வள்ளலார் வாழ்க்கை வரலாறு

vallalar history in tamil

சித்தர் என்போர் வீடுபேறு அடைந்தவர்கள் ஆவார்கள். அதாவது அட்டமாசித்தி யோகங்களை பெற்றவர்கள். சித்தர்கள் மனிதர்களின் மீது மட்டுமல்ல மற்ற எல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்தக் கூடியவர்கள். அப்படி “வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்” என பாடியவர் வள்ளலார்.

சமயத்துறையில் சாதி வேறுபாடு முதலிய எல்லா வேறுபாட்டையும் கடந்து சமரச சன்மார்க்க நெறியான வைணவர்களின் திருமால் நெறியையும், சைவர்களின் சித்தாந்த நெறி இணையும் இணைக்கும் பாலமாக காணப்பட்டவர் வள்ளலார் ஆவார்.

இயற்பெயர்இராமலிங்கம்
சிறப்பு பெயர்திருவருட் பிரகாச வள்ளலார்
பிறந்த ஆண்டு1823 அக்டோபர் 5
பிறந்த இடம்சிதம்பரத்திற்கு அருகிலுள்ள மருதூர்
தாய்சின்னம்மை
தந்தைராமையா பிள்ளை
இறப்பு1874 ஜனவரி 30

வாழ்க்கையும் கல்வியும்

இராமலிங்க அடிகளார் சிறு குழந்தையாய் இருந்தபோதே இவர் ஒரு தெய்வப்பிறவி என்பதற்கான அறிகுறிகள் அவருடைய பெற்றோர்களுக்கு தென்பட்டன.

இவர் ஐந்து வயது குழந்தையாக இருந்தபோது இவரது பெற்றோர் சிதம்பரம் கோவிலில் நடராஜரின் தரிசனத்தை காண சென்ற போது அங்கு நடராஜப்பெருமானுக்கு காட்டப்படும் தீபாராதனையை கண்டு மகிழ்ச்சியில் சிரித்தார்.

அப்போது அங்கிருந்த கோவிலின் அர்ச்சகர்கள் ராமலிங்கத்தை கண்டு அவர் ஒரு தெய்வக் குழந்தை என அவரது பெற்றோரிடம் கூறினார். சிறிது காலத்தின் பின், இவரது தந்தை இறந்து விட சென்னையில் குடியேறி தனது அண்ணனாரின் வளர்ப்பில் வளர்ந்தார்.

இவர் 9 வயது வரை பாடசாலை செல்வதில் ஈடுபாடு காட்டாது கந்தகோட்டத்து முருகனை சேவித்து பாடல்கள் பாடிய வண்ணம் திரிந்தார். இதனால் அவரது அண்ணனான சபாபதி தம்பியின் போக்கில் சினம் அடைந்தார். அவரை வீட்டில் சேர்ப்பதும், உணவளிப்பதும் கூடாது என்று தடை விதித்தார்.

ஆனால், அண்ணனுக்கு தெரியாமல் அண்ணியார் அவருக்கு உணவளிப்பாள். சபாபதிப்பிள்ளை நோயுற்று இருந்த பொழுது அவருக்கு பதிலாக சொற்பொழிவை நிகழ்த்தி அவை மக்களை மகிழ வைத்தார்.

அன்று முதல் மக்கள் இராமலிங்கம் அவர்களின் சொற்பொழிவை கேட்க விரும்பினார்கள். இவ்வாறு ஒரு சமயம் இராமலிங்க அடிகளின் சொற்பொழிவை மறைந்து இருந்து அவரது அண்ணன் செவிமடுத்தார்.

அதை கேட்டவுடன் இறைவனின் துணையுடனே இவ்வாறு சொற்பொழிவை நிகழ்த்துகிறான் என்று எண்ணி பீதி அடைந்த அன்று முதல் தம்பியை தெய்வமாகவே கருதினார்.

பின்னர், ஒரு கட்டத்தில் அண்ணியின் வேண்டுகோளுக்கு இணங்க ராமலிங்கம் வீட்டுக்கு திரும்பியதோடு படிப்பை தொடரவே செய்தார். படிப்பதற்காக நூல்களையும், எழுதுகோல்களையும் பெற்றுக் கொண்டு தனது அறைக்குள் நுழைந்து அறைக்குள் இருந்த கண்ணாடியின் முன் அமர்ந்து அதிக நேரம் தியானம் செய்வர்.

ராமலிங்கம் அடிகளை மணவாழ்க்கையில் ஈடுபடுத்த விரும்பிய, அவரது தமையனார் தனம்மாள் என்கிற அவர்களது உறவுக்காரப் பெண்ணை அவருக்கு திருமணம் செய்து வைத்தார்.

ஆனால், ராமலிங்கம் தனது மனைவியை விட்டு விலகி இல்லறத் துறவியாகவே வெள்ளை ஆடையை உடுத்தி ஆடம்பரங்களை அறவே வெறுத்து வாழ்ந்து வந்தார். மிகவும் தீவிர ஆன்மிக தொண்டில் ஈடுபட்டிருந்த இராமலிங்க அடிகளார் அந்த முருகப்பெருமான் அருளால் ஞானம் அடைந்தார்.

மக்களின் பசிப்பிணியே சமுதாயத்தில் அனைத்து சீர்கேடுகளுக்கும் காரணம் என்று அறிந்து, பசித்த மக்களுக்கு அன்னதானம் இடும் “சத்திய ஞான சபை”யை வடலூரில் நிறுவினார். இதன் காரணமாக மக்களால் “வள்ளலார்” என அன்புடன் அழைக்கப்பட்டார்.

அற்புத நிகழ்வுகள்

அடிகளாரின் மூன்று அல்லது நான்கு வயதில் திண்ணையில் உறங்கிக் கொண்டிருந்த பொழுது திண்ணையில் இருந்து நழுவி விழுந்தார். அப்போது கீழே விழாமல் நடராசப் பெருமான் காக்க பெற்றார்.

ஒரு நாள் அடிகள் வியாசர்பாடிக்கு சென்று திரும்பியபோது, பாம்பு ஒன்று குறுக்கிட்டது. உடனிருந்த அனைவரும் அஞ்சியோட, அடிகள் அசையாது நிற்க பாம்பு அவரது காலை சுற்றிக்கொண்டது. அடிகள் அதனை செல்லும்படி கூற, அது ஏதும் செய்யாது அகன்று செல்ல செய்தார்.

பல ஆண்டுகளாக வாத நோயால் வருந்திய ஒருவர் அடிகளிடம் தன் துன்பத்தை விண்ணப்பித்துக் கொள்ள, அடிகள் திருநீறு அளித்தார். அதன் மகிமையால் அவரின் நோய் குணமாகியது.

ஓர் இல்லத்தில் தீப்பற்றி எரிந்தபோது, அடிகள் இருந்த இடத்திலிருந்தே தமது மேலாடையை வீச தீ அணைந்தது.

கோடைகாலத்தில் தருமச்சாலைக்கு வந்தவர்கள் வெப்பம் தாங்கமுடியாமல் வருந்துவதை கண்ட அடிகள் ஒரு செம்பு நீரைத் தனது காலில் ஊற்றும்படி செய்தார். அவ்வாறு செய்ததும் சிறிது நேரத்தில் மேகங்கள் திரண்டு மழை பொழிந்தது.

இயற்றிய நூல்கள்

  • ஜீவகாருண்யம்-1, ஜீவகாருண்யம்-2, ஜீவகாருண்யம்-3 எனும் ஜீவகாருண்ய ஒழுக்கம் நூல்களையும்
  • திருவருண் மெய்ம்மொழி, அருள்நெறி, பேருபதேசம், நித்திய கரும விதி, உபதேசக் குறிப்புகள், மனு முறைகண்ட வாசகம், தொண்டமண்டல சதகம் போன்ற உரைநடை நூல்களையும்
  • திருவருட்பா, முதல் ஐந்து திருமுறைகள், ஆறாம் திருமுறை, மரணமில்லா பெருவாழ்வு சம்பந்தப்பட்ட பாடல்கள்
  • திருவருட்பா உரை, சின்மய தீபிகை,அகவல் உரை விளக்கம், ஒழிவில் ஒடுக்கம், சித்தி வளாகம்

போன்ற நான்காயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை வள்ளலார் எழுதியுள்ளார்.

அத்துடன் மூலிகை குண அட்டவணை, சஞ்சீவி மூலிகைகள் போன்ற மருத்துவ குறிப்பு நூல்களையும் வள்ளலார் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இராமலிங்க அடிகள் கொள்கைகள்

  • கடவுள் ஒருவரே அவர் அருட்பெரும்ஜோதி வடிவானவர்
  • புலால் உண்ணக்கூடாது
  • எந்த உயிரையும் கொல்லக்கூடாது
  • இறந்தவர்களை எரிக்கக் கூடாது அவர்களுக்கு சமாதி வைத்தல் வேண்டும்
  • இனம், மதம், மொழி, சாதி முதலிய வேறுபாடுகள் கூடாது
  • எதிலும் பொது நோக்கம் வேண்டும்
  • பசித்தவர்களுக்கு சாதி மத இன வேறுபாடின்றி உணவளித்தல் வேண்டும்
  • சிறுதெய்வ வழிபாடு என்ற பெயரில் பலி இடுதல் கூடாது அனைத்து உயிர்களும் எம் உறவுகளே என்று செயற்படுதல் வேண்டும்

போன்ற கொள்கைகளை தாமும் கடைபிடித்தும் தமது சீடர்களுக்கும், மக்களுக்கும் வலியுறுத்தினார்.

You May Also Like :
கணக்கன்பட்டி சித்தர் வரலாறு
வைகாசி விசாகம் வரலாறு