சர்வதேச சதுரங்க தினம் | ஜூலை 20 |
International Chess Day | July 20 |
சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பு நிறுவப்பட்ட நாளின் நினைவாகவே ஒவ்வொரு வருடமும் யூலை 20 ஆம் நாள் உலக சதுரங்க தினம் கொண்டாடப்படுகின்றது.
உலகில் பல விளையாட்டுகள் காணப்படுகின்ற போதிலும் கூட, உள்ளக விளையாட்டான சதுரங்கம் முக்கியத்துவமான விளையாட்டுக்களில் ஒன்றாக புராதன காலங்கள் தொட்டு இன்றுவரை மதிக்கப்படுகின்றது.
முந்திய காலங்களில் “அரசர்களின் விளையாட்டு” என சதுரங்க விளையாட்டு வர்ணிக்கப்படுகின்றது.
நவீன காலத்தில் இணையத்தளங்களிலும் சதுரங்கம் ஆடப்படுவதுண்டு. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவர்களும் கற்றுக்கொண்டு விளையாடக் கூடிய விளையாட்டாகும்.
மற்ற விளையாட்டை விளையாடக்கூடியவர்கள் வயதானதும் ஓய்வெடுத்துக் கொள்கின்றனர். சதுரங்க விளையாட்டில் அவ்வாறான ஓய்வெடுப்பு அவசியமாவதில்லை.
உலக சதுரங்க தினம் உருவாக்கப்பட்டதன் நோக்கம்
பிரான்சின் பாரிஸ் நகரில் யூலை 20 1924 ஆண்டு ஒலிம்பிக் போட்டி தொடங்கியது. அதே நாளில்தான் உலக சதுரங்க கூட்டமைப்பும் (FIDE) நிறுவப்பட்டது. 42 வருடங்கள் கழித்து 1966 ஆம் ஆண்டில் சர்வதேச சதுரங்க நாளாக அந்த அமைப்பு அறிவித்தது.
சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பு நிறுவப்பட்ட நாளின் நினைவாகவே ஒவ்வொரு வருடமும் யூலை 20 ஆம் நாள் உலக சதுரங்க தினம் கொண்டாடப்படுகின்றது.
உடல் வலிமையை அதிகரிக்க உலகில் பல விளையாட்டுகள் காணப்பட்ட போதிலும் கூட, அறிவாற்றல் நிறைந்த விளையாட்டுக்கள் மிகக் குறைந்தளவிலேயே இருக்கின்றன. அவற்றில் முதன்மையானது சதுரங்க விளையாட்டாகும். சதுரங்க விளையாட்டானது மூளைக்கு வேலைத்தரும் ஒரு விளையாட்டாகக் கருதப்படுகின்றது.
எனவே சதுரங்க விளையாட்டு தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி அதனை ஊக்கப்படுத்துவதனை நோக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
சதுரங்க விளையாட்டின் தோற்ற வரலாறு
சதுரங்கம் 1500 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட விளையாட்டு ஆகும். சதுரங்க விளையாட்டின் ஆரம்பம் பற்றி பல கருத்துக்கள் நிலவினாலும் குப்தர் கால பகுதியான ஆறாம் நூற்றாண்டின் பின்னரான கால கட்டங்களிலிருந்தே இந்தியாவில் விளையாடப்பட்டுவந்த விளையாட்டாகவே பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.
எனவே, சதுரங்கத்தின் ஆரம்பம் இந்தியாவில் என்று கூறலாம். ஆரம்பத்தில் சத்ரங் என்ற பெயரிலேயே தோன்றியது. ஒன்பதாம் நூற்றாண்டு காலப்பகுதியில் ரஷ்யாவுக்கும் நுழைந்த இவ்விளையாட்டு ரஷ்யர்களால் பெரிதும் விரும்பி விளையாடப்பட்டது.
பத்தாம் நூற்றாண்டில் முஸ்லிம்களால் ஸ்பெயினில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஸ்பெயின் நாட்டவரான லூயிஸ் ராமிரேஸ் (Luis Ramirez) என்பவரே முதன் முதலில் சதுரங்க விளையாட்டை எப்படி விளையாட வேண்டும் என்பது பற்றி Repetition of Love and the Art of Playing Chess என்ற நூலில் எழுதினார். இந்நூலானது இன்றளவிலும் போற்றப்படுகிறது.
பின்னர் 11 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தை எட்டியது. 15 ஆம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதியில் இத்தாலி நாட்டிற்கு விரிவடைந்தது.
இங்குதான் காய்களின் நகர்த்தலுக்கான வரைமுறை பயன்பாட்டிற்கு வந்தது. இன்று உலகின் பல நாடுகளிலும் சதுரங்க விளையாட்டு தனக்கான ஒரு இடத்தினை பிடித்துள்ளது.
சதுரங்க விளையாட்டின் நன்மைகள்
சதுரங்க விளையாட்டை தினமும் விளையாடி வந்தால் கற்றுக் கொள்ளக்கூடிய திறன் அதிகரிக்கும்.
தர்க்க ரீதியாக சிந்திக்கும் மற்றும் யோசிக்கும் திறன் அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. சதுரங்க விளையாட்டானது மனித பகுப்பாய்வுத் திறனை விருத்தி செய்கின்றது.
தினமும் சதுரங்கத்தினை விளையாடுபவர்கள் எதனையும் திட்டமிட்டுச் செயற்படுத்தக் கூடியவர்களாக இருப்பர். இவ்விளையாட்டினால் குழைந்தகளுக்கு கற்பனைத் திறனும், படைப்பாற்றலும் வளர்ச்சியடைகின்றது.
நாகரீகமாக விளையாடக்கூடிய சதுரங்க விளையாட்டை தன்னம்பிக்கையுடனும், தெளிவான சிந்தனையுடனும் விளையாடத் தொடங்கிவிட்டால் ஓய்வு நேரமும் விடுமுறை நாட்களும் பயனுள்ளதாக மாறிவிடும்.
You May Also Like : |
---|
உலக கூட்டுறவு தினம் |
உலக முதியோர் தினம் |