நீர் வளத்தை பாதுகாப்போம் கட்டுரை

neer valathai pathukappom katturai in tamil

மனிதனது அடிப்படைத் தேவைகளுள் ஒன்றே நீராகும். நீர் இன்றி அமையாது உலகு என்ற கூற்றிற்கிணங்க நீர் இல்லையாயின் இந்த உலகமே அழிந்த விடும் என்பதே உண்மையாகும். அத்தகையதொரு சிறப்பு மிக்க நீரை பாதுகாப்பாக பேணுதல் அனைவருடையதும் கடமையாகும்.

நீர் வளத்தை பாதுகாப்போம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • நீரின் முக்கியத்துவம்
  • நீரின் பயன்பாடுகள்
  • நீர் மாசடைவதற்கான காரணங்கள்
  • நீர் வளத்தை பாதுகாத்தல்
  • முடிவுரை

முன்னுரை

உயிர்கள் நிலைத்திருப்பதற்கு அவசியமானதொன்றே நீராகும். அதாவது உணவின்றி கூட வாழ முடியும் ஆனால் நீர் இன்றி மனிதர்களால் வாழவே முடியாது என்ற வகையில் நீரானது மனித வாழ்வில் இன்றியாமையாத ஒன்றாகவே காணப்படுகின்றது. இக்கட்டுரையில் இயற்கையின் கொடையான நீர் வளத்தை பாதுகாப்பது பற்றி பார்க்கலாம்.

நீரின் முக்கியத்துவம்

மனிதர்கள் மாத்திரமின்றி உயிரினங்களின் வாழ்விற்கும் அடிப்படையாக நீரே காணப்படுகிறது. அதே போன்று எமது அன்றாட வாழ்வில் பல்வேறு தேவைகளின் போது நீரே முக்கியத்துவம் பெறுகின்றது.

இப்பூமியானது 71 வீதம் நீராலும் 29 வீதம் நிலத்தாலும் உருவாகியுள்ளமை நீரின் முக்கியத்துவத்தினையே சுட்டி நிற்கின்றது. விவசாயம் முதல் மின்சாரம் வரை பல்வேறு தொழிற்பாடுகளானவை நீரின் மூலமாகவே இடம்பெறுகின்றன.

நீரின் பயன்பாடுகள்

நீரானது எமக்கு மாத்திரமின்றி மரங்கள், உயிரினங்கள் போன்றவற்றின் வாழ்விற்கும் அவசியமானதாகும். அதாவது குடிப்பதற்கு, குளிப்பதற்கு, சமையல் தேவைகளின் போது என பல்வேறு தேவைகளானவை நீரின் மூலமே இடம் பெறுகின்றன.

மேலும் பல்வேறு நீர்வாழ் உயிரினங்களின் வாழ்விடமாகவும் நீரே திகழ்கின்றது. இன்று நாம் ஆரோக்கியமாக காணப்படுகிறோம் என்றால் அதற்கான பிரதானமான காரணங்களில் ஒன்றாக நீரே அமைந்துள்ளது.

நீர் மாசடைவதற்கான காரணங்கள்

எமது உயிர் காக்கும் நீரானது இன்று பல்வேறு செயற்பாடுகளால் மாசடைந்து கொண்டே வருகின்றது. கடல் ஏரி, குளம், ஆறு என பல்வேறு நீர்நிலைகள் மனித செயற்பாடுகளின் காரணமாக அழிவிற்குட்பட்டு வருகின்றது.

அதாவது வீட்டுக்கழிவுகள், நெகிழியினுடைய கழிவுகள் போன்றவற்றை நீரில் இட்டு நீரின் தூய்மைத்தன்மையை அழிக்கின்றனர் இதன் காரணமாக நீரானது மாசடைகின்றது.

நிலத்தடி நீரையும் தேவைக்கு அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாகவும் நீர் வளமானது பாதிப்பிற்குட்பட்டு மாசடைவதோடு நீர் வாழ் உயிரினங்களின் அழிவிற்கும் இத்தகைய செயற்பாடுகளே காரணமாகின்றன.

நீர்வளத்தை பாதுகாத்தல்

நீரை பாதுகாப்பது இந்த உலகில் பிறந்த அனைவரதும் கடமையாகும் என்ற வகையில் இன்று ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22ம் திகதி உலக தண்ணீர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

மேலும் ஒவ்வொரு தனிமனிதனும் நீரின் மகத்துவத்தை உணர்ந்து நீரை பாதுகாப்பதற்கான நடைமுறைகளை பின்பற்றுதல் வேண்டும்.

அதாவது நெகிழிகளை உரிய முறையில் அகற்றல், தொழிற்சாலை கழிவுகளை நீரில் விடாது உரிய முறையில் அகற்றுதல், மரங்களை நடுதல், சிக்கனமான நீர்ப்பாசன திட்டத்தை மேற்கொள்ளல் என பல்வேறு நீர் பாதுகாப்பு முறைகளை பின்பற்றுவதினூடாகவே நீர் வளத்தை பாதுகாக்க முடியும்.

முடிவுரை

எமது எதிர்காலமானது வரண்ட பாலைவனமாகுவதை தடுப்பதற்கு நீரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அனைவரதும் கடமையாகும். நாம் நீரை வீண்விரயம் செய்யாது சிறந்த முறையில் நீர்வளத்தை பயன்படுத்த வேண்டும். மேலும் நீரின் தூய்மையினை பேணுதல் அனைவரதும் கடமையாகும்.

You May Also Like:

நீர் பாதுகாப்பு கட்டுரை

தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு கட்டுரை