சாதனைப் பெண்கள் பற்றிய கட்டுரை

Sathanai Pengal Katturai In Tamil

இந்த பதிவில் “சாதனைப் பெண்கள் பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

பெண்ணடிமை எனும் விலங்கை உடைத்து எறிந்து இன்றைய நாகரீக உலகில் பெண்கள் பல சாதனைகளை படைத்து வருகின்றமை பெருமைக்குரியதாகும்.

சாதனைப் பெண்கள் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. பல்துறைகளிலும் பெண்களின் சாதனைகள்
  3. கல்பனா சாவ்லா
  4. வீரமங்கை வேலுநாச்சியார்
  5. சந்திரிமா சாஹா
  6. முடிவுரை

முன்னுரை

இன்றைய நவீன உலகில் பெண்கள் சாதனை படைக்காத துறைகளே இல்லை எனும் அளவிற்கு எல்லா துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர். ஆண்களுக்கு நிகராக பெண்கள் சாதனையும் போற்றப்படுகிறது.

பெண்களின் சாதனை மண்ணுலகம் மட்டுமன்றி விண்ணுலகம் வரை பரந்துள்ளது. உலகளாவிய ரீதியில் பல்வேறு பெண்கள் சாதனைப் பெண்களாக திகழ்கின்றனர். அவர்கள் அனைவரும் போற்றுதற்கு உரியவர்.

பெண்ணடிமை எனும் விலங்கை உடைத்து எறிந்து இன்றைய நாகரீக உலகில் பெண்கள் பல சாதனைகளை படைத்து வருகின்றமை பெருமைக்குரியதாகும். இத்தகைய சாதனைப் பெண்கள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

பல்துறைகளிலும் பெண்களின் சாதனைகள்

காவல்துறை, சட்டத்துறை, அரசியல், தகவல் தொடர்பு துறை, மருத்துவத் துறை, போக்குவரத்து துறை, அரசியல்துறை உள்பட அனைத்து துறைகளிலும் இன்று பெண்கள் பெரிய பதவிகளை வகித்து திறம்பட செயல்படுகின்றனர்.

போக்குவரத்து துறையிலும் பெண் ஓட்டுனர்கள் வந்து விட்டனர். வேளாண்மை துறையிலும் பெண்கள் பங்களிப்பு உள்ளது சிறப்புக்குரியதாகும்.

குடும்ப பெண்கள் தங்கள் வீட்டுக் கடமைகளை முடித்துவிட்டு பகுதி நேர வேலைக்கு சென்று கணவரின் கஷ்டத்தில் பங்கெடுக்கின்றனர்.

விளையாட்டு துறைகளிலும் பெண்கள் பங்கேற்று இந்தியாவிற்கு பதக்கங்களை பெற்று தந்துள்ளார்கள்.

கல்பனா சாவ்லா

ஆண்களுக்கு நிகராக பெண்களாலும் சாதித்து காட்ட முடியும் என்பதற்கு சான்றாக, ஏராளமான பெண்களை கூற முடியும். இத்தகைய பெண்களில் ஒருவர் தான் உலகமே வியந்து போற்றிடும் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா ஆவார்.

விண்வெளிப் பயணம் மேற்கொண்ட முதல் இந்தியப்பெண் என்ற பெருமை இவரையே சாரும். இவர் மரித்தாலும் இளைய சமுதாயத்தின் இதயங்களில் விண்வெளி கனவை விதைத்துப் போயிருக்கிறார்.

வீரமங்கை வேலுநாச்சியார்

தமிழ்நாட்டில் பிறந்த பெண்கள் நாடாளவும் முடியும் என முதல் முதலில் தனது வீரத்தின் மூலம் நிரூபித்துக்காட்டிய பெருமைக்குரியவர் வேலுநாச்சியார். இவரே இந்தியாவில் முதல் வீரமங்கையாவர்.

வாள்வீச்சு, அம்பு விடுதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் என்று எல்லா போர்க் கலைகளையும் கற்றுத் தேர்ந்தவராவார்.

தனது மண்ணை பறிக்க முயன்றவர்களை வீழ்த்தி, வீரமங்கையாக திகழ்ந்தவர். அவருடைய ஆட்சிக் காலம் வீரத்தின் காலமாக இருந்தது என்றால் அதுமிகையல்ல.

சந்திரிமா சாஹா

இந்திய தேசிய அறிவியல் அகாடமியின் முதல் பெண் தலைவர் ஆவார். இவர் செல் உயிரியலில் நிபுணத்துவம் பெற்றவர். ‘காலா அசார்’ தாக்கக்கூடிய லஷ்மேனியா என்னும் தொற்று நோய் குறித்து தீவிரமாக ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

80-க்கும் அதிகமான ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார். சந்திரிமா சாஹா இஸ்ரோ, INSA போன்ற நிறுவனங்களில் உயர் பதவி வகித்து புதிய திட்டங்களைச் செயல்படுத்தி பல சாதனைகளை செய்துள்ளார்.

முடிவுரை

பெண்கள் அனைத்துத் துறைகளிலும் கால்பதித்து வருகின்றனர். பெண்கள் தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பை ஏற்கத் தயாராக இருக்கவேண்டும்.

சிறப்பான அறிவாற்றல் இருக்குமானால் சாதனை படைக்க எல்லைகளே கிடையாது. விழுந்தால் நட்சத்திரமாக விழ வேண்டும் என்பது அனைத்து பெண்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்த சாதனைப் பெண்களே சான்று.

You May Also Like:
உலக மகளிர் தினம் கட்டுரை
பாரதி கண்ட புதுமைப்பெண் கட்டுரை