உழவுத் தொழில் பற்றிய கட்டுரை

ulavu tholil katturai in tamil

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்வார்”

என்கின்றார் வள்ளுவர். அதாவது, உலகத்துக்கு உழவு செய்து உணவளிக்கும் உழவர்களே சிறந்தவர்கள். மற்றவர்கள் அனைவரும் அவர்களை வணங்கியே வாழ வேண்டும் என உழவுத் தொழிலின் பெருமையை இரு வரிகளில் அழகாக கூறியுள்ளார்.

உழவுத் தொழில் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • உழவுத் தொழில்
  • உழவின் முக்கியத்துவம்
  • உழவின் உயர்வு
  • வேளாண்மைப் புரட்சி
  • முடிவுரை

முன்னுரை

“ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை”, “உழவார் உலகத்தார்க்கு ஆணி”, “உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை”, “சீரைத் தேடின் ஏரைத் தேடு” போன்ற வரிகள் உழவின் சிறப்பை உணர்த்துவனாகும்.

உலகத்தாருக்கு உணவளிக்கும் மேன்மையான தொழிலான உழவுத் தொழில் பற்றி இக்கட்டுரையில் நோக்கலாம்.

உழவுத் தொழில்

உழவுத் தொழிலை வேளாண்மை தொழில் என்றும் கூறுவர். நம் நாடு வெகு காலத்திற்கு முன்னரே உழவு தொழிலில் முன்னேறி இருந்தது. மண்ணை ஆண்ட மன்னர்கள் உழவுத் தொழிலுக்காக குளங்களையும், ஏரிகளையும் ஏற்படுத்தினார்கள். நிலத்தை பண்படுத்தி கரும்பும், நெல்லும் விளையும் நிலமாக மாற்றினார்கள்.

முன்னைய காலத்தில் உழவுத்தொழிலில் மனித உழைப்பு அதிகம் காணப்பட்டது ஆனால் இன்று தொழிநுட்ப வளர்ச்சியின் விளைவாக இயந்திரங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது.

உழவின் முக்கியத்துவம்

இந்த உலகில் எண்ணிலடங்கா பல தொழில்கள் உள்ளன. எனினும் எல்லோர்க்கும் உணவளிக்கும் உழவுத் தொழிலே முதன்மையானதாகும். விவசாயிகள் தங்கள் பொருளாதாரத் தேவையை உழவுத் தொழிலின் மூலமே பூர்த்தி செய்து கொள்கின்றார்கள்.

ஒரு நாடு முன்னேற வேண்டுமெனில் உழவுத் தொழில் இன்றியமையாததாகும். உழவுத் தொழிலானது ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் பங்களிப்புச் செய்கின்றது.

உழவின் உயர்வு

“வரப்புயர நீர் உயரும், நீருயர நெல்லுயரும், நெல்லுயர, கோல் உயரும், கோல் உயர கோன் உயர்வான்” என்று ஒளவையார் பாடல் உழவுத் தொழிலில் உயர்வு பெறாத நாடு பிற தொழிலை பெற்றிருந்தாலும் உயர்வு பெற இயலாது என்ற உண்மையை உணர்த்துகின்றது.

விவசாயி சேற்றில் கால் வைத்தால்தான் நாம் அனைவரும் சோற்றில் கை வைக்க முடியும். இவ்வுலகின் பசியைப் போக்க உழவுத் தொழிலே உதவுகின்றது. மேலும் உழவுத் தொழிலானது ஒரு நாட்டை உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையச் செய்கின்றது.

வேளாண்மைப் புரட்சி

காலத்திற்கு ஏற்ப நீர் வளத்தை பெருக்கவும், பயிர் விளைவைப் பன்மடங்காக்கவும், பூச்சிகளால் உயிரிழியாமல் காக்கவும் புதிய முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

வேளாண்மைக்காக ஆராய்ச்சி நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நல்ல விளைச்சலுக்கு வீரியம் உள்ள விதை இன்றியமையாதது.

வேளாண்மைத் துறையினர் குறைந்த காலத்தில் நிறைந்த விளைச்சலைத் தரக்கூடிய ஆடுதுறை 27, கருணா பொன்னி, கண்ணகி, செம்மை நெல் போன்ற புது வகையின விதைகள் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

முடிவுரை

பண்டைய காலம் தொட்டே உழவுத்தொழிலானது மக்களின் பிரதான தொழிலாக இருந்துள்ளது இன்றும் இருக்கின்றது. உலக உயிர்கள் வாழ்விற்கு இன்றியமையாத உழவுத் தொழிலானது பாதுகாக்கப்பட வேண்டும்.

உழவுத் தொழில் சிறக்க வேண்டுமானால் உழவர்கள் சிறப்பிக்கப்பட வேண்டும். உழவர்களுக்குரிய மதிப்பு தர வேண்டும் படிப்பவர்களும் உழவுத் தொழிலில் ஈடுபட வேண்டும்.

விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்க அரசாங்கம் திட்டங்களை வகுக்க வேண்டும். உற்பத்திப் பொருட்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். உழவுத்தொழிலின் மகிமையை உணர்ந்து அதனைப் பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும். உழவு இல்லையேல் உணவு இல்லை. எனவே, உழவுத் தொழிலுக்கு வந்தனம் செய்வோம்.

You May Also Like:

விவசாயம் காப்போம் கட்டுரை

விவசாயம் அன்றும் இன்றும் கட்டுரை