ஒழுக்கம் பற்றிய கட்டுரை

Olukkam Katturai In Tamil

இந்த பதிவில் வாழ்வில் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய பண்புகளில் ஒன்றான “ஒழுக்கம் பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

ஒருவரை மேன்மையோடு கூடிய வாழ்வில் தழைக்கச் செய்யும் பண்பு ஒழுக்கமாகும். வாழ்வில் ஒழுக்கத்தை கடைப்பிடித்து வாழ்வதே தலை சிறந்த நெறியாகும்.

ஒழுக்கம் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. ஒழுக்கம் பற்றி திருவள்ளுவரின் கூற்று
  3. ஒழுக்கம் உயர்வு தரும்
  4. ஒழுக்கக் கல்வி
  5. ஒழுக்க சீர்கேடால் ஏற்படும் விளைவுகள்
  6. முடிவுரை

முன்னுரை

ஒழுக்கம் உயிரினும் மேலானது என்பது ஆன்றோர் வாக்காகும். ஒரு சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் நன்நடத்தைகளில் சேர்க்கையே ஒழுக்கம் ஆகும்.

மேலும் நல்ல நெறிகளைப் பின்பற்றி நடத்தல் ஒழுக்கம் எனப்படும். ஒழுக்கத்தை தமிழர்கள் சிறப்பு வாய்ந்த ஒரு பண்பாட்டுக் கூறாகக் கொண்டிருந்தனர்.

நாம் வாழ்வில் பின்பற்றப்படுகின்ற நல்ல நெறியே ஒழுக்கமாகும். நல்ல பண்புகள் உள்ளவன் நல்ல ஒழுக்கம் உடையவன் என்று குறிப்பிடப்படுகிறான். இக்கட்டுரையில் ஒழுக்கம் பற்றி காண்போம்.

ஒழுக்கம் பற்றி திருவள்ளுவரின் கூற்று

நீதி நெறிகளை நமக்கு வலியுறுத்தும் நோக்குடன் நம் முன்னோர்கள் இயற்றிய நீதி நூல்கள் பல நீதிக் கருத்துக்களை நமக்கு எடுத்துரைப்பதாக உள்ளன.

அந்த வகையில் திருக்குறள் உலக அளவில் தமிழர்களின் ஒழுக்க நெறிகளை பறைசாற்றும் ஒப்பில்லாத நூலாக போற்றப்படுகின்றது.

திருவள்ளுவர் ஒழுக்கம் உடைமை என்னும் அதிகாரத்தை உருவாக்கி அதில் பல ஒழுக்க நெறிகளை எடுத்துரைத்துள்ளார்.

ஒருவன் வாழ்வில் மேன்மை அடையவேண்டுமெனில் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றார். இதனை “நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்” எனும் குறளின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளார்.

மனிதனுக்கு உயர்வு தரும் ஒழுக்கத்தை உயிரினும் மேலாக கருத வேண்டும் என்கின்றார். இதனை “ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்” எனும் குறளின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளார்.

ஒழுக்கம் உயர்வு தரும்

ஒழுக்கத்தினால் உயர்வை அடைவர், ஒழுக்கம் இல்லாதவர் வேண்டாத பழியை அடைவர். இதனை “ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி” என்று திருக்குறள் கூறுகிறது.

ஒழுக்கம் ஒருவருடைய பண்பட்ட வாழ்விற்கும், புகழுக்கும் காரணமாக அமைந்து சமுதாயத்திற்கு பெருமையையும் புகழையும் சேர்க்கும்.

ஒழுக்கத்தால் கிடைக்கும் மேன்மை இவை எல்லாவற்றையும் விட உயர்வானது. ஒழுக்க நெறி நிற்பவர்கள் என்றைக்கும் உயர்நிலையை அடைவார்கள் என்பது நியதி.

ஒழுக்கக் கல்வி

பள்ளிப்பருவத்தில் அறம் சார்ந்த ஒழுக்கம் நெறிகளை போதித்து வழிகாட்டுவது நீதிநூல்களாகும். அவற்றிற்கு வழி நடத்துபவனாக ஆசிரியர் திகழ்கின்றார்.

வாழ்க்கை பாதையில் வழுக்கு விழாமல் தாங்கிப் பிடிக்கும் ஊன்றுகோல் நீதி நூல்களே. பள்ளிப் பருவத்தில் தவறிவிழாது முன்னேறி விட்டால் அந்த வெற்றியே வாழ்நாள் முழுவதும் பயணிக்கும் வல்லமையைத் தரும்.

மாணவப் பருவத்திலேயே ஒழுக்கத்தையும் கல்வியையும் இரு கண்களாக கடைப்பிடித்து வாழ்க்கை கல்வியை பயின்று சிறப்புற்று ஒழுக்கத்த்தோடு காலந்தோறும் பயணிக்க வேண்டும்.

ஒருவரை மேன்மையோடு கூடிய வாழ்வில் தழைக்கச் செய்யும் பண்பு ஒழுக்கமாகும். வாழ்வில் ஒழுக்கத்தை கடைப்பிடித்து வாழ்வதே தலை சிறந்த நெறியாகும்.

ஒழுக்க சீர்கேடால் ஏற்படும் விளைவுகள்

ஒழுக்கமின்மையானது ஒருவரை தீய வழியில் செலுத்தி சமூகத்தில் இழிநிலைக்கு இட்டுச்செல்லும்.

மகா பாதகச் செயல்களில் ஈடுபடுதல், போதைப் பொருட்களுக்கு அடிமையாதல், தகாத உறவு போன்ற செயற்பாடுகள் ஒழுக்க சீர்கெட்ட செயல்பாடுகளாகின்றன.

இதனால் சமுதாயத்தில் நன்மதிப்பை இழக்க வேண்டிவரும் சட்டப்படி தண்டனைகளையும் அனுபவிக்க நேரிடலாம்.

முடிவுரை

நம்முன்னோர்கள் ஒழுக்கநெறிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தனர். ஒழுக்கத்துடன் வாழ்வதனையே உயர்வாக எண்ணி ஒழுக்கசீலர்களாக வாழ்ந்தனர்.

இதனால் தான் அவர்கள் பல ஒழுக்கநெறிக் கருத்துக்களை முன்மொழிந்துள்ளனர். எனவே நாமும் ஒழுக்கமுடையவர்களாக வாழ்ந்து வாழ்வில் வளம் பெறுவோமாக.

You May Also Like :
அன்பு பற்றிய கட்டுரை
தீண்டாமை ஒழிப்பு கட்டுரை