மது பற்றிய கட்டுரை

Madhu Olippu Katturai In Tamil

இந்த பதிவில் சமூகத்தை சீரழிக்கும் “மது பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

மதுவால் உடல் நலம் மற்றும் மனநலம் இரண்டுமே பாதிக்கப்படுவதோடு எண்ணற்ற நோய்களும் ஏற்படுகின்றன.

மது பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. மது ஒழிப்பின் அவசியம்
  3. இளைய சமுதாயமும் மது பழக்கமும்
  4. மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள்
  5. மது பழக்கத்தை மாற்றும் வழிமுறைகள்
  6. முடிவுரை

முன்னுரை

மது நாட்டுக்கும் வீட்டுக்கும், உயிருக்கும் கேடு விளைவிக்கும் பொருளாகும். மது வாழ்வின் இன்பத்தை இழக்கச் செய்கிறது. மதுப்பழக்கத்தால், குடிப்பவர் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தச் சமூகமும் பாதிப்புக்கு உள்ளாகிறது.

இன்பத்தைத் தேடி மதுவைப் பலர் நாடுகின்றனர். ஆனால், அதுவே பின்னாளில் தீவிரப் பிரச்சினையாக மாறும் என்பதை அவர்கள் ஆரம்பத்தில் உணர்வதில்லை.

மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள், அதனை தவிர்க்க வேண்டிய அவசியம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

மது ஒழிப்பின் அவசியம்

இன்றைய சமுதாயத்தில் மதுப்பழக்கமானது பரவலாகக் காணப்படுகின்றது. இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார்கள்.

இதனால் பல சமுதாய சீர்கேடுகளும், தனிநபர் வாழ்க்கையும் பாதிப்படைகின்றது. இந்நிலையை மாற்றி அமைப்பதற்கு மது ஒழிப்பு அவசியமாகும்.

தனிமனித பொருளாதாரத்தையும், நாட்டின் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்ப வேண்டுமெனில் சமூகங்களிடையே காணப்படும் மதுப்பழக்கத்தை ஒழிப்பது அவசியமானதாகும்.

இன்று நடுத்தர வர்க்கத்தினர் பலரும் தமது பொருளாதார நிலையுணராது மதுப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதனைக் காணமுடிகின்றது. இவர்களின் பொருளாதார நிலையை மாற்றியமைக்க வேண்டுமெனில் மது ஒழிப்பையே முதலில் ஏற்படுத்த வேண்டும்.

நாட்டில் சிறந்த நற்பிரயைகளை உருவாக்கவும், நாட்டில் காணப்படும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தவும் மது ஒழிப்பு அவசியமாகும். ஏனெனில் இவற்றிற்கு முதன்னைக் காரணமாக அமைவது மதுப்பழக்கமே ஆகும்.

இளைய சமுதாயமும் மது பழக்கமும்

மதுவின் கொடுமையை அன்று முதல் இன்றுவரை பல சான்றோர்கள் கூறிவருகிறார்கள். சிறிதளவு சிந்திப்பவர்கள் கூட மதுவின் தீமைகளை அறிந்தே வைத்துள்ளனர்.

ஆனால், இன்று மது நாட்டிற்குள் புகுந்து இளைய சமுதாயத்தைச் சீரழித்து விட்டது. இதனால் நாட்டின் எதிர்காலம் நிச்சயம் பாதிக்கப்படும் என்பது மட்டும் உண்மை.

பள்ளி மாணவர்களிடையே அதிகரிக்கும் மதுப்பழக்கம் அவர்களின் எதிர்காலத்தை மட்டும் பாதிக்காமல் சமூகத்தினது எதிர்காலத்தையும் பாதிப்படையச் செய்கின்றது.

மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

மதுவை தொடர்ச்சியாக, அளவுக்கு அதிகமாக அருந்தினால் வாழ்நாள் குறையவே செய்யும். மதுவால் உடல் நலம் மற்றும் மனநலம் இரண்டுமே பாதிக்கப்படுவதோடு எண்ணற்ற நோய்களும் ஏற்படுகின்றன.

வயிற்றுப் புண், கல்லீரல் வீக்கம் மற்றும் சுருக்கம், சர்க்கரை நோய் மற்றும் கணைய அழற்சி, நரம்புத் தளர்ச்சி, இதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம் போன்ற பல நோய்களுக்கு ஆளாக நேரிடலாம்.

தவறான எண்ண ஓட்டங்கள் அதிகரிக்கும். தன்னம்பிக்கை குறையும். இதனால், வீடுகளில் தினமும் சண்டை நடக்கிறது. சமூகக் குற்றங்களில் ஈடுபடுகின்றனர். தனிநபரின் பொருளாதாரத்தைப் பாதித்து நாட்டுப் பொருளாதாரத்தின் முதுகெலும்பையே முறிக்கிறது.

மது பழக்கத்தை மாற்றும் வழிமுறைகள்

மனநல மருத்துவரையோ உளவியல் நிபுணரையோ ஆலோசித்து மதுப் பழக்கத்தைக் கைவிடும் முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

மது அருந்துவதால் பிரச்சினை உள்ளது என்பதை உணர்வதும், ஏற்றுக்கொள்வதும், ஒருமுறை மாற்றங்கள் செய்யத் தொடங்கிய பின் அவற்றைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.

விழிப்புணர்வுக் கூட்டங்கள், கருத்தரங்குகளைத் தொடர்ந்து மேற்கொண்டு சமூகத்தின் மத்தியில் மது ஒழிப்பினை மேற்கொள்ளலாம்.

முடிவுரை

மதுவை ஒழிப்போம் மது பாவனையை கட்டுப்படுத்துவோம் என கோஷங்கள் எழுப்புவதும், விழிப்புணர்வுகளை மேற்கொள்வதும், அமைப்புகளை அமைத்து செயற்படுவதும், சட்டங்கள் போடுவதன் மூலமும் மது ஒழிப்பு முழுமையாக நீங்கியதில்லை.

மதுப் பாவனை இல்லாது போவதற்கு மனித மனங்களின் மாற்றம் என்பது மிகமிக அவசியமாகும். மதுவை ஒழிப்போம்.. மகிழ்வாய் வாழ்வோம்!

You May Also Like :
ஒழுக்கம் பற்றிய கட்டுரை
சிறுவர் உரிமைகள் கட்டுரை