நான் ஒரு நூலகம் கட்டுரை

Naan Oru Noolagam Katturai In Tamil

இந்த பதிவில் “நான் ஒரு நூலகம் கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு(02) கட்டுரைகளை காணலாம்.

அறிவை வளர்ப்பதில் நூலகங்களின் பங்கு மிக முக்கியமாகும். அறிவை அள்ளி தரும் பல பொக்கிஷங்களை இவை வைத்திருக்கின்றன.

நான் ஒரு நூலகம் கட்டுரை – 1

அறிவை வளர்க்கும் இடம் நூலகமாகும். “நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு” என்ற ஒளவையாரின் வரிகளிற்கேற்ப நாம் எந்தளவிற்கு அதிகமாக நூல்களை வாசிக்கின்றோமோ அந்தளவிற்கு அதிமான அறிவாற்றலை பெற்றுக் கொள்கின்றோம்.

அத்தகைய பயன்களை பெற்றுத்தரும் நூல்கள் செறிந்து காணப்படும் நான் ஒரு நூலகமாவேன். நூலகம் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற வரிகளிற்கேற்ப ஒவ்வொரு ஊர்களிலும் நான் அமைந்திருப்பேன்.

அங்குள்ள மக்களை நல்வழிப்படுத்துவதிலும், அறிவார்ந்த சமூகத்தை கட்டியெழுப்புவதிலும் நான் மிகுந்த பங்களிப்புச் செய்கின்றேன்.

அனைவராலும் அனைத்து நூல்களையும் வாங்கி படித்திட இயலாது. அனைவருக்கும் மனதை ஒருமுகப்படுத்தி படிக்கும் அமைதியான சூழல் அமைந்துவிடாது. ஏழை எளியவர்கள் அனைத்து புத்தகங்களையும் இலவசமாக அமைதியான சூழலில் படிப்பதனை மிகமுக்கிய நோக்கமாகக் கொண்டே நான் உருவாக்கப்பட்டுள்ளேன்.

சிறுவர்களின் வாசிப்புப் பழக்கத்தை அதிகப்படுத்துவதன் மூலம் அவர்களை மிகச்சிறந்த அறிவாளிகளாக உருவாக்க முடியும்.

மாத இதழ்கள், சிறுவர் நன்நெறிகதைகள் போன்றன காணப்படுவதால் மாணவர்கள் தினமும் வருகைதந்து அவற்றை ஆர்வத்துடன் வாசிக்கும்போது அவர்களின் அறிவாற்றலும் அறிவு தேடலும் அதிகரிக்கின்றது.

இதனைத் தவிர அன்றாட உலக விசயங்களை தெரிந்து கொள்ளவதற்கென பத்திரிகைகளை வாசிக்க என்னை நாடிவருவோரும் உள்ளனர். என்னை பயன்படுத்தவதற்கென பல்வேறு விதிமுறைகள் காணப்படுகின்றன.

என்னை பயன்படுத்தும் போது அமைதி பேணுதல் அவசியமாகும். அத்துடன் என்னுள் உள்ள நூல்களை மிகுந்த அவதானத்துடன் பயன்படுத்தல் அவசியமாகும். அவ்வாறு செய்யாதவர்கள் மேல் மிகுந்த கோபம் கொள்வேன்.

தற்பொழுது அதிகரித்த இணையப் பயன்பாட்டால் என்னை நாடி வருவோரின் எண்ணிக்கை பரவலாக குறைந்துள்ளது. எனவே நூலகத்தை இயன்றளவு பயன்படுத்த அனைவரையும் ஊக்கவிப்பது அவசியமாகும்.

நான் ஒரு நூலகம் கட்டுரை – 2

மனிதர்களை நல்வழிப்படுத்துவதிலும், மாணவர்களின் அறிவை வளர்ப்பதிலும் நூல்களின் பங்கு அளப்பரியதாகும். நூல்கள் மனிதர்களின் சிறந்த நண்பர்களாக விளங்குகின்றன.

அத்தகைய பெறுமதி வாய்ந்த நூல்களை உள்ளடக்கிய நான் ஒரு நூலகமாவேன். ஊரின் மத்தியில் பிரமாண்டமான அடுக்குமாடிக் கட்டடத்தில் நான் அமையப் பெற்றுள்ளேன்.

விலைமதிக்க முடியாத பல்லாயிரக்கணக்கான பண்டைய நூல்களையும், நவீன நூல்களையும் கொண்டு மிகப் பெரிய அறிவுக்களஞ்சியமாக விளங்கும் என்னை அனைவரும் வியப்புடன் பார்வையிடுவர்.

ஆர்வத்துடன் என்னிடம் வருவோரிற்கு அவர்களிற்கு தேவைப்படுகின்ற விடயங்களை அள்ளி வழங்குவேன். என்னுள் பல்வேறு வகையான நூல்கள் பிரித்து அடுக்கப்பட்டிருக்கும்.

தமிழ் மற்றும் ஆங்கில இலக்கிய நூல்கள், சிறுவர் கதைகள், சிறுகதைகள், பொதுஅறிவு நூல்கள், பாடப் பயிற்சிப்புத்தகங்கள், வரலாற்று மற்றும் சமூக புத்தகங்கள் என பலதரப்பட்ட புத்தகங்களை கொண்டுள்ளேன்.

இதனைத் தவிர மாதந்த மற்றும் வாராந்த பத்திரிகைகளும் என்னுள் அடுக்கப்பட்டருக்கும். தூய்மையாக பாரமரிக்கப்படும் என்னுள் மிகுந்த அமைதி நிலவும்.

நான் அமைந்துள்ள கட்டடச் சுவர்களில் காந்தியடிகள், மகாகவி பாரதியார், திருவள்ளுவர் போன்றோரின் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதோடு, அவர்கள் மொழிந்த நல்வரிகளும் எழுதப்பட்டிருக்கும்.

தளத்தின் கீழ்ப்பகுதியில் வாசகர்கள் அமர்ந்து நூல்களைப் படிப்பதற்கான ஒழுங்கு வசதிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும். சிறுவர்களும் பெரியவர்கள் அதில் அமர்ந்து இலகுவாக நூல்களை படிப்பதனைக் காணும்போது மகிழ்ச்சியாக உணர்வேன்.

அதுமட்டுமல்லாது அறிவுஜீவிகள் மட்டுமின்றி மெத்தப் படிக்காதவர்களும் என்னை தேடிவரும் போது மிகுந்த மனநிறைவு அடைவேன். மற்றவர்களின் வளர்ச்சியில் உதவுவனாகவும், அனைவருக்கும் பிடித்த இடமாக நான் விளங்குவதையிட்டு பெருமையுடன் வாழ்ந்து வருகின்றேன்.

You May Also Like:
அழகிய மாலை வானம் கட்டுரை
எனது கனவு நூலகம் கட்டுரை