விருந்தோம்பல் பற்றிய கட்டுரை

Virunthombal Katturai In Tamil

இந்த பதிவில் தமிழர்களின் பண்பாடுகளில் ஒன்றான “விருந்தோம்பல் பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

தனித்து உண்ணாமையே விருந்தோம்பலின் அடிப்படை ஆகும். அதுதான் மேலோரின் பண்பு ஆகும்.

விருந்தோம்பல் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. விருந்தோம்பல்
  3. விருந்தோம்பலின் அடிப்படை
  4. விருந்தோம்பல் பண்பாட்டின் மகுடத்திற்கான இலக்கிய சான்றுகள்
  5. விருந்தோம்பலுக்கு அவசியமானவை
  6. முடிவுரை

முன்னுரை

“நீரின்றமையா யாக்கைக் கெல்லாம் உண்டி கொடுத்தோ ருயிர் கொடுத்தோரே” என்று பாண்டிய நெடுஞ்செழியனை பாடும்போது குடபுலவியனார் கூறுகின்றார்.

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி, முச்சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த குடி, உலகுக்கே நாகரிகத்தையும் பண்பாட்டையும் கற்றுக் கொடுத்த பண்பாட்டின் மகுடமாய் விளங்குவது விருந்தோம்பல் ஆகும்.

தமிழர் பண்பாட்டில் முக்கியமாக விளங்கும் விருந்தோம்பல் பற்றி இக்கட்டுரையில் நோக்கலாம்.

விருந்தோம்பல்

விருந்தோம்பல் அறத்தின் வழியாகும். முகமலர்ந்து வரவேற்று, ஆசையாய் பேசி, உண்ண உணவும், தங்க இளைப்பாற இடமும் கொடுத்து, அன்பு காட்டி பராமரித்து அனுப்புதல் விருந்தோம்பல் எனப்படும்.

தொல்காப்பியர் “விருந்தே புதுமை” என்றார். முன்பின் தெரியாதவர்களாக வீட்டிற்கு வருபவர்களே உண்மையான விருந்தினர்கள், அவர்களை தாம் நாம் முறையாக சிறப்பித்து கவனிக்க வேண்டும்.

விருந்தோம்பலின் அடிப்படை

தனித்து உண்ணாமையே விருந்தோம்பலின் அடிப்படை ஆகும். “உண்டால் அம்ம, இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும், இனிது எனத்தமியர் உண்டலும் இலரே” என்றார் புறநானூறு ஆசிரியர் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி.

அதாவது அமிழ்தமே கிடைத்தால் கூட அது இனிது நாம் மட்டும் உண்ணக்கூடாது, பிறருக்கும் கொடுத்து உண்ண வேண்டும். அதுதான் மேலோரினுடைய நல்லோரினுடைய பண்பாகும்.

விருந்தோம்பல் பண்பாட்டின் மகுடத்திற்கான இலக்கிய சான்றுகள்

விருந்தோம்பல் எமது பண்பாட்டின் மகுடம் என்று பல்வேறு பண்டையகால இலக்கியங்கள் எடுத்துயம்புகின்றன. அவை தொடர்பாக நோக்குவோம்.

திருவள்ளுவர் தனது 133 அதிகாரத்தில் 9 வது அதிகாரமாக விருந்தோம்பல் பற்றிக் கூறியுள்ளார். வருபவர்களை முகமலர்ந்து வரவேற்க வேண்டும்.

“மோப்பம் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து” என்றார் திருவள்ளுவர். அதாவது அனிச்ச மலர் முகர்ந்து பார்த்தால் வாடிவிடும். அதுபோலவே முகம் திரிந்து மகிழ்ச்சி இல்லாமல் வேறுபாட்டுடன் அவ்விருந்தினர்களை நோக்கினால் அவ்விருந்து எவ்வளவு அறுசுவை உணவு படைக்கப்பட்டாலும் கசந்து விடும்.

இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகியை விட்டு மாதவியிடம் சென்றான். இதனால் கண்ணகி வருத்தப்படுகிறாள் எதற்காக என்றால் தான் பரம்பரை பரம்பரையாக சம்பாதித்த தனது தந்தையின் செல்வம் போயிட்டே என்று இல்லை,

தான் உயிருக்கு உயிராக மதித்த கணவன் தன்னை விட்டு போய்விட்டான் என்று இல்லை, அதை விட வெகுதியாக கவலைப்படுகிறாள் கணவனைப் பிரிந்து இருக்கும் தான் விருந்தினர்களை வரவேற்று உபசரிக்க முடியாத துர்ப்பாக்கியவாதியாகி விட்டேன் என்று வருந்துகிறாள்.

அத்துடன் “தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை” என்றும் கண்ணகியின் வருத்தம் இந்நூலில் எடுத்துக் காட்டப்படுகிறது.

கம்பர் தனது கம்பராமாயணத்தில் “பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால் வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும் விருந்தும் அன்றி விளைவன யாவையே” என்றார். அதாவது கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள் வருந்தி வந்தோர்க்கு விருந்தோம்பல் செய்தார்கள் என்றார்.

“அல்லல் ஆயினும் விருந்து வரின் உவக்கும்” என்கிறது நற்றிணை நூல். இரவு நேரம் என்றாலும் விருந்தினர் வருவதை பார்த்தால் அந்த வீட்டின் இல்லதரசன், இல்லத்தரசிகள் முகம் மலர்ந்து அகம் மகிழ்கிறது என்கிறது. இவ்வாறாக விருந்தோம்பலின் சிறப்புக்களை எமது இலக்கிய நூல்கள் சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளன.

விருந்தோம்பலுக்கு அவசியமானவை

விருந்தோம்பலுக்கு அவசியமானது பணம் அல்ல அதனையே “மனம் இருப்பவனிடம் பணம் இருப்பதில்லை, பணம் இருப்பவனிடம் மனம் இருப்பதில்லை” என்கின்றனர்.

விருந்தோம்பலுக்கு மனம் என்ற ஒன்று இருந்தால் போதும் பணம் என்பது பெரிய விஷயம் அல்ல.

புறநானூறு காட்டும் பாடல் ஒன்றில் இல்லத்தரசி வீட்டில் இருக்க வீட்டிற்கு விருந்தினர் வருகின்றனர். வீட்டில் சமைப்பதற்கு ஒன்றுமில்லை. என்ன செய்வது என்று யோசித்த போது சிந்தனையில் உதிக்கிறது.

விதைப்பதற்கு வைத்திருந்த விதை திணையை உரலில் இட்டுக் குத்தி எடுத்து விருந்தினருக்கு விருந்து கொடுக்கின்றாள். இதனை “குரல்உணங்கு விதைத்திணை உரல்வாய்ப் பெய்து சிறிது புறப்பட்டன்றோ இவள்” என்கிறது புறநானூறு பாடல்.

அவ்வாறே பண்டையகால மக்கள் விருந்தினர்களை உபசரித்து அவர்களை வழியனுப்பும் போதும் கூட அவர்களை ஏழடி நடந்து சென்று வழியனுப்புவார். இதனையே “காலின் ஏழடிப் பின்சென்று” பொருநராற்றுப்படை.

முடிவுரை

வீட்டிற்கு வந்த விருந்தினர்களுக்கு உணவு கொடுத்து உபசரிப்பதே தமிழ் மக்களின் பண்பாகும். “இல்லை என்பவர்களுக்கு உணவளிப்பது போல வேறு தர்மம் வேறெதுவுமேல்லை”.

நாமும் மற்றவர்களுக்கு எம்மால் முடிந்த அளவுக்கு உணவளித்து அவர்களை உபசரிப்போமாக.

You May Also Like:
தமிழ் மொழியின் பெருமைகள் கட்டுரை
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை கட்டுரை