இந்தபதிவில் “வயல் காட்சி கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு(02) கட்டுரைகளை காணலாம்.
இயற்கை அன்னையின் கொடையாக விளங்கும் வயல்களின் அழகு மனதிற்கு அமைதியையும் நிறைவையும் பெற்றுத் தருகின்றது.
வயல் காட்சி கட்டுரை – 1
மனிதர்களிற்கு அன்றாட உணவை அளிப்பதில் நெல் வயல்களிற்கு முக்கிய பங்குண்டு. வயல் வெளிகளில் விளைந்த நெல்மணிகளையே உமிநீக்கி அரிசியாக உணவிற்கு பயன்படுத்துகின்றோம்.
இவ்வாறு நமக்கு உணவினை அள்ளித்தரும் வயல்வெளிகளை கண்டு களித்தது என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம் ஆகும். எனது பள்ளி விடுமுறையின் போது கிராமத்தில் உள்ள பாட்டியை பார்பதற்காக சென்றிருந்தேன்.
அவர்களின் வீடு பரந்து விரிந்த வயல்வெளிகளின் நடுவில் அமைந்திருந்தது. வாழ்வில் முதன்முறையாக இவ்வாறு வயல்வெளிகளை பார்த்ததும் மனதிற்குள் உற்சாகமாக உணர்ந்தேன்.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை பசேலென்று எல்லையற்று நீண்டிருந்த வயல்வெளிகளும் அவற்றின் முடிவில் தூரத்தே தெரிந்த காடுகளும் என் மனதை கொள்ளை கொண்டன.
அதனிடையே ஆங்காங்கே உயர்ந்து வளர்ந்திருந்த மரங்கள் தம்முடைய கிளைகளை அசைத்து என்னை வரவேற்றன. வயல்வெளிகளினூடே தங்கு தடையின்றி சிலு சிலுவென வீசிய காற்று மேனியை நடுங்கச் செய்தது.
காற்றில் அசைந்தாடிய நெல்மணிகள் சரசரவென ஒலியெழுப்பின. ஒவ்வொரு வயல்களிற்கு நடுவிலும் சிறு சிறு குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன. இரவுநேரங்களில் மனிதர்கள் அவற்றில் அமர்ந்து வயல்களை பாதுகாப்பார்கள் என பாட்டி என்னிடம் கூறினார்.
வயல்களிற்கிடையில் ஆண் பெண் உருவங்களில் பொம்மைகள் வைக்கப்பட்டிருந்தன. வரம்புகளில் அமர்ந்திருந்த ஓரிண்டு கொக்குகளும் நெல்மணிகளை திருட வந்த பறவைகளும் அவற்றை பார்த்துவிட்டு தூரப்பறந்தன.
வயல் வெளிகளினூடே வெட்டப்பட்டிருந்த வாய்க்கால்களினூடே ஆற்று நீர் சலசலத்து ஓடியது. இயற்கை அன்னையின் கொடையாக விளங்கிய அந்த அழகு மனதிற்கு அமைதியையும் நிறைவையும் பெற்றுத் தந்தது.
என் வாழ்ந்நாளில் மறக்கமுடியாத பயணங்களுள் இதுவும் ஒன்றாகும்.
வயல் காட்சி கட்டுரை – 2
வயலும் வயல்சார்ந்த இடங்களும் இயற்கையின் கொடைகள் நிறையப் பெற்றவையாகவும், பார்ப்பதற்கு கண்ணிற்கினிய காட்சிகளை உள்ளடக்கியவையாகவும் காணப்படும்.
பச்சைக் கம்பளம் விரித்தாற்போல் பரந்து விரிந்த வயல்வெளிகளும், அவற்றினூடே வீசும் இளங்காற்றில் அசைந்தாடும் நெல்மணிகளும் காண்போர் மனதை கொள்ளை கொள்ள செய்யும் காட்சிகளாகும்.
அந்த அழகான காட்சியை கண்டுகளிப்பதற்காக தந்தை என்னை கிராமத்திற்கு அழைத்துச் சென்றார். நாங்கள் சென்றபோது நாற்றுகள் பயிராகி அவற்றில் நெல்மணிகள் விளைந்து முற்றி அறுவடைக்கு தயாராகி நின்றன.
ஆங்காங்கே பச்சை மற்றும் மஞ்சள் நிறங்களில் வயல்வெளிகள் பரந்திருந்தன. ஆங்காங்கே சில வயல்களில் நன்றாக விளைந்த நெல்மணிகள் அறுவடை செய்யப்பட்டுக் கொண்டிருந்தன.
இதுவரை அதனை பார்த்திராத நான் அதனை உன்னிப்பாக அவதானிக்கத் தொடங்கினேன். சில வயல்களில் மனிதர்களை பயன்படுத்தி மரபுவழியில் அறுவடை நடைபெற்றது.
மனிதர்கள் அரிவாள்களைப் பயன்படுத்தி நெல்மணிகளை அரிந்து கொண்டிருந்தார்கள். தமது களைப்பை போக்குவதற்காக கிராமிய இசைப்பாடல்களை பாடி ஆனந்தமாக தமது வேலையை செய்து கொண்டிருந்தார்கள்.
அவர்களின் சுறுசுறுப்பையும் வேலைப்பாங்கையும் பார்க்கும் போது மனதிற்கு உற்சாகமாக இருந்தது. இன்னும் சில வயல்களில் இயந்திரங்களைப் பயன்படுத்தி அறுவடை இடம்பெற்றுக் கொண்டிருந்தது.
வயல்வெளிகளிற்கு இடையில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள் வெயிலில் உலர்வதற்காக பரவி விடப்பட்டிருந்தன. மனிதர்கள் தத்தமது வேலைகளை முடிப்பதற்காக பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தனர்.
அவர்களின் கடின உழைப்பை பார்க்கும் போது நாம் உண்ணும் ஒவ்வொரு உணவுப்பருக்கைகளிலும் அவர்களின் வியர்வைத் துளிகள் மறைந்திருப்பதனை என்னால் உணர முடிந்தது.
எனவே இனிமேல் உணவை வீணாக்கக்கூடாது என்று உறுதி பூண்டவனாக வீடு திரும்பினேன்.
You May Also Like: |
---|
காலை காட்சி கட்டுரை |
அழகிய மாலை வானம் கட்டுரை |