வைகாசி விசாகம் வரலாறு

vaikasi visakam history tamil

முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் வைகாசி விசாகமும் ஒன்றாகும். ” வைகாசி விசாகம்” என்பது முருகக் கடவுள் அவதாரம் செய்த திருநாளாகும்.

வசந்த காலத்தின் ஆரம்ப மாதமான வைகாசி மாதத்தில் வருகின்ற விசாக நட்சத்திரம் சிறப்பு வாய்ந்ததாக காணப்படுகிறது.

இந்நாளிலே ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு சேர்ந்தது என்றும் இதனாலேயே முருகக்கடவுள் ஆறுமுகங்களுடன் காட்சி அளிக்கின்றார் என்பதும் ஐதீகமாக காணப்படுகிறது.

புத்த பெருமான் பிறந்ததும் அவருக்கு ஞானம் கிடைத்ததும் இத்திருநாளிலே ஆகும்.

வைகாசி விசாக புராணக்கதை

பிரம்மனின் பேத்தியும் தட்சனின் மகளுமான தாட்சாயிணியை சிவபெருமான் திருமணம் செய்து கொண்டார். ஒருமுறை தட்சன் சிவபெருமானை அழைக்காமல் அவமானப்படுத்தினார்.

இதனால் கோபமடைந்த தாட்சாயிணி அக்னியில் விழுந்து உயிர் துறந்தார். பிறகு சிவபெருமான் தம் அவதாரமான வீரபத்திரரை அனுப்பி யாகசாலையும், தட்சணையும் அழித்தார். பிறகு சிவபெருமான் தியானத்தில் ஈடுபட ஆரம்பித்தார்.

“தாரகன்” என்ற அசுரன் பிரம்ம தேவரிடம் சிவபெருமானின் புதல்வனைத் தவிர வேறு எவராலும் எமக்கு அழிவு நேரக் கூடாது என்று வரம் பெற்றான். இதனால் கலக்கமடைந்த தேவர்கள் சிவபெருமானின் தியானத்தை கலைக்க காமதேவனை அனுப்பினர்.

அப்போது சிவபெருமான் தனது மூன்றாவது கண்ணைத் திறந்தார். அதிலிருந்த வெளிப்பட்ட தீப்பொறி காமதேவனை தகனம் செய்தது.

பிறகு அந்த தீப்பொறி சரவணப் பொய்கையில் ஆறு பகுதிகளாக விழுந்தது. பின்னர் ஆறு குழந்தைகளாக உருப்பெற்றது. இந்நாளே வைகாசி விசாகத் திருநாள் ஆகும்.

வைகாசி விசாகம் சிறப்புகள்

வைகாசி விசாகம் முருகனின் அவதார நாளாக கொண்டாடப்படுகிறது அத்துடன் எமதர்மராஜனின் அவதார தினமாகக் கருதப்படுகிறது. எனவே இந்நாளில் விரதம் மேற்கொண்டு வழிபாடு செய்வதால் நோய் நீங்கி நீண்ட ஆயுள் கிடைப்பதாகவும் கருதப்படுகிறது.

மகாபாரதத்தின் வில் வீரனான அர்ஜுனன் பாசுபத ஆயுதத்தை சிவபெருமானிடம் இருந்து பெற்ற நாள் வைகாசி விசாகம் ஆகும்.

திருமழப்பாடி எனும் ஊரில் சிவபெருமான் மழு ஏந்தி திருநடனம் புரிந்ததும் இந்நாளிலே.

பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் பிறந்த தினமும் இந்நாளே ஆகும்.

சோழ சக்கரவர்த்தி இராஜ ராஜ சோழனின் சரித்திரத்தை நாடகமாக ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருநாளில் நடத்தும், நாடகக் கலைஞர்களுக்கு ஊதியமாக நெல் வழங்கிட ஆணையை இராஜேந்திர சோழன் பிறப்பித்து இருந்ததாக தஞ்சை பெரிய கோவிலில் உள்ள கல்வெட்டு செய்தி ஒன்று குறிப்பிடுகிறது.

வடலூரில் ராமலிங்க அடிகளார் சத்ய ஞான சபையை நிறுவியது இந்நாளில் தான் பெரும்பான்மையான கோவில்களில் உற்சவமும் இந்நாளிலே நடத்தப்படுகிறது.

வைகாசி விசாகத்தன்று பிறந்தவர்கள் அறிவில் சிறந்தவர்களாகவும் இருப்பார்கள் என்று கருதப்படுகிறது.

வான்மீகி ராமாயணத்தில் விசுவாமித்திரர் இராம லட்சுமணர்களுக்கு குமரனின் பிறப்பு மற்றும் பெருமைகளை கூறுவார் மேலும் இதனை கூறுபவர் மற்றும் கேட்பவர்களுக்கு பாவம் நீங்குவதாக சொல்லுவார்கள். இந்நிகழ்வை குமாரசம்பவம் என்று குறிப்பிடுகின்றார். இதனைப் பின்பற்றியே வடமொழிக் கவிஞர் காளிதாசர் முருகனின் பிறப்பு மற்றும் அவரின் பெருமைகள் பற்றி கூறி அந்நூலிற்கு குமாரசம்பவம் என பெயரிட்டுள்ளார்.

சித்தார்த்தர் எனும் கௌதம புத்தர் பிறந்த நாளும் அவர் ஞானத்தை அடைந்த நாளும் வைகாசி பௌர்ணமி அன்று கொண்டாடப்படுகிறது. இதனையே புத்த பூர்ணிமா என்று அழைக்கின்றனர்.

பூஜை முறை

வைகாசி மாசம் என்பது வசந்தகாலம் எனப்படும் இளவேனிற் காலத்தின் பிற்பகுதி ஆகும். எனவே வைகாசி விசாகத்தில் கோயில்களில் வசந்த உற்சவ விழாக்கள் நடத்தப்படுகின்றன.

இளவேனிற் காலத்தில் இவ்விழா நடைபெறும் அதனால் திருச்செந்தூரில் கருவறையில் தண்ணீர் கட்டி நிற்கும் படி செய்து இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்து, சிறுப்பருப்புப்பாயசம், நீர்மோர், அப்பம் முதலியவற்றைப் படைத்து உஷ்ண சாந்தி உற்சவம் அதாவது வெப்பம் தணிக்கும் விழா என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஆலயம் செல்ல முடியாது வீடுகளில் உள்ளவர்கள் விரதமிருந்து, தமது சுவாமி அறையில் உள்ள முருகனப் பெருமானது விக்கிரகத்திற்கு அல்லது முருகப்பெருமானது வேலாயுதத்துக்கு பால் அபிஷேகம் செய்து சிறுப்பருப்புப்பாயசம் படைத்து வழிபாடு செய்கின்றனர்.

வைகாசி விசாகம் பலன்கள்

வைகாசி விசாக விரதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் தம்பதியினராய் ஆறு நெய் விளக்கேற்றி முருகப் பெருமானது துதிப்பாடல்களை பாராயணம் செய்வதன் மூலம் குழந்தை பாக்கியம் கிட்டும். மற்றும் பிறக்கவிருக்கும் குழந்தை முருகப்பெருமானின் அருட்கடாட்சத்துடன் பிறக்கும்.

பிற வேண்டுதலுக்காக அல்லது தொடர்ந்து முருக வழிபாடு ஆற்றுபவர்கள் இந்நாளில் விரதமிருந்து வழிபாடு செய்வதன் மூலம் முருகப்பெருமானது பூரணமான அனுக்கிரகத்தை பெற முடிகிறது.

You May Also Like :
திருவண்ணாமலை கோவில் வரலாறு
கணக்கன்பட்டி சித்தர் வரலாறு