியையும் மற்றும் கற்றுக் கொடுக்கும் பணியையும் வழங்குவது மட்டுமல்லாது திறமைகளை வளர்க்க உதவும் ஊடகமாகவும் இன்றளவும் விளங்குகின்றது. மனிதப் பரிணாமத்தின் வளர்ச்சியிலும் வானொலி தாக்கத்தைச் செலுத்தியுள்ளது என்றால் அதுமிகையல்ல.
இன்றளவிலும் தொலைக்காட்சி, தொலைபேசி, யூடியூப் உன பல ஊடகங்கள் காணப்படுகின்ற போதிலும் பெரும்பாலான பாரம்பரிய மக்கள் பயன்படுத்தும் ஊடகமாக வானொலியே திகழ்கின்றது.
உலகைக் காண முடியாத பலருக்கும் உலகை உணரச் செய்யும் இசையை செவிகளில் சேர்க்கும் சேவையை பல வருடங்களாக வானொலி ஆற்றி வருகின்றமை சிறப்பானதாகும்.
You May Also Like : |
---|
உலக ஓசோன் தினம் |
உலக எழுத்தறிவு தினம் |