தமிழ் மொழியின் தொன்மையும் சிறப்பும் கட்டுரை

Tamil Mozhiyin Sirappu Katturai In Tamil

இந்த பதிவில் “தமிழ் மொழியின் தொன்மையும் சிறப்பும் கட்டுரை” பதிவை காணலாம்.

மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியான நம் தாய்மொழியான தமிழ் மொழியானது தொன்மையையும் சிறப்பையும் தன்னகத்தே கொண்ட இலக்கிய வளம் பொருந்திய செம்மொழியாகும்.

தமிழ் மொழியின் தொன்மையும் சிறப்பும் கட்டுரை

தமிழ் மொழியின் தொன்மையும் சிறப்பும்

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. தமிழ் மொழியின் தொன்மை
  3. தமிழின் வளர்ச்சி
  4. தமிழின் சிறப்பு
  5. தமிழ் மொழியின் இன்றைய நிலை
  6. தமிழ் மொழியைக் காப்போம்
  7. முடிவுரை

முன்னுரை

உலகில் வாழும் உயிரினங்களில் மனிதன் மட்டுமே மொழியினைப் பயன்படுத்துகின்றான். மொழியானது உணர்வுகளையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்வதற்கு அவசியமாகும். அவ்வகையில் உலகின் முதல் மொழி என்று தமிழ்மொழி போற்றப்படுகின்றது.

தமிழ் மொழியினைப் பாரதியார் “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்ˮ என்று கூறி தமிழ் மொழியினைச் சிறப்பித்துள்ளார்.

பாரதியார் 14 மொழிகளில் புலமை பெற்றிருந்தும் அவர் தமிழை உயர்வாக கூறியுள்ளமை தமிழின் தனித்துவத்தையும் சிறப்பினையும் பிரதிபலிக்கின்றது.

சங்கம் வைத்து வளர்க்கப்பட்ட ஒரே மொழி தமிழ் மொழியாகும். உலகின் பிரபலமான நூல்களான திருக்குறள், தொல்காப்பியம் என்பன தமிழ் சங்கங்களில் தான் முதன் முதலில் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

இக்கட்டுரையில் தமிழ் மொழியின் தொன்மை⸴ சிறப்பு பற்றி நோக்கலாம்.

தமிழ் மொழியின் தொன்மை

தமிழ் மொழியின் முதல் தோற்றம் 500,000 மூவெழுத்துச் சுட்டெழுத்துக்களிலிருந்து சொற்கள் தோன்றியதே ஆகும். தமிழ் தோன்றிய இடமாகக் குமரிக்கண்டம் விளங்குகின்றது. அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது.

திராவிட மொழிகளில் தமிழே தொன்மையானது. தமிழ் மொழியின் தோற்றத்தையும் அதன் வரலாற்றையும் காலத்தையும் பழந்தமிழ்⸴ இடைக் காலத்தமிழ், தற்காலத்தமிழ் என பிரிக்கலாம்.

இந்தியாவில் மிகவும் தொன்மையான கல்வெட்டுக்களை பெற்ற மொழியாக தமிழ்மொழி விளங்குகின்றது.

தமிழ் மொழியின் எழுத்து வடிவங்களில் மிகமிகத் தொன்மை வாய்ந்தது வட்டெழுத்து முறையே வளைந்த கோடுகள் அதிகமாக எழுத்துக்களில் பயன்படுத்தப்படுவதனால் இம்முறை வட்டெழுத்து எனப் பெயர் பெற்றது.

தமிழின் வளர்ச்சி

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த சங்ககாலம் முதல் இன்று வரை தமிழ் நீண்ட நெடிய வளர்ச்சியை கொண்டிருக்கின்றது. 2004ஆம் ஆண்டு தமிழ் மொழி “செம்மொழிˮ என்ற பெருமையைப் பெற்றது. தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் பெருமைக்கும் இதைவிட ஒரு கௌரவிப்பு வெரேதுவும் தேவையில்லை எனலாம்.

காலம் காலமாக எழுந்த இலக்கியங்கள் தமிழ் மொழியின் வளர்ச்சியைத் தொடர்ந்தும் பேணின. பின்பு வந்த புது கவிதைகள், கட்டுரைகள், நாவல்கள், சிறுகதைகள் எனப் பலவகை இலக்கிய வடிவங்கள் தமிழில் தோன்றி பெருமை சேர்த்தன.

வள்ளுவன்⸴ கம்பன்⸴ பாரதி போன்ற பல்லாயிரக்கணக்கான இலக்கிய கர்த்தாக்கள் தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் பங்காற்றிய பெருமை உடையவர்கள். பல மொழியின் ஆதிக்கம் ஏற்பட்டாலும் நவீன காலத்திலும் தமிழ் மொழியின் வளர்ச்சி மங்கவில்லை.

தமிழின் சிறப்பு

தமிழ்மொழியின் சிறப்பையும் தொன்மையையும் உண்மை வரலாற்றையும் எடுத்துரைக்கும் ஆதாரங்கள் மிதமிஞ்சி கிடக்கின்றன.

திராவிட மொழிகளில் தாய் மொழியாக கருதப்படுகின்ற நம் தமிழ்மொழி இலக்கியவளம் பெற்ற ஒரு மொழியாகும். இலக்கியங்களும் இலக்கண நூல்களும் பெருகி இருந்தமையால் தமிழ்மொழி திருந்திய மொழியாக அதாவது திருத்தம் செய்யப்பட்ட மொழியாக சிறப்புற்றது.

உலகில் உள்ள பல்வேறு மொழிகளுக்கும் அடிப்படை மொழியாக தமிழ்மொழி விளங்குகின்றது. குறிப்பாக தென்னமெரிக்காவின் மாயன் நாகரீகத்தினர் பேசிய மொழியானது தமிழ் மொழியிலிருந்து பிரிந்த ஒரு மொழியாகும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உலகில் வேறு எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு அதாவது தமிழ் மொழியை மொழியாக மட்டுமல்லாது கடவுளாகவும் தமிழ் மக்கள் வழிபடுகின்றார்கள்.

தமிழ் நாட்டில் காரைக்குடிக்குப் பக்கத்தில் ”தமிழ் தாய்” என்னும் பெயரில் தமிழ் மொழிக்கு கோவில் அமைத்து கடவுளாக வழிபடுகின்றனர். பிரான்சைத் தலைமையிடமாகக் கொண்ட யுனெஸ்கோவினுடைய “Memory of the world”ல் தமிழ்மொழியும் இடம்பெற்றுள்ளது.

தமிழ்மொழியின் தற்போதைய நிலை

தற்போதுள்ள 21ஆம் நூற்றாண்டில் தமிழ் மொழியின் நிலை எவ்வாறு உள்ளது என்பது அனைவர் மனதிலும் எழும்பும் ஒரு கேள்வியாககும். இந்திய மொழிகளிலே முன்னோடி மொழியாகக் கருதப்படும் தமிழ்மொழியின் தற்போதைய நிலை பற்றி அறிவது அவசியமாகும்.

பழங்காலத்தில் நம் தாய்மொழியாகிய தமிழ்மொழி பல இன்னல்களையும்⸴ இடையூறுகளையும்⸴ புறமொழித் தாக்கங்களையும் சமாளித்து அதன் தூய தன்மை மாறாமல்⸴ குன்றாமல்⸴ ஒளி மங்காமல் உயரிடத்தைப் பேணிய உத்தம மொழியாகும்.

ஆனால் தற்போது தமிழ்மொழி பிறமொழித் தாக்குதல்களால் சிக்கித் தவித்துக் கொண்டு இருக்கின்றது. குறிப்பாக ஆங்கிலம் மொழியின் தாக்கத்தால் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

தமிழ் மொழியைக் காப்போம்

தமிழர்களின் உயிர் மூச்சாக விளங்கும் தமிழ்மொழி இன்று மேலை நாகரிகத்தை பின்பற்றும் பெரும்பான்மை தமிழ் மக்களால் தமிழ் பேசுவது அவமானம் எனக் கருதும் அளவிற்கு அழிவடைந்து வருகின்றது.

எந்தவொரு மக்களினதும் பாரம்பரியமான கலாச்சாரம் அவர்களது மொழியை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்படுகின்றது. எனவே மொழியின் அழிவு கலாச்சாரத்தின் இருப்பை கேள்விக்குறியாக்கி விடும்.

தமிழ் மொழியில் பிற மொழிகளின் ஊடுருவல் தூய தமிழ் மொழியை கலப்படமாக்கியுள்ளது. இவ்வாறான சவால்களை தமிழ்மொழி எதிர்நோக்குவதனால் தாய்மொழியை பாதுகாப்பதன் அவசியத்தை அனைவரும் உணர வேண்டும். இது நமது தலையாய கடமை என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

தமிழ்மொழியின் சிறப்பை முன்னோர்கள் பேணிப் பாதுகாத்து வந்ததுடன் மொழி வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்டுள்ளனர். இவர்கள் வழி நாமும் பயணிப்பது காலத்தின் தேவையாகும்.

தமிழ் மொழியினை பாதுகாக்க சில வழிகள்

  • தாய்மொழிக் கல்வியை நாம் ஊக்குவித்தல் வேண்டும்
  • தமிழின் சிறப்பை எடுத்துரைக்கும் பல நூல்கள் இயற்றப்பட வேண்டும்.
  • தமிழின் சிறப்பை எடுத்துரைக்கும் நூல்களை பாடசாலை பாட நூல்களில் உள்வாங்குவது சிறப்பாகும்.
  • சிறுவயது முதல் தமிழ் மொழியை குழந்தைகளுக்கு பேச கற்று தரவேண்டும்.
  • தமிழின் அரிய நூல்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

முடிவுரை

நம் தாய்மொழியான தமிழ் மொழியானது தொன்மையையும் சிறப்பையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இதனை மேலும் வளர்த்தெடுப்பது எமது கடமையாகும்.

தமிழ் மொழி என்பது பேச்சு மொழி அல்ல அது தமிழர்களின் அடையாளம் என்பதை உணர்ந்து அதனை பாதுகாப்போமாக.

You May Also Like:

தமிழர் பண்பாடும் கலாச்சாரமும் கட்டுரை