இந்த பதிவில் நாளைய தலைவர்களான “சிறுவர் உரிமைகள் கட்டுரை” பதிவை காணலாம்.
சிறுவர்களின் ஆளுமை, விழுமியங்கள் என்பவற்றிற்கு முன்னுரிமை கொடுக்கப்படல் அவசியம். இது சமூகத்தின் கடமையாகும்.
சிறுவர் உரிமைகள் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- உலக சிறுவர்கள் தினம்
- இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்
- சிறுவர்களுக்கான உரிமைகள்
- இன்றைய சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்
- முடிவுரை
முன்னுரை
உலகில் மனிதனாகப் பிறந்து மனிதனாக வாழ வேண்டுமென்றால் அதற்கு மனித உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அந்தவகையிலே சிறுபராயத்தில் வழங்கப்படும் பாதுகாப்பே அவர்களை எதிர்காலத்துக்கு உரியவர்களாக மாற்றுகின்றது.
சர்வதேச சிறுவர்கள் சாசனத்தின் முதலாவது சரத்தின்படி ஆண், பெண் வேறுபாடின்றி பதினெட்டு வயதிற்குக் கீழ்ப்பட்ட எந்த ஒரு பிரஜையும் சிறுவர்களேயாவர்.
இன்று நாட்டின் முத்துக்களாக மிளிரும் சிறுவர்கள் நாட்டின் பெறுமதி மிக்க சொத்துக்களாவர். இத்தகைய சிறுவர்களின் உரிமைகள் பற்றி இக்கட்டுரையில் நோக்கலாம்.
உலக சிறுவர்கள் தினம்
சிறுவர்களை மகிழ்விக்கும் நோக்குடனும் அவர்களது உரிமையை பாதுகாக்கும் நோக்குடனும் அவர்களுக்கென்று ஓர் தினம் வகுக்கப்பட்டு உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகின்றது.
அத்தினம் தான் உலக சிறுவர் தினம் ஆகும். சர்வதேச சிறுவர் தினம் ஒக்டோபர் முதலாம் திகதி கொண்டாடப்படுகின்றது.
1954-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை சிறுவர் தினம் சர்வதேச ரீதியாக கொண்டாட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது. இது 1990 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி சர்வதேச ரீதியில் அமுலுக்கு கொண்டு வரப்பட்டது.
இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்
நாட்டின் எதிர்காலம் சிறப்பாக அமையவும் சிறப்பான சூழ்நிலை உருவாகவும் வேண்டுமானால் சிறுவர்களை சரியான தடத்தில் வழி நடத்தப்பட வேண்டியது அவசியமாகும்.
எதிர்கால உலகின் தலைவர்களாகவும் இந்த உலகைக் காப்பதற்கு தயாராகும் பாதுகாவலர்களாக இருப்பவர்கள் சிறுவர்களே.
எதிர்கால உலகின் சவால்களை வெற்றி கொள்ளக்கூடிய நற்பண்பும், அறிவும் நிறைந்த பலம்மிக்க பிள்ளையை நாட்டுக்கு வழங்குவதற்காக ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு சிறுவர் தொடர்பான வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றது.
காரணம் இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் என்பது ஒவ்வொரு நாடும் உணர்ந்து இருப்பதேயாலாகும்.
சிறுவர்களுக்கான உரிமைகள்
சிறுவர்களுக்கென பல்வேறு உரிமைகள் ஒவ்வொரு நாடுகளிலும் வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் உயிர் வாழ்வதற்கும், அபிவிருத்திக்குமான உரிமை, போதிய கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமை,
பெற்றோரைத் தெரிந்து கொள்வதற்கும் அவர்களுக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கும் உரிமை, பாலியல் வன்புணர்வுகளிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான உரிமை என பல உரிமைகள் சிறுவர்களுக்கு உண்டு.
இன்றைய சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்
சிறுவர்கள் முகங்கொடுத்து வருகின்ற சமகால அச்சுறுத்தல்களால் பெரும்பாலானவை அவர்களை உடல், உள, ரீதியான பாதிப்புக்களுக்கு உள்ளாக்குகின்றனர்.
சிறுவர்களைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. சிறுவர்கள் எதிர்கொள்ளும் மிக மோசமான அச்சுறுத்தல்களில் இதுவும் ஒன்றாகும்.
பாடசாலைக்குச் செல்வதற்கும் கல்வியைத் தொடர்வதற்கும் தடையாக வறுமை அமைவதால் உலகில் பல சிறுவர்கள் கடைகள், சந்தைகள், வீடுகளில் பகுதி நேர வேலையாட்களாக இருந்து உழைத்துக் கல்வியைத் தொடர்கிறார்கள் மேலும் சிலர் கல்வி கற்பதை இடைநிறுத்தி வேலைக்குச் செல்கின்றனர்.
முடிவுரை
சிறார்களின் உரிமைகள் பேணப்பட்டு தேவைகள் நிறைவேற்றப்பட்டு உரிய முறையில் நடாத்தப்படும் போது மட்டுமே இவர்களின் எதிர்காலம் ஒளிமயமானதாக அமையும்.
எனவே இவர்களின் ஆளுமை, விழுமியங்கள் என்பவற்றிற்கு முன்னுரிமை கொடுக்கப்படல் அவசியம். இது சமூகத்தின் கடனாகும்.
சிறுவர் உரிமைகளைப் பாதுகாத்து அவர்களை நன்முறையில் வழிநடத்தி மகத்துவம் மிக்க சிறுவர் சமுதாயத்தை உருவாக்குவோமாக!
You May Also Like : |
---|
சிறுவர் துஷ்பிரயோகம் கட்டுரை |
இளைஞர்கள் பற்றிய கட்டுரை |