மனிதநேயம் பற்றிய கட்டுரை

manithaneyam katturai in tamil

இந்த பதிவில் “மனிதநேயம் பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

தற்காலத்தில் மனித நேயமானது மறக்கப்படுகின்ற பண்பாக உள்ளது. பிறர் நலம் மறந்து சுயநல நோய் பீடிக்கப்பட்டவர்களாக மக்கள் உள்ளனர்.

மனிதநேயம் பற்றிய கட்டுரை

மனிதநேயம் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • மனிதநேயம்
  • குடும்பத்தில் மனிதநேயம்
  • தமிழர்கள் வரலாற்றில் மனிதநேயம்
  • தற்காலத்தில் மனிதநேயம்
  • முடிவுரை

முன்னுரை

மனிதர்கள் வாழ்தற்கு உணவு, உடை, உறையுள் எவ்வளவு முக்கியமோ அதே அளவு மனிதமும் முக்கியம். மனிதர்களிடையே மலரக் கூடிய மனித நேயமானது உலக வாழ்க்கையில் ஒருவருக்கு ஒருவர் துணையாக வாழ வழி செய்யக் கூடியது.

குடும்பம், சமூகம் என பல கட்டமைப்புக்கள் பேணப்படுவதற்கு மனிதநேயமே அடிப்படையாக உள்ளது. எனவே இக்கட்டுரையானது மனித வாழ்வில் மனிதநேயத்தின் நிலைப்பாடு தொடர்பாக விளக்குகின்றது.

மனிதநேயம்

உலகில் வாழக் கூடிய முகம் தெரியாத நபர்கள் நம்மை பார்த்து சிரிப்பது கூட ஒரு மனிதநேயம் தான். மனித நேயம் என்பது சக மனிதர்களின் மீது பாசம் வைப்பது, கருணை, இரக்கம் காட்டுவது போன்றதாகும்.

மனிதர்கள் என்றாலே அவர்களுக்கு பிரச்சனைகள் இருப்பது இயல்பு தான். அந்த பிரச்சனைகளை பார்த்து அவர்களுக்கு எம்மால் முடிந்த உதவிகளை செய்யமுடியும்.

உதவி என்கின்ற போது அது பொருளாக தான் இருக்க வேண்டும் என்றில்லை உணர்வு பூர்வமாக அவர்களுடன் உடனிருத்தலும் உதவியே ஆகும்.

குடும்பத்தில் மனிதநேயம்

மனிதன் ஒரு சமூக பிராணி ஆவான். அதாவது அவனால் தனித்து வாழ இயலாது சமூகமாகவே வாழ முடியும். அந்த மனிதனை சமூக வாழ்விற்கு பழக்கப்படுத்தக் கூடிய ஆரம்ப இடம் குடும்பம் ஆகும்.

குடும்பத்தில் தான் மனிதநேயமானது விதைக்கப்படுகின்றது. குடும்ப உறுப்பினரிடையே அன்பை பரிமாறுதல், மதித்து நடத்தல், உதவி செய்தல் போன்ற மனிதநேயப் பண்புகள் இங்கு தான் பழக்கப்படுத்தப்படுகின்றன.

இங்கு உருவாக்கப்படும் மனித நேய பண்புகள் தான் சமூகத்தில் வெளிப்படுத்தப்படுகின்றன.

தமிழர்கள் வரலாற்றில் மனிதநேயம்

சுயநலம் இல்லாமல் பிறர் நலத்தினை காக்க வேண்டும் என்பதில் நம் தமிழர்கள் முன்னோடியாக விளங்கியவர்கள்.

மனித நேயத்திற்கு மிகவும் எடுத்துக்காட்டாக விளங்கிய நூல் திருக்குறள். மேலும் மனுநீதி சோழன் ஒரு பசுவின் கன்றிற்காக தன் மகனையே தண்டித்தவன்.

சிபி சக்கரவர்த்தி புறாவுக்காக தன் உடலையே தானம் செய்ததும், பாரி மன்னன் முல்லைக்காக தேர் கொடுத்தமையும், பேக மன்னன் மயிலிற்காக போர்வை அளித்ததும் வரலாற்றில் மாறாது இருந்து வரும் தமிழர்களின் மனிதநேயம் ஆகும்.

தற்காலத்தில் மனிதநேயம்

தற்காலத்தில் மனித நேயமானது மறக்கப்படுகின்ற பண்பாக உள்ளது. பிறர் நலம் மறந்து சுயநல நோய் பீடிக்கப்பட்டவர்களாக மக்கள் உள்ளனர்.

இரக்கம் மறந்து சுய விளம்பரத்திற்காக உதவி செய்யும் நிலை, விபத்து நடந்தால் கூட உதவிக்கு முன் வராது தொலைபேசியில் புகைப்படம் பிடிப்பதிலும் அதை இணையத்தில் பதிவிடுவதிலும் கவனம் செலுத்துதல் போன்ற கவலைக்குரிய நிலை காணப்பட்டாலும் ஒரு சிலர் மனசாட்சிக்கு பயந்து தம்மால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்வதையும் காணக்கூடியதாக உள்ளது.

முடிவுரை

மனித நேயம் உள்ளவர்கள் இதயத்தால் யோசித்து புத்தியினால் அதை உணர்வார்கள். மனித நேயத்திற்கு இணையான பொருளோ செல்வமோ இந்த உலகத்தில் வேறு எதுவும் இல்லை. அதனால் உலகில் பிறந்த ஒவ்வொருவரும் மனிதநேயத்தை காத்து மனிதராய் வாழ்வோம்.

You May Also Like:
உதவி பற்றிய கட்டுரை
உறவுகளின் முக்கியத்துவம் கட்டுரை