இந்த பதிவில் “குடிமக்கள் காப்பியம் கட்டுரை” பதிவை காணலாம்.
தமிழராய் பிறந்த அனைவரும் கவித்திறனும் வாழ்வியல் ஒழுக்கத்தையும் கூறும் இக்காப்பியத்தினை படிக்க வேண்டும்.
குடிமக்கள் காப்பியம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- குடிமக்கள் காப்பியம்
- கட்டமைப்பு
- கதை மாந்தர்கள்
- இளங்கோ அடிகள்
- முடிவுரை
முன்னுரை
அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு விடயங்களையும் உள்ளடக்கி ஒப்பில்லாத தலைவன் மற்றும் தலைவியை மையமாக கொண்டு எழுதப்படுகின்ற நூல்களானவை பெருங்காப்பியம் எனப் பெயர் பெறுகின்றன.
மேற்குறிப்பிடப்பட்ட விடயங்களில் சிலவற்றை மட்டும் கொண்டிருக்கும் நூல்கள் சிறுகாப்பியங்கள் எனப்படுகின்றன.
அவ்விதத்தில் தமிழில் ஐந்து பெருங்காப்பியங்கள் காணப்படுகின்றன. சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி அவையாகும்.
இவற்றில் குடிமக்கள் காப்பியமான “சிலப்பதிகாரம்” தொடர்பாக விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.
குடிமக்கள் காப்பியம்
இரண்டாம் நூற்றாண்டில் இது எழுதப்பட்டுள்ளது. ஏனைய நூல்கள் அரசனையோ தெய்வத்தையோ பாட்டுடை தலைவனாக கொண்டிருக்க சிலப்பதிகாரமானது கோவலன், கண்ணகி என்ற குடிமக்களை தலைவன், தலைவியாக கொண்டு இன்னும் பல குடிமக்களை கதை மாந்தர்களாக கொண்டு எழுதப்பட்ட நூல் என்பதால் இது “குடிமக்கள் காப்பியம்” எனப்படுகின்றது.
மேலும் பெண்கள் காலில் அணியும் சிலம்பு எனும் ஆபரணம் இந்நூலில் முக்கியம் பெறுவதால் சிலம்பு+அதிகாரம் = சிலப்பதிகாரம் எனவும் பெயர் கொண்டுள்ளது.
கட்டமைப்பு
இக்கதையானது பிரதானமாக மூன்று காண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இது பெரும் பிரிவுகளாக அமைந்துள்ளதுடன் கதை நிகழும் இடங்களை அடிப்படையாக கொண்டு காண்டங்களுக்கான பெயர்களும் சூட்டப்பட்டுள்ளன.
அவையாவன புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என்பவையாகும். இம்மூன்று பெரும் பிரிவுகளுல் சிறு சிறு பத்து பிரிவுகள் காணப்படுகின்றன.
இவை காதைகள் எனப்படுவதுடன் மொத்தமாக முப்பது காதைகள் இந்நூலில் காணப்படுகின்றன.
கதை மாந்தர்கள்
இக்கதையின் பாட்டுடை தலைவியாக கோவலனது மனைவி கண்ணகி காணப்படுகின்றாள். இவள் கலங்கமற்ற பெண்ணொழுக்கத்தின் எடுத்துக்காட்டாகவும் கற்புநெறியின் அளவு கோலாகவும் படைக்கப்பட்டவள்.
பாட்டுடை தலைவனாக கோவலன் காணப்படுகின்றான். இவன் பெரும் செல்வந்தர் மாசாத்துவானின் மகன். பிற ஒழுக்கங்கள் அனைத்தும் நிறைந்திருந்தாலும் மோகத்தால் அழிந்தவன். ஊழ்வினை காரணமாக உயிரிழந்தவன்.
மாதவியை எடுத்துக் கொண்டால் பேரழகி. ஆடற்கலையின் ஆழமுணர்ந்தவள். கணிகையர் குலத்தோன்றலெனினும் கற்புநெறி வழுவாமல் கோவலனுக்கென்றே வாழ்ந்தவள். இவை தவிர சில கதா பாத்திரங்களையும் இக்கதை உள்ளடக்கியுள்ளது.
இளங்கோ அடிகள்
இவர் இளவரசு பட்டத்தை விடுத்து துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். தன் அண்ணன் செங்குட்டுவனுடன் மலைவளம் காணச் சென்றபோது கண்ணகியை பற்றிய செய்தியை சீத்தலை சாத்தனார் என்ற புலவர் மூலமாக அறிந்தார்.
கண்ணகியின் கற்பொழுக்கமும், பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் நேர்மையும் அரசியல் நடுநிலைமையும் அவரை மிகவும் கவர, மூவேந்தர்களுக்கும் உரிய தமிழின் உயர் காவியமாக குடிமக்கள் காப்பியம் எனப்படும் சிலப்பதிகாரத்தினை எழுதினார் இளங்கோ அடிகள்.
முடிவுரை
இளங்கோவடிகள் இப்பெருங்காப்பியத்தின் மூலம் கீழ் காணும் முப்பெரும் உண்மைகளை விளக்க முயல்கின்றார்.
அவையாவன ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’, ‘ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்’, ‘உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏற்றுவர்’. என்பனவாகும்.
மேலும் இக்காப்பியம் இயல், இசை, நாடகம் என முத்தமிழும் விரவப் பெற்றிருப்பதால் முத்தமிழ் காப்பியம் எனவும் மணிமேகலை என்ற காப்பியத்திற்கு அடித்தளமாக இருப்பதனால் இரட்டைக் காப்பியம் எனவும் அழைக்கப்படுகின்றது.
தமிழராய் பிறந்த அனைவரும் கவித்திறனும் வாழ்வியல் ஒழுக்கத்தையும் கூறும் இக்காப்பியத்தினை படிக்க கடமைப்பட்டவர்களாக உள்ளோம்.
You May Also Like: |
---|
இரட்டை காப்பியங்கள் கட்டுரை |
சீத்தலை சாத்தனார் வாழ்க்கை வரலாறு |