மரம் வளர்ப்போம் சிறுவர் கட்டுரை

Maram Valarpom Katturai

இந்த பதிவில் “மரம் வளர்ப்போம் சிறுவர் கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு (02) கட்டுரைகளை காணலாம். இவை ஒவ்வொன்றும் 150 சொற்களை உள்ளடக்கியுள்ளது.

மரம் வளர்ப்பதனை மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் தம் கடமையாக கொள்ள வேண்டும்.

மரம் வளர்ப்போம் சிறுவர் கட்டுரை – 1

இயற்கையின் மடியில் வளர்ந்த முதல் குழந்தை மரங்கள் தான் அவற்றை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம்முடையது. ஆனால் நாமோ நமது சுயநலத்திற்காக மரங்களை வெட்டி காடுகளை அழித்து நம்மை நாமே அழித்துக் கொள்ள தொடங்கியுள்ளோம்.

நமது அடுத்த தலைமுறைக்காக நாம் சொத்து சேர்த்து வைத்தால் மட்டும் போதாது. அவர்கள் ஆரோக்கியமாக வாழ நல்ல காற்று தேவை அது மரங்களின் மூலம் தான் கிடைக்கும். எனவே இதற்கு நாம் செய்ய வேண்டியது மரம் வளர்ப்பதேயாகும்.

மரங்கள் பூமிக்கும் மனிதர்களுக்கும் பல நன்மைகளை கொடுக்கின்றன. சுவாசிப்பதற்கு சுத்தமான காற்று தருகின்றன. இளைப்பாற நிழல் தருகின்றன. வளிமண்டலத்திற்கு நீரை அனுப்பி மழை பொழிய வைக்கின்றன. பொழிகின்ற மழையை தேக்கி வைக்கின்றன.

சூரிய கதிர்வீச்சு, வேகமான காற்று போன்றவற்றில் இருந்து மனிதரை பாதுகாக்கின்றன. மரங்கள் மண்ணுக்கு பசும் கம்பளமாக இருக்கின்றன. அழகான பூக்களை தந்து பூமியை அழகாக்கின்றன.

நாம் உண்பதற்கு காய்கனிகள், கிழங்குகள், தானியங்கள் தருகின்றன. மருத்துவத்திற்காக சிறந்த மூலிகைகளை தருகின்றன. காய்ந்த மரங்கள் கூட நமக்கு எரிபொருளாக பயன்படுகின்றன.

நமக்கு மட்டுமன்றி விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் கூட வாழிடமாக விளங்குகின்றன. மேலும் மரங்கள் நாம் பயன்படுத்தும் மேசை, கதவுகள், ஜன்னல்கள், கதிரைகள் என பல பொருட்களை உருவாக்க உதவுகின்றன.

இவ்வாறு பல நன்மைகளை தரும் மரம் இல்லையேல் மனித இனமே இல்லை என்பது உண்மையாகும். எனவே மரம் வளர்ப்பதனை மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் தம் கடமையாக கொள்ள வேண்டும்.

மரம் வளர்ப்போம் பயன் பெறுவோம் கட்டுரை – 2

வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்பது அன்றைய வாசகம். ஆனால் ஆளுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது. மரங்கள் இயற்கை அன்னையின் மிகப் பெரிய கொடை ஆகும்.

தொழில் வளர்ச்சியின் காரணமாக அதிகரித்த தொழிற்சாலைகளின் பயன்பாட்டினாலும் மனித தேவையின் பொருட்டு அதிகரித்த மோட்டார் வாகன பயன்பாட்டினாலும் மாசாக்கப்படும் இந்த சுற்றுச்சூழலை சுத்தம் செய்பவை இந்த மரங்களே ஆகும்.

மரங்கள் காற்றை தூய்மை செய்கின்றன. மிருகங்கள் பறவைகள் என அனைத்து உயிர்களையும் வெயிலில் இருந்து காக்க நிழலையும் தருகின்றன.

இதை உணர்த்துவதற்காக “நிழலின் அருமை வெயிலில் தெரியும்” என எமது முன்னோர்கள் பொன்மொழி மூலம் அறியத்தந்துள்ளனர்.

இவை அனைத்திற்கும் மேலாக நீரானது ஆவியாகி மேகமாகி மழையாக பெய்ய பெரிதும் துணை புரிகின்றன.

பூ, காய், கனி, கீரை போன்ற உணவு வகைகளை தருகின்றன. சிறந்த மருந்துகளை உருவாக்க மூலிகை பொக்கிசங்களாகவும் காணப்படுகின்றது. பலவகை உள்ள மரத்தில் நமது தேவையினை பொருத்து அதற்கு ஏற்ற வகையான மரத்தை நாம் தேர்ந்தெடுத்து வளர்த்துக் கொள்ளலாம்.

கோடை நிழலுக்காக வேம்பு, துங்குமூஞ்சி, புங்கன், பூவரசு போன்றவற்றையும் உரப்பாவனைக்காக வாகை இனங்கள், கிளிசரிடியா, ஒதியன், முருங்கை போன்றவற்றையும் கட்டுமான பொருட்களுக்காக கருமருது, மூங்கில், வேம்பு, ஆகிய இனங்களையும் வளர்த்து பயன் பெறலாம்.

இவ்வாறு பலவகையில் நாம் மரங்களை வளர்க்க வேண்டும். இதனால் நாம் பயன் பெறுவதோடு இயற்கை சூழலும் பாதுகாப்பாக இருக்கும்.

You May Also Like:
சுற்றுச்சூழல் பாதுகாப்பு கட்டுரை
நான் ஒரு கரிக்கோல் கட்டுரை