ஒலிம்பிக் வரலாறு

olympic history in tamil

உலகின் முதன்மையான விளையாட்டு போட்டியாக ஒலிம்பிக் காணப்படுகிறது. ஒலிம்பிக் விளையாட்டுகள் என்பது இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கோடை காலத்திலும், குளிர் காலத்திலும் மாறி மாறி பல்வேறு விளையாட்டுகள் நடத்தப்படும். இதில் அனைத்து உலக நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் பங்குபற்றும் ஒரு உலக ரீதியான போட்டியாக காணப்படுகிறது.

பண்டையகால ஒலிம்பிக்

பண்டையகால கிரேக்கத்தில் கி.மு. எட்டாம் நூற்றாண்டில் ஆரம்பித்த ஒலிம்பிக் போட்டி, கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரை சரியான முறையில் நடைபெற்று வந்தன.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை “ஒலிம்பியா” என்கிற இடத்தில் “ஜீயஸ்” எனும் கடவுளுக்கு மரியாதை செய்யும் விதத்தில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன. இசை, சொற்பொழிவு, நாடகம் போன்றவையும் போட்டிகளில் இடம்பெற்றன.

ஆரம்பகாலத்தில் ஆண்கள் மட்டுமே போட்டிகளில் பங்குகொண்டானர். ஒலிம்பிக் போட்டிகளில் போர்க்குணமிக்க வீரர்கள் பங்கேற்க ஆரம்பித்த பிறகு, விளையாட்டுகளில் சுவாரசியம் அதிகரிக்க ஆரம்பித்தது.

18வது, ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தம், ஓட்டம், ஈட்டி எறிதல், குதித்தல் போன்ற விளையாட்டுகள் சேர்க்கப்பட்டன. 20வது, ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டையும் சேர்க்கப்பட்டது.

காலம் செல்லச் செல்ல விளையாட்டுப் போட்டிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே சென்றன. 37வது ஒலிம்பிக் போட்டி ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து நடைபெற்றது.

இவ்வாறு தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள், கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் கிரேக்கத்தை ரோமானியர்கள் கைப்பற்றிய பிறகு, வீழ்ச்சியடைய தொடங்கியது.

நவீனகால ஒலிம்பிக்

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கல்வியாளரும் வரலாற்றாளருமான “பியர் டி கூபெர்டின்”, உடற்கல்வியை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது ஒலிம்பிக் போட்டிகளை மீண்டும் நடத்தும் எண்ணம் உருவானது.

‘போட்டியில் வெற்றி பெறுவது முக்கியமல்ல; எப்படிப் போராடுகிறோம் என்பதே முக்கியம்’ என்கிற நோக்கத்தை முன்வைத்து, கூபெர்டின் முயற்சியில் 1896ஆம் ஆண்டு நவீன ஒலிம்பிக் போட்டி, கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரில் ஆரம்பமானது.

13 நாடுகளைச் சேர்ந்த 280 போட்டியாளர்கள் இதில் கலந்துகொண்டனர். 60 ஆயிரம் பேர் பார்வையிட்டனர். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வந்த ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் புதிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டன.

பங்கேற்பாளர்களும் பார்வையாளர்களும் அதிகமானார்கள். நாடுகளிடையே பதக்கம் பெறுவதில் போட்டிகளும் அதிகரித்து சென்றது. 1900ஆம் ஆண்டு பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் முதன்முதலில் பெண்களும் அனுமதிக்கப்பட்டனர். 997 விளையாட்டு வீரர்களில் 22 பேர் பெண்கள். அதாவது 2.2 சதவீதத்தினர் பெண்கள்.

2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 51 சதவீதம் ஆண்களும் 49 சதவீதம் பெண்களும் பங்கேற்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாக காணப்படுகிறது.

1924ஆம் ஆண்டு முதல் பனிப்பகுதியில் விளையாடக்கூடிய விளையாட்டுகளுக்காக ‘குளிர்கால ஒலிம்பிக்’ போட்டிகள் நடத்தப்படுகின்றன. கோடைகால ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடத்தப்படுகிறது.

ஒலிம்பிக் கொடி

ஒலிம்பிக் சின்னம் ஐந்து நிறங்களால் உருவான வளையங்கள் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்ட வண்ணம் காணப்படுகின்றது. இது நவீன ஒலிம்பிக்கின் தந்தையான பியர்ரே டி கோபர்ட்டினால் வடிவமைக்கப்பட்டது.

இது ஆசியா, ஆபிரிக்கா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஐரோப்பா என உலகின் முக்கிய ஐந்து முக்கிய கண்டங்களை குறிப்பதாக அமைந்துள்ளது.

கொடி தனி வெள்ளை நிறத்தில் எந்த பார்டரும் (border) இல்லாமல் காணப்படுகிறது. இதற்கு நடுவில் ஐந்து வளையங்கள் இருக்கும். இதில் இருக்கும் நீலம், மஞ்சள், கருப்பு, பச்சை, சிவப்பு, வெள்ளை இந்த 6 நிறங்களில் உள்ள ஏதேனும் ஒரு நிறம் உலகில் உள்ள அனைத்து நாடுகளின் தேசியக் கொடியிலும் காணப்படுகிறது என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.

ஆனால் முதல் ஒலிம்பிக்கில் பங்கேற்ற உலக நாடுகளின் கொடியில் இருந்த பொதுவான நிறங்களை வைத்து அந்த வளையங்களுக்கு நிறம் தேர்வு செய்யப்பட்டது எனவும் கூறப்படுகிறது.

இதில் அந்த வளையங்கள் ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டிருக்கின்றமைக்கான காரணம், இந்த ஒலிம்பிக் போட்டியின் அடிப்படை நோக்கம் மக்களுக்கு இடையில் விளையாட்டு மூலமாக நட்புறவை ஏற்படுத்துவதுதான்.

ஒலிம்பிக் சுடர்

ஒலிம்பிக் போட்டியின் இன்னோர் முக்கியமான நிகழ்வு ஒலிம்பிக் சுடர். கிரேக்கர்களால் ஒலிம்பிக் தோற்றம் பெற்ற இடமான ஒலிம்பியாவில், ஆரம்பகாலத்தில் சூரிய கதிர்கள் மூலமாக ஒலிம்பிக் சுடர் ஏற்றினார்கள். இன்று வரை தொடர்ச்சியாக ஒரு மரபாகவே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஒலிம்பிக்கின் முக்கிய நோக்கம் அல்லது லட்சியமாக பார்க்கப்படுவது, போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்பது அல்ல, பங்கேற்பவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் ,என கூறிகின்றார் நவீன ஒலிம்பிக்கின் நிறுவனரான டி கோபர்டின்.

ஒலிம்பிக்கின் அடிப்படை கோட்பாடு விரைவு, உயர்வு, துணிவு. ஒலிம்பிக்கில் பங்கேற்கும் விளையாட்டு நட்சத்திரங்கள் எடுக்கும் உறுதி மொழி, “ஒலிம்பிக் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு, எவ்வித தவறான செயலிலும் ஈடுபடாமல், உண்மையான விளையாட்டு உணர்வுடன் நடந்து கொள்வேன் என்பதாகும்.

மற்றும் விளையாட்டின் பெருமையை காப்பதாகவும், தான் சார்ந்த நாட்டை பெருமைப்படுத்துவதாகவும் எனது செயல்பாடுகள் இருக்கும்” என்பதாகும். இதுவே ஒலிம்பிக்கின் நோக்கத்தை நமக்கு தெளிவாக புரிய வைக்கிறது.

நவீன ஒலிம்பிக் நடைபெற்ற இடங்கள்

1896 இல் கிரேக்கத்தின் நாட்டில் ஆரம்பமாகி தொடர்ந்து ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்றது. 2016 இல் பிரேஸிலின் ஜெனிரோ நகரிலும், இறுதியாக, 2020 இல் ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்றது.

You May Also Like :
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு
இந்தியாவின் வளர்ச்சி கட்டுரை