இயற்கையை அழித்தால் இயற்கையோடு சேர்ந்து மனிதனும் பிற உயிரினங்களும் அழிவை சந்திக்க நேரிடும். இயற்கையை பாதுகாப்பது என்பது ஒவ்வொரு உயிர்களின் கடமையாகும்.
மனிதனால் தான் இயற்கை பெரும் அழிவை சந்தித்து வருகின்றது என்பது கசப்பான உண்மையாகும். அனைவரும் இயற்கையோடு இணைந்து வாழ பழகிக்கொள்ள வேண்டும்.
இயற்கை பாதுகாப்பு கட்டுரை தமிழ்
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- இயற்கைச் சூழல்
- இயற்கையின் சிறப்பு
- இயற்கை மாசடைதல்
- இயற்கையைப் பாதுகாக்கும் வழிமுறைகள்
- முடிவுரை
முன்னுரை
இயற்கை என்பது இறைவனால் அளிக்கப்பட்ட அற்புதமான படைப்பாகும். இயற்கை மனிதனுக்கு எண்ணிப்பார்க்க முடியாத அளவு பயன்களை தருகின்றது.
இயற்கையாகவே உருவாகியுள்ள நீர், நிலம், ஆகாயம், காற்று, நீர்வீழ்ச்சி, மலைகள் போன்ற அனைத்தும் எம்மைப் பிரம்மிக்க வைப்பவை ஆகும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த அற்புதமான இயற்கையை நாம் பாதுகாக்க வேண்டும். இதனை இக்கட்டுரையில் காண்போம்.
இயற்கைச் சூழல்
இவ்வுலகில் வாழும் அனைத்து உயிரினங்களுமே இயற்கையைச் சார்ந்தே வாழ்கின்றன. எனவே இயற்கையைக் காப்பது மிக அவசியமாகும்.
வாழ்வின் அனைத்து நிலைகளிலும் இயற்கையைப் பேண வேண்டும். இயற்கை மருத்துவம், இயற்கை வேளாண்மை, இயற்கை உணவு என இயற்கையோடு வாழும் வாழ்க்கை ஆரோக்கியமானதாக இருக்கும்.
இயற்கையின் சிறப்பு
பூமியானது பரந்து விரிந்த நிலப் பரப்புடன் அதனைச்சூழ சமுத்திரங்களையும் பச்சைப்பசேலென நீண்டு வளர்ந்த மரங்கள், அடர்ந்த காடுகளையும் உயர்ந்து வளர்ந்த மலைகளையும், சலசலவென ஓடும் நதிகளையும், அழகிய நீல வானையும் கொண்டது.
உயிர் வாழ்வதற்கு இயற்கை வளங்களை அனுபவித்திடவும் இயற்கை வளங்கள் சிறப்பு பெற்றுள்ளன. நிலம், நீர், காற்று உட்பட பஞ்சபூதங்கள் மனித மற்று ஏனைய உயிரின வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்குகின்றன.
பச்சைப்பசேலென செழித்து வளரும் புல்வெளிகள், பூக்கள், நீர்வீழ்ச்சிகள் உட்பட அனைத்து இயற்கை வளங்களும் மன அமைதியை ஏற்படுத்துகின்றன.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இயற்கையானது அழிந்து விட்டால் மனித இனம் உட்பட ஏனைய அனைத்து உயிரினங்களும் அழிந்து விடும். எனவே இயற்கையைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும்.
இயற்கை மாசடைதல்
இன்றைய நவீன உலகில் மனித வாழ்க்கை முறைகளால் இயற்கை வளம் பெரிதும் மாசுபடுகிறது. தேவைகளுக்காகக் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. காடுகள் அழிக்கப்பட்டு குடியிருப்புக்கள் அமைக்கப்படுகின்றன.
தொழிற்சாலை கழிவுகளால் நீர் உட்பட நிலங்களும் மாசுபடுகின்றன. கழிவுப் பொருட்கள் கடலுடன் கலந்து பாதிப்படைகின்றது. உக்காத பொலித்தீன் பொருட்களைப் பயன்படுத்துவதால் நிலம் மாசடைகின்றது.
வேளாண்மையில் இரசாயன உரங்கள் பயன்படுத்துவதால் நிலம் நச்சுத்தன்மை அடைகின்றது. தொழிற்சாலைகள், அனல்மின் நிலையங்கள், விண்வெளி ஆய்வுகள் போன்றவற்றால் காற்று தூய்மையை இழக்கின்றது.
இயற்கையைப் பாதுகாக்கும் வழிமுறைகள்
இயற்கையை பாதுகாப்பது என்பது அனைத்து உலக மக்களினதும் கடமையாகும். இன்று உலக நாடுகள் ஒவ்வொன்றும் இயற்கையைப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. பல இயற்கை பாதுகாப்புச் சட்டங்களை விதித்து நடைமுறைப்படுத்துகின்றன.
உலகில் உள்ள இயற்கை வளங்களை பாதுகாப்பதற்காக 1980ஆம் ஆண்டு பன்னாட்டு பாதுகாப்புச் சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
மனிதர்கள் ஒவ்வொருவரும் இயற்கை வளத்தினை வீணடிக்காது தேவைக்கேற்ப கட்டுப்பாட்டுடன் பயன்படுத்த வேண்டும். காடுகளை அழிப்பதற்கு பதிலாக மரக்கன்றுகளை நாட்டி பூமியைப் பசுமையாக்க வேண்டும்.
கழிவுகளை குறைத்தல், மற்றும் கழிவுப் பொருட்களை கடலுடன் அல்லது வேறு இயற்கை நீர்நிலைகளிலும் கலக்காது உரிய முறையில் அதனை அகற்ற வேண்டும். கழிவுப்பொருட்களை மீள பயன்படுத்தும் முறையை பின்பற்ற வேண்டும்.
முடிவுரை
இயற்கையின்றி மனிதன் இல்லை. எனவே இயற்கையோடு இணைந்த இனிய வாழ்விற்கு நம்மை ஆயத்தம் செய்வோம். செயற்கை அதிகம் நிறைந்த இவ்வுலகில் இயற்கை பெரிதும் பாதிப்பினை சந்தித்து வருகின்றது.
மன நிம்மதியுடன் அனைவரும் வாழ வேண்டுமெனில் இயற்கையைப் பாதுகாப்பது மிகமிக அவசியமாகும். இயற்கையைப் பாதுகாக்காமல் நாம் செயற்படுவோமாயின் இயற்கையோடு மனித இனமும் அழிவினையே சந்திக்கும்.
எனவே இறைவனின் உன்னத படைப்பான இயற்கையைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினரும் பயன் பெறும் வகையில் இயற்கையை உயிர்ப்போடு வைத்திருப்பது எமது கடமையாகும்.
இதுவே காலத்தின் தேவைபாடுமாகும். அனைவரும் ஒன்றிணைந்து இயற்கையைப் பாதுகாத்து வளம் பெறுவோமாக.
You May Also Like: