இந்த பதிவில் “பாழடைந்த வீட்டின் சுயசரிதை கட்டுரை” பதிவை காணலாம்.
வீடு என்பது வெறும் கட்டடங்களையும் சுவர்களையும் மட்டும் குறிப்பதல்ல. மாறாக வீடுகளானவை மனிதர்களை மகிழ்வாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்கின்றன.
பாழடைந்த வீட்டின் சுயசரிதை கட்டுரை – 1
ஒவ்வொரு மனிதர்களும் தங்களது இரசனைக்கேற்பவும், தேவைக்கேற்பவும் வீடுகளை அமைத்து வாழ்வர். வீடு என்பது வெறும் கட்டடங்களையும் சுவர்களையும் மட்டும் குறிப்பதல்ல. மாறாக வீடுகளானவை மனிதர்களை மகிழ்வாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்கின்றன.
தற்போது பழுதடைந்து யாரும் தீண்டாதவனாக மிகவும் கவலையுடன் வாழும் நான், ஒரு பாழடைந்த வீடாவேன். என்னுடைய சோகமான கதையை உங்களுடன் பகிரப்போகின்றேன்.
இன்று உடைந்து கவனிப்பாரற்று காட்சி தரும் நான் சில தகாப்சங்கள் முன்பே கட்டப்பட்டவனாவேன். செங்கற்களும் சுண்ணாம்பு கலவையும் சேர்த்து கட்டப்பட்ட நான் குளிர்மையுடனும் அழகுடனும் காணப்பட்டேன்.
முன் பக்கத்தில் பலமக்கள் ஓய்வெடுக்கக் கூடியதான திண்ணையும், நடுவில் முற்றத்துடனும் கூடிய நாற்சார் வீடு என அழைக்கப்பட்டேன். ஆறு அறைகளையும், அழகிய சமையல் அறையையும் கொண்டு காணப்படுகின்றேன்.
மழை காலத்திலும் கோடை காலத்திலும் என்னுள்ளே சமமான வெப்பநிலையை பேணுமாறு சரியான கட்டுமானத்தைப் பயன்படுத்தி அமைத்தார்கள். என்னை கட்டுவித்த உரிமையாளர்கள் அவர்களின் இரசனைக்கேற்ப மிக அழகாக என்னை அலங்கரித்து வைத்திருந்தனர்.
என் உரிமையாளர் அவர்களின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என மூன்று தலைமுறை மனிதர்கள் மகிழ்ச்சியாக என்னுள்ளே வசித்து வந்தனர். நான் அவர்களுடைய சந்தோசம் துக்கம் அனைத்திலும் ஒரு அங்கமாக இருந்தேன்.
புயல், மழை என அனைத்திலும் இருந்து அவர்களுக்கு பாதுகாப்பளித்து மனநிறைவுடன் வாழ்ந்து வந்தேன். காலம் செல்ல என்னுள்ளே வசித்தவர்கள் ஒவ்வொருவராக வெளியூர்களிற்கு பயணப்படத் தொடங்கினர்.
இறுதியாக எஞ்சிய பெரியவரும் ஒருநாள் தீராத நோயினால் இறந்து போனார். ஆதனால் மிகுந்த மனவருத்தத்திற்கு உள்ளான நான் கைவிடப்பட்டவனாக கவனிப்பாரற்று விடப்பட்டேன்.
காலம் செல்ல செல்ல என்னுடைய சுவர்கள் இடிந்து உருக்குலைந்த நான் இன்று என்னுடைய நிலையை எண்ணி மிகுந்த மனவருத்தத்துடன் வாழ்ந்து வருகின்றேன்.
உடைந்த வீட்டின் சுயசரிதை – 2
ஒரு காலத்தின் கம்பீரமாக விளங்கிய என்னுடைய வாழ்க்கை நாளையோடு முடிவுக்கு வரப்போகின்றது. சுயநலமின்றி மற்றவர்களின் மகிழ்ச்சிக்காக வாழ்நாளெல்லாம் வெயிலிலும் மழையிலும் கடினமாக உழைத்த என்னை இடித்தழிக்கும் காலம் நெருங்கி விட்டது.
இங்த நவீன காலத்தில் அனைத்துமே நவீனமாக மாறிவரும் பொழுதிலே பழமையாக இருந்த என்னை யாரும் விரும்பப் போவதில்லை. வாழ்நாள் எல்லாம் மனிதர்களின் உற்ற நண்பனாக விளங்கிய எனது கதையை உங்களுக்கும் சொல்கின்றேன்.
ஊரின் மத்தில் உயர்ந்து விளங்கிய நானே இந்த ஊரின் மிகபெரிய வீடாவேன். அனைவராலும் வியந்து பார்க்கும் வகையில் இரு மாடிகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தேன்.
என்னுடைய முகப்பு கோபுரம் போன்றதொரு அமைப்பில் பார்ப்பதற்கு கம்பீரமான தோற்றத்தைக் கொண்டிருந்தேன். இந்த ஊரின் பணக்காரர் ஒருவர் அவரின் பணச் செழுமையைக் காட்டுவதற்காக என்னை அமைத்திருந்தார்.
காலையும் மாலையும் யாராவது ஒருவர் அவரது வீட்டிற்கு வந்தவண்ணம் இருப்பார்கள். அவர்களிடம் என்னை சுற்றிக் காட்டி எனது பெருமைகளை கூறிய வண்ணம் இருப்பார். அதனை எண்ணி மிகுந்த மகிழ்சியுடன் வாழ்ந்தேன்.
வீட்டில் வாழ்பவர்களிற்கு பாதுகாப்பு தருவதோடு, அவர்கள் வாழ்வதற்கு அமைதியான காற்றோட்டமிக்க இடத்தையையும் வழங்கினேன். பெருவெள்ளங்கள் ஏற்படும் போது அந்த ஊரிற்கே அடைக்கலம் தருபவனாக நான் விளங்கியமையால் அந்த ஊரிலுள்ள அனைவருமே என்னை நேசித்தனர்.
தீடீரென ஒருநாள் பெரும் மழையும் புயலும் அந்த ஊரை ஆக்கிரமித்தன. அதனால் அந்த ஊரிலுள்ள அனைத்து குடில்களும் மரங்களும் தூக்கி வீசப்பட்டன. எதிர்பாராத விதமாக பெருமரமொன்று என்மேல் விழுந்தது.
அதனால் என் முகப்பு முற்றாக இடிந்து வீழுந்ததோடு சுவர்களும் இடிந்து வீழுந்தன. இதனால் யாரிற்கும் எந்த கெடுதலும் ஏற்படாத போதும், வீட்டினர் என்னை வெறுத்து ஒதுக்கி விட்டு வேறு வீட்டிற்கு குடிபெயர்ந்தனர்.
யாருக்கும் எந்தவித தீங்கும் நினைத்திடாத என்னை அழித்து விட்டு நவீன வீடொன்றை கட்டுவதற்காக திட்டமிட்டனர். பழமையை பாதுகாக்க தெரிந்திடாத அவர்களை எண்ணி வருந்தியவனாக வாழ்ந்து வருகின்றேன்.
You May Also Like: |
---|
கிழிந்த புத்தகத்தின் சுயசரிதை கட்டுரை |
அழகிய மாலை வானம் கட்டுரை |