போதைப்பொருள் பாவனை கட்டுரை

Bothai Porul Katturai In Tamil

இந்த பதிவில் இன்று உலகின் பெரும் தலைவலியாக மாறியுள்ள “போதைப்பொருள் பாவனை கட்டுரை” பதிவை காணலாம்.

போதைப் பொருட்கள் போதையை ஏற்றிக் கொள்வதற்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

போதைப்பொருள் பாவனை கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. போதைப்பொருள் அறிமுகம்
  3. போதை பழக்கத்தின் தீமைகள்
  4. போதை ஒழிப்பு
  5. போதைப் பொருட் பாவனையிலிருந்து மீண்டெழல்
  6. முடிவுரை

முன்னுரை

உலக அளவில் பல கோடி மக்கள் பல்வேறு வகையான போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதாக ஐக்கிய நாடுகளின் புள்ளிவிவரம் கூறுகின்றது.

இன்றைய சமுதாயமானது பெரிதும் வளர்ச்சி அடைந்து நாகரீக வளர்ச்சியின் உச்ச நிலையை அனுபவித்து வருகின்றது. இருப்பினும் சமுதாயம் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சனை போதைப்பொருள் பாவனை ஆகும்.

சாதனை படைக்க வேண்டிய இளைய சமுதாயம் அழிவினை நோக்கிச் செல்கின்றன. சிறுபொழுது சந்தோசத்துக்காகவும்⸴ பொழுதுபோக்கிற்காகவும் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் போதைப் பொருட்களின் பாவனை தடுத்து நிறுத்துவது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும். இதனை இக்கட்டுரையில் காண்போம்.

போதைப்பொருள் அறிமுகம்

போதைப் பொருட்கள் போதையை ஏற்றிக் கொள்வதற்காகவும்⸴ பொழுதுபோக்கிற்காகவும் உட்கொள்ளப்படுகின்றன. போதைப் பழக்கம் உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கும் ஒன்றாகும்.

போதைப் பொருட்கள் என்கின்ற போது அதனுள் பல அடங்குகின்றன. அந்தவகையில் மதுபானம்⸴ புகையிலை, அபின்⸴ ஹெராயின்⸴ கஞ்சா⸴ பான்மசாலா போதை தரும் இன்வேஹலர்கள் எனப் பலவும் அடங்கும்.

இப்போது போதைப் பொருட்களின் பாவனையால் தனிமனிதன் மட்டுமன்றி சமுதாயமும் பெரிதும் பாதிப்புகளைச் சந்திக்கின்றது.

போதை பழக்கத்தின் தீமைகள்

உலகளவில் தற்போது போதைப்பொருள் பாவனையானது மிகவும் கடுமையான சுகாதார பிரச்சனையாக உள்ளது. போதைப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகையான வேதிப் பொருட்கள் உள்ளன.

இதனைப் பயன்படுத்துபவர்கள் சொந்த வீட்டிலேயே திருடுகிறார்கள்⸴ பொருட்களை அடகு வைப்பது⸴ பிச்சை எடுப்பது⸴ தகாத வார்த்தைகளால் பேசுவது⸴ பிறரைத் துன்புறுத்துவது என தீய பழக்க வழக்கங்களை வெளிப்படுத்துகின்றனர்.

போதை ஒழிப்பு

சமுதாயத்திற்கு போதை ஒழிப்பு மிகமிக அவசியமான ஒன்றாகும். போதைப்பொருள் ஒழிப்பை மேற்கொள்ள ஒவ்வொருவரும் ஒத்துழைக்க வேண்டும். அரசு கடுமையான சட்டங்களை விதிக்க வேண்டும். இதனை மீறுவோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவது அவசியமாகும்.

பொது இடங்களில் சிகரெட்⸴ மதுபானம் அருந்துவது தடை என்பது பொதுவான விதியாகும். இதனை பரவலாகச் ஏற்படுத்தவேண்டும். இவற்றிற்கும் மேலாக போதைப்பொருட்களை சட்டவிரோதமாக விற்பவர்களை தடுத்து நிறுத்த வேண்டும்.

அவ்வாறு செயற்படுகின்ற போது அல்லது செயற்படுத்துகின்ற போது மட்டுமே போதைப் பொருட்களை ஒழிக்க முடியும். திரைப்படங்களில் ஊக்குவிக்கப்படும் போதைப் பொருட்பாவனை தொடர்பான காட்சிகளைத் தடை செய்ய வேண்டும்.

போதைப் பொருட் பாவனையிலிருந்து மீண்டெழல்

ஒருவர் போதை பாவனைக்கு அடிமையாகி விட்டால் அதிலிருந்து அவர் மீள்வது அவசியம். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவரை மீண்டெழச் செய்வது அவசியமான ஒன்றாகும்.

முதலில் போதைப் பொருட்களுக்கு அடிமையான தனிமனிதன் ஒவ்வொருவரும் அதன் தீமைகளை உணர்ந்து இப்பழக்கத்தில் இருந்து மீண்டெழ முன்வர வேண்டுமென முழுமனதாக உறுதி கொள்ள வேண்டும்.

பெற்றோர்கள் பிள்ளைகளை அரவணைத்து அவர்களின் தவறுகளை எடுத்துக் கூறி அப்பழக்கத்தில் இருந்து சிறிது சிறிதாக அவர்களை வெளிக்கொண்டு வரவேண்டும். பிள்ளைகளைக் கண்காணிக்க வேண்டும். அவர்களில் சிறிய மாற்றம் ஏற்படும் போது அதனை கவனித்து சரி செய்ய வேண்டும்.

போதைப் பொருட் பாவனையாளர்களுக்கு மறுவாழ்வு மையங்கள்⸴ ஆயுர்வேத⸴ சித்தா என எத்தனையோ மருத்துவ முறைகள் இருக்கின்றன. அவற்றை கண்டறிந்து மருத்துவத்தினை மேற்கொள்ள வேண்டும்.

முடிவுரை

போதைப் பொருட்பாவனைகள் என்பது தனிமனிதன் மட்டுமல்ல சமுதாயத்தையும் தாண்டி நாட்டிற்கும் கேடு விளைவிக்கின்றன. எனவே இதனை தடுத்து நிறுத்தி முழுதாக ஒழிக்கப்பட வேண்டும்.

ஆரோக்கியமான வாழ்விற்கு போதைப்பாவனை பெரிதும் தடையாக உள்ளது என்பதனை அனைவரும் உணர வேண்டும். ஒவ்வொரு தனி மனிதனது உள்ளத்திலும் நற்சிந்தனைகளை ஏற்படுத்தி சீர் செய்வதே ஆரோக்கியமானதும்⸴ நிரந்தரமானதுமான தீர்வாகும்.

You May Also Like :
மது பற்றிய கட்டுரை
சமூக நல்லிணக்கம் கட்டுரை