இந்த பதிவில் உலகம் போற்றும் மாபெரும் கவிஞன் “பாரதி கண்ட புதுமைப்பெண் கட்டுரை” பதிவை காணலாம்.
பாரதியார் உலகம் போற்றும் தலைசிறந்த கவிஞர் ஆவார். இவர் தனது கவிவரிகளால் அனைவரையும் வியக்க வைத்த மாபெரும் கவிஞர்.
பாரதி கண்ட புதுமைப்பெண் கட்டுரை
குறிப்புச் சட்டகம்
- அறிமுகம்
- பாரதி காலப் பகுதியில் வாழ்ந்த பெண்களின் நிலை
- பாரதி கண்ட புதுமைப் பெண்ணின் குணங்கள்
- பெண்மை போற்றுதற்குரியது
- கற்பு நிலை
- முடிவுரை
அறிமுகம்
பாரதியார் உலகம் போற்றும் தலைசிறந்த கவிஞர் ஆவார். இவர் தனது கவிவரிகளால் அனைவரையும் வியக்க வைத்த மாபெரும் கவிஞர்.
பண்டைய தமிழ் வரலாற்றையும்⸴ பண்பாட்டையும் நன்கு அறிந்திருந்த பாரதியார் நாட்டின் ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்களின் நிலைமைகளையும் வேதனைகளையும் கண்டு மனம் வெதும்பினார்.
இதனால் பெண் விடுதலைக்காக எழுச்சிப் பாடல்களை பாடினார். பாரதி என்னும் தலைசிறந்த கவிஞருக்கு பல கற்பனைகள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் பாரதி கண்ட புதுமைப்பெண் பற்றிய கனவாகும். பாரதி கண்ட புதுமைப்பெண் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
பாரதி காலப் பகுதியில் வாழ்ந்த பெண்களின் நிலை
பாரதி வாழ்ந்த காலப்பகுதியில் ஆணாதிக்கமானது மேலோங்கிக் காணப்பட்டது. இதனால் பெண்கள் ஆண்களுக்கு இணையாக வேலை செய்யக் கூடாது என்றும்⸴ பெண்கள் கல்வி கற்கக் கூடாது என்றும் பல அடக்குமுறைகளை பெண்கள் மீது அதிகம் செலுத்தினர்.
மேலும் சிறுவயது திருமணம்⸴ சீதனக் கொடுமைகள் என்பனவும் அக்காலத்தில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளாக இருந்தன.
இந்நிலைகளைக் கண்டு வேதனையுற்றார். பாரதியார் இவற்றிற்கு எதிராக குரல் கொடுத்தார். பெண் விடுதலைக்காய் போராடினார்.
பாரதி கண்ட புதுமைப் பெண்ணின் குணங்கள்
பாரதியார் தம் எதிர்பார்ப்பு, ஏக்கம், கனவு, கற்பனை, குறிக்கோள், வேட்கை ஆகிய அனைத்தையும் சம விகிதத்தில் கலந்து உருவாக்கிய ஒரு கற்பனை ஓவியமே “புதுமைப் பெண்“.
பாரதி கண்ட புதுமைப் பெண் நிமிர்ந்த நடையும்⸴ நேர்கொண்ட பார்வை நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்⸴ திமிர்ந்த ஞானச்செருக்கு உடையவள் ஆவாள்.
இதனை பாரதியார் தனது கவி வரிகளில் “நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச்செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்” எனக் குறிப்பிடுகின்றார்.
பெண்மை போற்றுதற்குரியது
பெண்மை என்பது போற்றுதற்குரியது ஆகும். பெண்மையின் மேன்மையையும்⸴ உயர்வினையும் பலவாறு சிந்தித்து தன் படைப்பின் வாயிலாக புதுமையை புகுத்தி பெண்மைக்குப் பெருமை சேர்த்துள்ளார் பாரதி. பெண்மை வாழ்க என்றும்⸴ பெண்மை வெல்க என்று குரல் எழுப்பினார். தனது புதிய ஆத்திச்சூடியில் தையலை “உயர்வு செய்” என்று தன் கருத்தை புகுத்தியவர்.
அதனால் தான் இன்று பல உயர் பதவிகளில் உள்ள பெண்களின் மதிநுட்பத்தை நாம் வியந்து போற்றுகின்றோம்.
தாயையும்⸴ தாரத்தையும் சமநிலையில் வைத்துப் போற்ற கூடியவர்கள் உயர்ந்தவர்கள் என்கின்றார். இன்று பல குடும்பங்களில் இத்தகைய நிலையைக் காண முடிகின்றது.
கற்பு நிலை
கற்பு என்ற நிலைப்பாட்டில் பாரதி தன் கருத்தை ஆழப் பதித்துள்ளார். பெண்ணின் கற்பு போற்றப்பட வேண்டும் எனவும்⸴ பெண் தன் கற்பு நிலையைப் புலப்படுத்துவது போல ஆணும் தன் கற்பு நிலையில் தெளிவுடையவனாக இருக்க வேண்டும் என்கின்றார்.
பாரதி கற்பினை ஆண்⸴ பெண் இருவருக்கும் பொது நிலையில் வைத்தார். ஆண் தன் கற்பு நிலையில் தவறு செய்யும் பொழுது பெண்ணின் கற்பும் பிழைபடும் எனக் கூறி ஆணுக்குப் பெண் எல்லாவகையிலும் சரிநிகர் சமம் என்பதை வலியுறுத்தினார்.
முடிவுரை
பெண்களை அடிமையாக நடத்தும் எந்த ஒரு நாடும் உரிமை பெறுவதும் இல்லை⸴ முன்னேற்றம் அடைவதும் இல்லை. பெண் தன்னைச் சமுதாயத்தில் உயர்த்திக்கொள்ள கல்வி பெறுவதே ஒரு சிறந்த வழியாகும்.
பாரதியின் புதுமைச் சிந்தனையில் உதித்த கருத்துக்களை தன் சிந்தனையில் வைத்து பெண்கள் ஒவ்வொருவரும் தம் வாழ்வில் முன்னேற வேண்டும்.
You May Also Like: