இந்த பதிவில் நுகர்வின் போது அவசியமான “நுகர்வோர் விழிப்புணர்வு கட்டுரை” பதிவை காணலாம்.
மனித வாழ்வில் மனிதனும் நுகர்வும் இரண்டறக் கலந்தேயுள்ளது. நுகர்வின் போது நாம் தெரிந்தே ஏமாற்றப்படுவது பொறுக்க முடியாத குற்றமாகும்.
நுகர்வோர் விழிப்புணர்வு கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- நுகர்வோர் என்போர்
- நுகர்வோரின் உரிமைகள்
- நுகர்வோர் விழிப்புணர்வின் அவசியம்.
- நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்
- முடிவுரை
முன்னுரை
இயந்திர கதியில் இயங்கிக் கொண்டிருக்கும் நவீன உலகில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். அத்தகைய வாழ்வியலில் மனிதனுக்கு நுகர்வு இன்றியமையாததாகவுள்ளது.
மனித வாழ்வில் மனிதனும் நுகர்வும் இரண்டறக் கலந்தேயுள்ளது. நாம் நம், அறியாமையினால் ஏமாறுவது ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகும். ஆனால் நாம் தெரிந்தே ஏமாற்றப்படுவது பொறுக்க முடியாத குற்றமாக கருதப்படுகிறது.
நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 24-ந் தேதி “தேசிய நுகர்வோர் உரிமை தினம்” கடைப்பிடிக்கப்படுகின்றது.
நுகர்வோராகிய நாம், மிகுந்த விழிப்புடனும், எச்சரிக்கையுடனும், மற்றவரால் ஏமாற்றப்படாமலும் இருத்தல் அவசியம். இத்தகைய நுகர்வோர் விழிப்புணர்வு பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
நுகர்வோர் என்போர்
தன்னுடைய விருப்பங்களையும், தேவைகளையும் திருப்திகரமாக பூர்த்தி செய்துக் கொள்ளத் தேவையான பொருட்களையும், பிற சேவைகளையும் பயன்படுத்துவோர் நுகர்வோர் எனப்படுவர். நுகர்வோர் என்பது ஒரு வகை சமூக அமைப்பு என்றும் கூறலாம்.
நுகர்வோரின் உரிமைகள்
உணவுப் பொருட்கள் முதல் மருத்துவம், போக்குவரத்து, பயிற்சி வகுப்பு, வேலை போன்ற அனைத்திலும், ‘நுகர்வோர் உரிமைகள்’ மூலம் நம்மால் தீர்வு பெற முடியும்.
நுகர்வோர் உரிமைகளாகப் பல உள்ளன. பாதுகாப்புக்கான உரிமை, தகவல் தெரிவிக்கும் உரிமை, தேர்வு செய்யும் உரிமை, கேட்க உரிமை, பரிகாரம் தேடும் உரிமை, நுகர்வோர் விழிப்புணர்வுக்கான உரிமை போன்றவற்றைக் கூறலாம்.
நியாயமற்ற அல்லது கட்டுப்படுத்தப்பட்ட வர்த்தக நடைமுறைகளுக்கு எதிராக தீர்வு காண உரிமையுண்டு.
நுகர்வோர் விழிப்புணர்வின் அவசியம்
பொதுமக்கள் பலர் பொருட்களை வாங்கும் போது அப்பொருளின் காலாவதியாகும் திகதி, உற்பத்தித் திகதி, போன்றவற்றைக் கவனிப்பதில்லை, மற்றும் ஐ.எஸ்.ஐ. முத்திரை அல்லது அக்மார்க் முத்திரை உள்ளதா எனப்பதனையும் கவனிப்பதில்லை.
பொதுமக்களின் இந்த அறியாமையை சில வியாபாரிகள் பயன்படுத்தி தங்களது பொருள்களை விற்பனை செய்து விடுகிறார்கள். எனவே, நுகர்வோர் விழிப்புணர்வு என்பது மிகவும் அவசியமாகிறது.
பொருளின் தரம், எடை, அளவு, தூய்மை போன்றவற்றில் குறைபாடு காணப்படும் இதனால் நோய்கள் ஏற்பட்டு ஆரோக்கியம் பாதிப்படையலாம். இதனைத் தடுப்பதற்கு நுகர்வோர் விழிப்புணர்வு அவசியமாகும்.
நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் செய்யும் முன்னர் வாங்கிய பொருள்களுக்கான பற்று சீட்டை அவசியம் வைத்திருக்க வேண்டும் என்பதனையும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்
இந்தியாவில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமானது ஜூலை 1, 1987 முதல் அமலுக்கு வந்தது.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமென்பது நுகர்வோர் பிரச்சனைகள், சேவை குறைபாடு, வணிக நடைமுறை, நேர்மையற்ற வணிகமுறை போன்றவற்றிற்கு தீர்வு தரும் சட்டமாக உள்ளது.
நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் முக்கிய குறிக்கோள் நுகர்வோரின் நலனைப் பாதுகாப்பதாகும்.
முடிவுரை
நுகர்வோர் விழிப்புணர்வாக இருந்தால் மட்டுமே ஏமாற்றப்பட மாட்டார்கள். இல்லையெனில் தரமற்ற பொருட்கள், எடை குறைவான பொருட்கள் போன்றவற்றை வாங்க வேண்டிய நிலை ஏற்படும்.
இதனால் பணம் வீணாகச் செலவாகுவதுடன், தரமற்ற உணவுப் பொருட்களால் நோய்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்புண்டு. எனவே நுகர்வோர் விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே இவற்றினைத் தடுக்க முடியும்.
You May Also Like: |
---|
நுகர்வோர் பாதுகாப்பு பற்றிய கட்டுரை |
மருத்துவ துறையின் வளர்ச்சி கட்டுரை |