இந்த பதிவில் “மரம் தன் வரலாறு கூறுதல் கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு(02) கட்டுரைகளை காணலாம்.
இவ்வுலகின் உயிர்ப்பல்வகைமையை பேணுவதில் மரங்கள் வழங்கும் பங்களிப்பு அளவிட முடியாதது.
மரம் தன் வரலாறு கூறுதல் கட்டுரை – 1
ஆண்டாண்டு காலமாக இப்பூமியில் மனிதர்களின் வாழ்தகைமையை பேணிப்பாதுகாப்பதில் அளப்பரிய பங்காற்றுகின்ற நான் ஒரு மரமாவேன். நான் மனிதர்களிற்கு பல்வகையான நன்மைகளை வாரி வழங்குகின்றேன்.
மனிதர்களுக்கு தீங்கு பயக்கும் காபனீரொட்சைட் வாயுவை உள்ளெடுத்து ஒட்சிசனை வெளிவிடுவதனால் மனிதர்களின் சுவாச சுற்றோட்டத்திற்கு வழிவகை செய்கின்றேன். இப்பூமிப்பரப்பானது ஈரலிப்புடன் இருப்பதற்காக மழை வீழ்ச்சியை அதிகரிப்பதில் அதிக செல்வாக்கு செலுத்துகின்றேன்.
இவ்வுலகின் உயிர்ப்பல்வகைமையை பேணுவதில் நான் வழங்கும் பங்களிப்பு அளவிட முடியாதது. இத்தகைய சிறப்புகளை பெற்ற நான் என்னுடைய வரலாற்றை எடுத்தியம்புகின்றேன்.
பார்ப்பதற்கு பிரமாண்டமான தோற்றுத்துடன் காணப்படுகின்ற நான் இவ்வூரின் மிகப் பழமையான பெரிய மரமாவேன். கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் செழிப்பாக வாழ்கின்ற நான், மிகப்பெரியதொரு கூராடம் போன்ற தோற்றத்தை உடையவன்.
நூற்றுக்கணக்கான பறவைகளின் இருப்பிடமாக விளங்கும் நான், பெருவெயில் காலங்களில் மனிதர்களிற்கு நிழலை வாரி வழங்குவேன். அது மட்டுமின்றி பறவைகளிற்கு பழங்களையும், கால்நடைகளிற்கு இலைகுழைகளையும் உணவாக வழங்குவேன்.
இயற்கை சீற்றங்களான சூறாவளி, அடை மழை, கடுமையான வெயில் அனைத்தையும் தாங்கி விஸ்தாரமாய் காட்சி தரும் நான், மிகுந்த வைராக்கியமும் உறுதியும் மிக்கவனாவேன்.
அடர்ந்து விரிந்திருந்து என்னுடைய கிளைகளை மனிதர்கள் தங்கள் சுயலாபத்திறகாக வெட்டும் போது மிகுந்த மனவருத்தம் அடைவேன். இதனைத்தவிர மின்சார இணைப்புக்களை பொருத்தும் போதும் வீதிகளை அகட்டும் போதும் என்னை காயப்பபடுத்துவோரும் உள்ளனர்.
சில நேரங்களில் அதனை எண்ணி வருந்தினாலும், பலநேரங்களில் மற்றவர்களிற்கு பயன்தருவதை நினைத்து மனநிறைவும் மகிழ்ச்சியும் கொண்டவனாக வாழ்ந்து வருகின்றேன்.
மரம் தன் வரலாறு கூறுதல் கட்டுரை – 2
இன்று சிறு குற்றிகளாக வெட்டப்பட்டு சிதறிக் காணப்படும் நான் முன்னொரு காலத்தில் மிகவும் ஆனந்தமாக இருந்த கதையை கூறப்போகின்றேன். வீதியோரத்தில் செழித்து வளர்ந்திருந்த நான் வேம்பு மரமாவேன்.
காற்றினில் அசைந்தாடியபடி பச்சைப் பசேலென அழகாகக் காட்சி தருவேன். வீதியோரத்தில் வளர்ந்திருப்பதனால் அந்த வீதியால் பயணிக்கும் பாதசாரிகளும் பயணிகளும் தங்களுடைய பயணக் களைப்பு தீர என்னடியில் அமர்ந்து விட்டே செல்வார்கள்.
நான் மிகவும் மருத்துவக் குணம் வாய்ந்த ஒரு மரமாவேன். என்னில் உள்ள மூலிகைக் குணங்கள் காரணமாக நான் “சர்வரோக நிவாரணி” என அழைக்கப்பட்டு வருகின்றேன்.
என்னூடே வீசும் காற்று மிகவும் தூய்மையானதாகவும் கிருமித்தொற்றுக்கள் அற்றதாகவும் காணப்படும். அதனை சுவாசிப்போர் மிகுந்த ஆரோக்கியமாக வாழ்வர்.
வருடம் தோறும் பூத்துக் குலுங்கும் என்னுடைய பூக்களை பறிப்பதற்காக மக்கள் கூடுவர். என்னுடைய பூக்களைக் கொண்டு வடகம், பச்சடி போன்றன செய்து உணவாக பயன்படுத்துவர்.
என் பட்டைகளை வைத்து உருவாக்கும் கசாயம் காய்ச்சல், தடிமன் போன்ற வியாதிகளை ஒழிக்கவல்லது. இத்தகைய பெரும் பயன்களை அள்ளி வழங்கி மகிழ்வோடு வாழ்ந்த என்னுடைய வாழ்வில் புயல் வீசத் தொடங்கியது.
பிரமாண்டமாய் வீற்றிருந்த நான், வீதியால் செல்லும் வாகனங்களிற்கு இடைஞ்சலாய் இருப்பதாக பேசிக் கொண்டார்கள்.
திடீரென ஒரு நாள் சில மனிதர்கள் இணைந்து என்னை வெட்டி காயப்படுத்தத் தொடங்கினர். என்னை வெட்ட வேண்டாமென கெஞ்சிய என் குரலை கவனத்தில் கொள்ளாமல் என்னை சரமாரியாக வெட்டினார்கள்.
மனிதர்களின் அந்த செயலை பார்க்கும் போது துன்பத்திலும் சிரிக்கத் தோன்றியது. என் வாழ்நாளேல்லாம் அவர்களிற்கு புரிந்த நற்பயனை எண்ணாமல் என்னை அழித்தொழித்த அவர்களின் அறியாமை எண்ணி கோபம் கொண்டவாக வாழ்ந்து வருகின்றேன்.
You May Also Like: |
---|
கிழிந்த புத்தகத்தின் சுயசரிதை கட்டுரை |
நான் ஒரு கிளி கட்டுரை |