மயானக் கொள்ளை வரலாறு

mayana kollai history tamil

மயானக் கொள்ளை வரலாறு

சைவசமயம் என்பது சிவனை முழு முதற் கடவுளாக கொண்ட சமயமாகும். சிவனின் வல்லமையான சக்திக்கு பல பூசைகளும் விழாக்களும் இடம் பெறுகின்றன.

அவ்வாறான பிரமாண்டமான விழாக்களில் ஒன்றே மயானக் கொள்ளை விழாவாகும். இவ்விழா அம்மன் பக்தர்களால் அங்காள பரமேஸ்வரி ஆலயங்களில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

மயானக் கொள்ளை திருவிழா நடைபெறும் காலம் – சிவராத்திரியை அடுத்து மாசி மாத அமாவாசையன்று அங்காளப் பரமேஸ்வரி ஆலயங்கள் தோறும் மயானக் கொள்ளை திருவிழா இடம்பெறும்.

இத்திருவிழா கொண்டாடப்படும் சிறப்பான இடம் – மேல்மலையனூர் கோயில்

இத்திருவிழாவை முக்கியமாக கொண்டாடும் சமூகம் – அங்காள பரமேஸ்வரி மீனவர் வணங்கும் தெய்வமாக விளங்குவதால் இக்கொண்டாட்டங்கள் முதன்மையாக மீனவ சமுதாயத்தால் பரவலாக கொண்டாடப்படுகிறது.

மயானக் கொள்ளை கொண்டாடப்படும் பழங்கதை வரலாறு

சைவ சமயத்தில் இடம்பெறும் விழாக்களை ஒட்டிய பல புராணக் கதைகள் உண்டு. அவ்வகையில் மயானக் கொள்ளை திருவிழா கொண்டாடுவது தொடர்பாக இரண்டு புராணக் கதைகள் காணப்படுகின்றன.

புராணக்கதை – 1

சிவபெருமானின் திருமணத்தின் போது அதற்கு புரோகிதராக வந்த பிரம்ம தேவருக்கு ஐந்து முகங்கள் இருந்தன. அப்போது பிரம்மா தன் ஒவ்வொரு தலைக்கும் தட்சணை வேண்டும் என்று சிவனிடம் கேட்டார்.

அதற்கு சிவன் அப்படியே தட்சணை வழங்கினார். நான்கு திசையில் நின்று நான்கு முகங்களுக்கும் தட்சணை வழங்கினார்.

நான்கு தலைகளுக்கும் நான்கு திசையில் நின்று தட்சணை வழங்கிய பின் ஐந்தாவது தலைக்கு இதுவரை நின்று கொடுக்காத திசையில் நின்று தட்சணை கொடுக்க வேண்டும் என பிரம்மா கூறியதோடு வடகிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு ஆகிய எவ்வித திசையும் அதில் உள்ளடங்கக் கூடாது என்ற விதியையும் கூறினார்.

அவ்வாறு கூற தட்சணையை எவ்வாறு கொடுப்பது என்று சிவபெருமான் தவித்தார். அதற்கு பிரம்ம தேவரோ “நான் முடி காண சென்ற தவறை பெரிதுபடுத்தினீர்களே தற்போது தட்சணை கொடுக்க முடியாத நீங்கள் எப்படி பரம் பொருளாவீர்கள்” என்று கேட்க கோபத்தின் உச்சிக்கே சென்ற சிவன் பிரம்ம தேவரின் ஐந்தாவது தலையை கொய்து விட்டார்.

“இனி நீ நான்முகன் என்று அழைக்கப்படுவாய், உனக்கு ஆலயங்களும் இல்லை” என சிவன் பிரம்ம தேவரிடம் கூறினார்.

இதன் காரணமாக பிரம்ம தேவரிடம் இருந்து சிவபெருமானுக்கு பிரம்மகத்தி தோஷம் ஏற்பட்டது. பிரம்மாவின் ஐந்தாவது தலை கபாலமாக சிவனின் கையில் ஒட்டிக் கொண்டது.

சரஸ்வதியின் சாபத்தால் சிவன் பிச்சாடணர் வடிவம் கொண்டு அலைந்தார். பார்வதியும் சிவன் இன்றி அகோர ரூபம் கொண்டு அலைந்தார்.

இதையடுத்து பார்வதியின் அண்ணனான விஷ்ணு “தங்கையே நீ கலங்காதே நீ மலையரசன் பட்டினத்தில் அதாவது தற்போதுள்ள மலையனூரில் பூங்காவனத்தில் உள்ள புற்றில் பாம்பு வடிவில் இருக்கும் போது உனக்கு சாபவிமோசனம் கிடைக்கும்” என்று வழிகாட்டினார்.

அகோர உருவம் கொண்ட அன்னை பார்வதி காடெல்லாம் அலைந்து திரிந்து திருவண்ணாமலை வந்து சேர்ந்தார். மேல்மலையனூர் பூங்காவனத்தில் ஐந்து தலை நாகமாக சுற்றி திரிந்தார்.

அச்சமயம் மலையனூர் வந்த சிவனின் குரல் கேட்ட பார்வதி விஷ்ணுவை மனதில் தியானம் செய்தார். விஷ்ணுவின் ஆலோசனைப்படி விநாயகப் பெருமானை காவலுக்கு நிற்க வைத்து அன்னபூரணி மூலம் சுவையான உணவு சமைத்து அதை கபலங்கள் ஆக்கினார் பார்வதி.

அதில் இரண்டு கபலங்களை சிவனின் கையில் இருந்த கபாலத்திற்கு கொடுத்தார். அதன் சுவையால் மயங்கிய கபாலம் ஆசை தீர உண்டது. மூன்றாவது கபலத்தை ஊட்டும் போது கீழே தவறவிட்டார் பார்வதி.

சுவையில் மயங்கிய கபாலம் அதனை உண்ண தரையிறங்கியது. அப்பொழுது அன்னை பரமேஸ்வரி கபாலத்தை காலால் தரையில் அழுத்தினார். உடனே சிவபெருமான் பிரம்மகத்தி தோஷம் நீங்கி சுயநிலையை அடைந்தார்.

இதனை ஞாபகார்த்தம் கூறும் வகையில் மயானம் தோறும் மயானக் கொள்ளை திருவிழா கொண்டாடப்படுகிறது.

புராணக்கதை – 2

மயானக் கொள்ளை திருவிழா தொடர்பான இன்னொரு புராணக் கதையும் உண்டு. படைப்புக்கு காரணமான பிரம்மா ஆரம்பத்தில் ஐந்து தலை கொண்டவர். பிரம்மனின் ஐந்து தலையைக் கொண்ட பார்வதி சிவன் என அவரை வழிபட அவர் அதைப்பார்த்து நகைத்தார்.

இதனால் கோவம் கொண்ட சிவன் பிரம்மாவின் தலையைக் கொய்தார். இதன் காரணமாக சிவன் பிரம்மகத்தி தோஷம் பீடிக்கப்பட்டார். அவரின் கையில் ஒட்டிய கபாலத்தை பிச்சை பாத்திரமாக ஏந்தி சிவன் பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டது.

அதில் போடப்படும் உணவை எல்லாம் கபாலம் விழுங்கி விட்டதால் உலகுக்கே படி அளக்கும் அரசுக்கே உணவு கிடைக்கவில்லை.

பின் பார்வதி சிவன் கையில் இருந்த கபாலத்தை கீழே விழச்செய்தார். பின் கபாலத்தை தரையில் அழுத்தினார். இதன் காரணமாகவே மயானக் கொள்ளை திருவிழா என்று கூறப்படுகிறது.

திருவிழா இடம்பெறும் முறை

பார்வதி பிரம்ம கபாலத்திற்கு சூரையிட்டதால் மாசி மாதம் தோறும் அமாவாசையன்று மயானத்தில் சூரையிட்டு இத்திருவிழா கொண்டாடப்படும்.

இதன் மூலம் அனைத்து பேய் பிசாசகளுக்கும் அன்னை சூரையிடுகிறார் என்பது ஐதீகம் என்று அன்னைக்கு கோவிலில் அனைத்து பூசைகளும் இடம்பெற்ற பின்பு

அன்னை தேரில் ஏறி காட்டேரி, பாவாடராயன், அங்காளி வேடமிட்டவர்கள் என்ற அனைவருடனும் மயானத்திற்கு சென்று பூசைகள் நடைபெற்று கிழங்கு, அவரை, முட்டை, சாதம் என அவரவர்கள் கொண்டு வந்துள்ள அனைத்து பொருட்களையும் கலந்து பூனையாக வீசுகின்றனர்.

அதை எடுத்து சென்று மக்கள் தம் இல்லங்களில் வைத்து உண்பர். இதனால் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள தோஷம் நீங்கும் என்பது ஐதீகம் அவர்களை சூழ்ந்துள்ள திருஷ்டி போன்றன அவர்களை விட்டு நீங்கும் என்பது நம்பிக்கை.

இவ்வழிபாடு பிரதேசத்திற்கு பிரதேசம் மாறுபட்டு இத்திருவிழா கொண்டாடப்படுகின்றது. பார்வதிக்கு உரிய சிறப்பான விழாக்களில் இதுவும் ஒன்றாக இன்றுவரை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

You May Also Like :
கண்ணப்ப நாயனார் வாழ்க்கை வரலாறு
மாணிக்கவாசகர் வாழ்க்கை வரலாறு