இந்த பதிவில் “போதை அழிவின் பாதை கட்டுரை” பதிவை காணலாம்.
நமது சமுதாயத்தை மாசுபடுத்தும் போதை பொருட்கள் எதுவும் இல்லாத உலகம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவு சிறந்ததாக இருக்கும்.
போதை அழிவின் பாதை கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- தீயோரின் பாதை
- போதையின் பங்கு
- இளையோரின் மாற்றம்
- போதையற்ற உலகம்
- முடிவுரை
முன்னுரை
“முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்று கூறுவுதனை போல இன்று நமது சமூகம் போதை எனும் அரக்கனின் பிடியில் அகப்பட்டு நலிந்து போவதனை நம்மால் அவதானிக்க முடிகின்றது.
மனிதர்களை மிருகங்களாக்கி அவர்களை தவறான வழிகளில் இட்டு செல்வதில் போதைப்பொருட்களின் பங்கு மிகப்பெரியதாக உள்ளது.
இதனை அறிந்தும் அதன் வழியே செல்லும் அடிமைகள் போல மனிதர்களின் வாழ்வு மாறிவிட்டது. இந்த கட்டுரையில் போதையினால் ஏற்படும் அழிவு பற்றி நோக்கலாம்.
தீயோரின் பாதை
“கெடுகுடி சொற்கேளாது” என்பது போல இங்கே பலர் போதை பொருட்களை பாவித்து தம்மையும் தமது வாழ்வையும் அழித்து கொள்கின்றனர்.
எத்தனையோ நல்ல விடயங்கள் இந்த உலகில் ஏராளம் கொட்டி கிடக்கின்றன. இனிமையான இசை, சுவாரஸ்யம் நிறைந்த புத்தகங்கள், சுவைநிறைந்த உணவுகள், பானங்கள், அன்பும் அக்கறையும் நிறைந்த உறவுகள் இத்தனையை விடவும் இனிமை தருவது யாதாக இருக்க முடியும்.
ஆக போதையெனும் பாதையில் செல்வோர் கீழோர் அன்றி வேறு யாராய் இருக்க முடியும்.
போதையின் பங்கு
முன்பொரு நாள் நமக்கென்று ஒரு வாழ்க்கை முறை இருந்தது ஒழுக்கம் தவறாத ஒரு சமூகம் இருந்தது. அங்கு இந்த அபத்தமான சிந்தனைகளுக்கு இடமே இல்லை எனலாம்.
ஒழுக்கம் அற்ற பண்புகள் என்று நமக்குள் ஊடுருவ துவங்கியதோ அன்று நமது அழிவின் பாதை ஆரம்பமானது எனலாம்.
இன்றைய காலகட்டத்தில் ஏராளமான குடும்பங்கள் நிர்க்கதியாக நிற்பதற்கு இந்த போதை பொருட்கள் என்று சொல்லக்கூடிய மது, புகையிலை இன்னும் பல வகை ஆபத்தான போதைப்பொருட்கள் நம் சமுதாயத்தில் ஒரு புற்றுநோய் போல புரையோடி கிடக்கின்றன.
இளையோரின் மாற்றம்
துடிப்பும், அதற்கேற்றாற் போல் படிப்பும், விவேகமும், தம் சமுதாயத்தின் நலன் பற்றி சிந்திக்கும் தலை சிறந்த இளையவர்கள் தான் ஒரு சமூகத்தின் வரம்.
ஆனால் இன்றைய இளையோரின் நிலை அவ்வாறில்லை போதையினால் மதி மயங்கி போய் சுயமாக சிந்திக்க முடியாதவர்களாகி பல்வேறான குற்ற செயல்களில் ஈடுபட்டு தமது எதிர்காலத்தை விரையமாக்கி தம்மை சார்ந்த பிறரையும் துன்புறுத்தும் நிலையில் இன்றை இளையோரின் நிலையானது காணப்படுதல் வேதனைக்குரியதாகும்.
இவ்வகையான மாறுதல்கள் நமது நாட்டையும் சமூகத்தையும் பின்னோக்கியே அழைத்து செல்லும்.
போதையற்ற உலகம்
நமது சமுதாயத்தை மாசுபடுத்தும் போதை பொருட்கள் எதுவும் இல்லாத உலகம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவு சிறந்ததாக இருக்கும்.
தலைசிறந்த சிந்தனையாளர்களும் தூர நோக்குடைய தலைவர்களும் உருவாக கூடிய ஒரு சூழலாகவும், மகிழ்ச்சியும், புரிந்துணர்வும் உடைய ஒரு ஒற்றுமையான உலகமாக அது இருக்கும்.
இத்தகைய ஒரு உலகை மாற்றி படைக்க வேண்டும் என்பதுவே ஒவ்வொரு இளைஞர்களின் கனவாக இருக்க வேண்டும்.
முடிவுரை
“ஐம்புலன் ஆட்சி கொள்” என்பது போல நமது உடலையும் மனதையும் திடமாக வைத்திருந்தால் மனிதனால் இந்த உலகில் சாத்தியமாகாத விடயங்கள் என்று எதுவும் இருக்க முடியாது.
இந்த உலகில் தலைசிறந்த மனிதர்களாக சாதித்தவர்கள் இத்தகைய போதைகளற்ற தமது சமூகத்தின் முன்னேற்றமே பாதை என கொண்டவர்களாவர். எனவே நாமும் அவர்களது வழியில் பயணித்து வெற்றிகளை எமதாக்குவோம்.
You May Also Like : |
---|
போதை இல்லா உலகம் கட்டுரை |
போதைப்பொருளும் மாணவர்களும் கட்டுரை |