நான் ஒரு கரிக்கோல் கட்டுரை

Naan Oru Karikol

இந்த பதிவில் “நான் ஒரு கரிக்கோல் கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு (02) கட்டுரைகளை காணலாம். இவை ஒவ்வொன்றும் 150 சொற்களை கொண்டமைந்துள்ளன.

கரிக்கோல் பெரும்பாலும் அனைவராலும் “பென்சில்” என்ற ஆங்கில பெயரில் தான் அழைக்கப்படுகின்றது.

நான் ஒரு கரிக்கோல் கட்டுரை -1

மாணவர்களிற்கு அத்தியாவசியமான பொருளாக விளங்கும் நான் ஒரு கரிக்கோல் ஆவேன். ஒவ்வொரு சிறுவர்களுடைய புத்தகப்பையிலும் நான் காணப்படுவேன். என்னை விரும்பாத சிறுவர்களே இல்லை எனலாம்.

புகழ்பெற்ற தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டு பெட்டிகளில் அடைக்கப்பட்டேன். சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ணங்களில் வண்ணம் தீட்டப்பட்டிருந்த என்மேல் மென்சிவப்பு வண்ணத்தில் அழிறப்பர் ஒன்றும் பொருத்தப்பட்டிருந்தது.

என்னைப்போன்று நூற்றுக்கணக்கானவர்கள் அத்தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டனர். அங்கிருந்து பேரூந்தில் கொண்டுவரப்பட்டு, கடையொன்றில் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்ட என்னை, ஒரு சிறுமி தனது தேவைக்காக கொள்வனவு செய்தாள்.

என்னுடைய வெளித்தோற்றத்தினால் கவரப்பட்ட அவள், மிகவும் ஆவலுடன் பயன்படுத்தத் தொடங்கினாள். என்னை மிகவும் அவதானமாகவும் மென்மையாகவும் பயன்படுத்தி தனது அப்பியாசப் புத்தகத்தில் எழுதுவாள்.

அதனை பார்க்கும் போது மனதிற்குள் மிகவும் மகிழ்ச்சியாக உணர்வேன். என்னைக் கொண்டு எழுதப்பட்ட எழுத்துக்கள் மிகவும் கருமையாகவும் அழகாகவும் இருந்தன.

அந்த எழுத்துக்களின் அழகை தன்னுடைய நண்பர்களிற்கு காட்டி மகிழ்வாள். அதனைக் காணும்போது பெருமையாக உணர்வேன். இவ்வாறு கண்னை இமை காப்பது போல் கவனமாக பாதுகாத்து வந்தாள்.

காலம் செல்ல செல்ல அதிகரித்த பயன்பாட்டினால் என்னுடைய அளவு குறைந்து கொண்டு வந்தது. நான் குட்டையானவனாக மாறத் தொடங்கினேன். இதனால் அந்த சிறுமி மிகுந்த மனவருத்தற்கு உள்ளானாள்.

என்னைப் பயன்படுத்தியதை குறைத்த போதும் அவளால் என்னைக் காப்பாற்ற முடியவில்லை.

நாளடைவில் எனது முழுமையான பயன்பாட்டை இழந்து காணப்பட்ட என்னை, தனது அலுமாரியில் பத்திரப்படுத்தி விட்டு புதிய கரிக்கோல் ஒன்றை வாங்கினாள். அன்றிலிருந்து இந்த அலுமாரியில் வாழ்ந்து வருகின்றேன்

நான் ஒரு கரிக்கோல் கட்டுரை – 2

சிறுவர்களிற்கு எழுத்தறிவை அளிப்பதில் மிகமுக்கியமானவானாக விளங்கும் நான் ஒரு கரிக்கோல் ஆவேன். பயிற்சி புத்தகங்களிலும், அப்பியாசக் கொப்பிகளிலும் என்னைப் கொண்டு எழுதப்பட்ட எழுத்துக்களை அழிக்க முடிவதனால் சிறுவர்களினால் விரும்பி பயன்படுத்தப்படுகின்றேன்.

அதுமட்டுமின்றி வரைதலிற்கு நான் மிகவும் இலகுவானவனாக காணப்படுகின்றேன். அதனால் குழந்தைகள் தங்களுடைய ஆரம்பக் கல்வியை கற்கும் போது என்னைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

அதுமட்டுமின்றி என்னைப் பயன்படுத்தி நீரின் அடியிலும், விண்வெளியில் கூட எழுத முடியும். இன்றைய சிறுவர்களின் அத்தியாவசிய தேவையாக விளங்கும் எனது தோற்றம் பதினெட்டாம் நூற்றாண்டிற்குட்பட்டது.

அநேகமாக நீடித்த தன்மையற்ற மரத்தினால் செய்யப்படும் நான், தற்போது பிளாஸ்ரிக்கினாலும் மெழுகினாலும் உருவாக்கப்படுகின்றேன். அதற்குமேல் நிற கலவைகளினாலும், கலப்பட நிறமிகளை பயன்படுத்தியும் என்னை பலவண்ணங்களில் அழகுபடுத்துகின்றனர்.

நான் மிகப்பெரிய தொழிற்சாலைகளில் பல்வேறு இயந்திரங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படுவேன். மரக்குச்சிகளினுள் துளைகள் இடப்பட்டு, கிராபைட், களிமண் மற்றும் நீரைச் சேர்த்து உருவாக்கட்ட கலவை நடுவில் செலுத்தப்படும்.

பாவனை அதிகரிக்க அதிகரிக்க என்னுடைய அளவு குறைந்த வண்ணம் காணப்படும். அதனால் என் ஆயுட்காலம் வெகுவிரைவில் முடிந்து விடும். அதனால் மிகுந்த வருத்தம் அடைகின்றபோதும் சிறுவர்கள் ஆர்வத்துடன் என்னை பயன்படுத்தும் போது மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்.

தற்காலத்தில் சிறுவர்கள் என்னைப் பயன்படுத்துவது குறைவடைந்துள்ளது. என்னைப் பயன்படுத்தி எழுத்துக்களை கற்றுக் கொள்வதற்கும், வரைவதற்கும் பதில் இலத்திரனில் தொடுதிரைகளைப் பயன்படுத்துகின்றனர்.

அதனால் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளேன். சிறுவர்களிடையே கரிக்கோலை பயன்படுத்த ஊக்குவித்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

You May Also Like:
எனது நண்பன் சிறுவர் கட்டுரை
நான் ஒரு நூலகம் கட்டுரை