இவ்வுலகில் நாம் ஆரோக்கியமாகவும் சிறப்பாகவும் வாழ்வதற்கு சுற்றுச்சூழலை பாதுகாப்புடன் பேணுதல் அவசியமாகும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாணவர்களின் பங்கு கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- சுற்றுச்சூழல் என்பது
- சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம்
- சுற்றுச்சூழல் மாசடைவதற்கான காரணங்கள்
- சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாணவர்களின் பங்கு
- முடிவுரை
முன்னுரை
சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியது இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரினதும் கடமையாகும். எம் வாழ்வு சீர் பெற வேண்டுமாயின் எமது சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருப்பது அவசியமானதாகும்.
சுற்றுச்சூழல் என்பது
சுற்றுச்சூழல் எனப்படுவது எம்மை சுற்றியுள்ள இயற்கையான நிலப்பரப்புக்களான காடுகள், மலைகள், கடல்கள் போன்றவைகளே ஆகும். இத்தகைய சுற்றுச்சூழலில் தான் மனிதர்களாகிய நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
நாம் வாழ்வதற்கான சுத்தமான காற்றானது சுற்றுச்சூழலில் இருந்தே கிடைக்கப் பெறுகின்றது. இக்காற்றின் தூய்மையை பேணிப் பாதுகாக்காவிடின் எம்மால் நிரந்தரமாக சுவாசிக்க முடியாத ஒரு நிலையே காணப்படும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம்
நாம் மட்டுமல்லாது எதிர்கால சந்ததியினரும் ஆரோக்கியமாக இந்த உலகில் வாழ்வதற்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பானது அவசியமாகும்.
மேலும் இந்த உலகில் மனிதர்கள் மாத்திரமன்றி பல்லாயிரக் கணக்கான உயிரினங்கள் வாழ்ந்து கொண்டிருப்பது சுற்றுச்சூழலை சார்ந்தே ஆகும். எனவே இத்தகைய சுற்றுச்சூழலை மாசடையச் செய்து உயிரினங்களை அழிக்காது சூழலை பாதுகாப்பது அவசியமானதாகும்.
சுற்றுச்சூழலானது மாசடைதலின் காரணமாக பல்வேறு நோய்கள் எம்மை ஆட்கொள்ளும். இத்தகைய கொடிய நோயிலிருந்து விடுபட்டு அனைவரும் சிறப்புற வாழ்வதற்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பே சிறந்ததாகும். அது மாத்திரமல்லாது ஆரோக்கியமான வாழ்விற்கு வழி செய்வதும் சுத்தமான சுற்றுச்சூழலே ஆகும்.
சுற்றுச்சூழல் மாசடைவதற்கான காரணங்கள்
அதிகரித்து வரும் சனத்தொகை பெருக்கத்தின் காரணமாக இன்று சூழலானது பல்வேறு வகையில் மாசடைந்து கொண்டே வருகின்றது.
அதாவது வாகன பயன்பாட்டின் காரணமாக அதன் நச்சுப் புகைகள் சூழலோடு கலந்து பல்வேறு நோய் நிலைக்கு எம்மை ஆளாக்குகின்றது. அதே போன்று குளங்கள், ஏரிகள், கடல்கள் போன்றவற்றில் கழிவுகளை இடுவதனூடாக நீரானது மாசடைந்து எம்மை பாதிப்புக்குள்ளாக்குகின்றது.
பல்வேறு இரசாயனப் பொருட்களின் பயன்பாடு, நச்சு வெடி மருந்துகளின் பயன்பாடு, காடுகளை அழித்து பல்வேறு கட்டிடங்களை அமைத்தல், பிளாஸ்டிக் பாவனை, குளோரோ புளோரோ காபனின் செயற்பாடு என பல்வேறுபட்ட காரணங்களினால் இன்று சுற்றுச்சூழலானது மாசடைந்து கொண்டு வருகின்றது.
இவ்வாறு சூழலானது மாசுபட்டு கொண்டே வருமாயின் எம்மால் இவ்வுலகில் வாழ முடியாத ஒரு நிலையே எதிர்காலத்தில் ஏற்படும்.
சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மாணவர்களின் பங்கு
எமக்கு கிடைக்கப் பெற்ற இயற்கையான வரமே சுற்றுச்சூழலாகும். இத்தகைய சுற்றுச்சூழலை பாதுகாப்பது அனைவரினதும் கடமையாகும். அந்த வகையில் இதனை பாதுகாப்பதில் மாணவர்களின் பங்கு அளப்பரியதாகவே காணப்படுகின்றன.
ஏனெனில் மாணவர்களுக்கு சூழல் சார்ந்த அறிவானது கற்றல் செயற்பாட்டின் மூலமாக ஏனையோரை விடவும் அதிகமாகவே காணப்படுகின்றது எனலாம். அந்த வகையில் மாணவர்களாகியவர்கள் சூழலை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் சுற்றுச்சூழலை சிறப்புற பாதுகாக்க முடியும்.
அதாவது முறையாக குப்பைகளை அகற்றுதல், பிளாஸ்டிக் பாவனைகளின் செயற்பாட்டை குறைத்தல், பாடசாலைகளில் மற்றும் தங்களுடைய வீடுகளில் ஒரு சிறு மரக்கன்றையேனும் நட்டல் என பல்வேறு சூழல்சார் விடயங்களை மேற்கொள்வதினூடாக சூழலை பாதுகாத்து கொள்ள முடியும்.
முடிவுரை
எனவேதான் பூமியின் அழகை பேணுவதில் பிரதான இடத்தை சுற்றுச்சூழலே வகிக்கின்றது. ஆகவே இத்தகைய சூழலை அனைவரும் பேணிப் பாதுகாப்பதோடு நின்று விடாமல் அதற்கான செயற்பாடுகளையும் மேற்கொள்ளுதல் வேண்டும்.
You May Also Like: