எனது கனவு பள்ளி கட்டுரை தமிழ்

Enathu Kanavu Palli Katturai In Tamil

ஒவ்வொரு மாணவர்களுக்கும் தங்கள் பள்ளி எவ்வாறு இருக்க வேண்டும் என்ற ஒரு கனவு இருக்கும் அவ்வாறே எனக்கு என்னுடைய பள்ளி எவ்வாறு இருக்க வேண்டும் என்ற கனவு உண்டு. இதை “எனது கனவு பள்ளி கட்டுரை தமிழ்” என்ற தலைப்பில் இங்கு காணலாம்.

பள்ளி என்பது மாணவர்களது மனதில் நல்ல சிந்தனைகளை உருவாக்கி அவர்களை நல்வழிப்படுத்தி சமூகத்தில் உயர்ந்த இடத்திற்கு இட்டுச் செல்ல வேண்டும். ஒரு சமூகத்தின் வளர்ச்சி பள்ளிகளிலேயே தங்கியிருக்கின்றது.

பாடங்களை கற்பிக்கும் இடமாக மட்டும் பள்ளிகள் இருக்க கூடாது மாணவர்களின் ஆளுமையை வளர்த்தெடுத்து சமூக அக்கறை உள்ள சிறந்த பிரஜைகளாக உருவாக மாணவர்களை வழிப்படுத்த வேண்டும்.

பாடசாலை எப்போதும் அமைதியான சூழலில் இருக்க வேண்டும். அதன் சூழல் தூய்மையாகவும் மாண்வர்களின் கல்விக்கு இடையூறுகள் இல்லாத வகையிலும் அமைந்தால் தான் மாணவர்களால் முழு மனதுடன் கவனம் செலுத்த முடியும்.

எனது கனவு பள்ளி

எனது கனவு பள்ளி கட்டுரை தமிழ்

குறிப்புச் சட்டகம்

  1. முன்னுரை
  2. பள்ளியின் அமைப்பு
  3. மைதானம்
  4. எனது கனவு ஆசிரியர்கள்
  5. வகுப்பறை நண்பர்கள்
  6. அடிப்படை வசதிகள்
  7. முடிவுரை

முன்னுரை

உலகை வெல்ல ஆயுதம் வேண்டாம். கொஞ்சம் புத்தி நிறைய யுத்தி வேண்டும். அதை நமக்கு கற்றுக்கொடுக்கும் இடமே பள்ளி. இன்றைய பள்ளிகள் அதன் வடிவத்தையும்⸴ பாடத்திட்டத்தையும் கால மாற்றத்திற்கு ஏற்றவாறு மாற்றியுள்ளன.

ஆனால் புத்தகப் புழுவாக மட்டும் இருந்துவிடாமல் நவீன தொழில்நுட்பத்தை உள்வாங்கி வாழ்க்கை சிக்கல்களையும் மனித மனங்களின் முரண்பாடுகளையும் கையாளக் கற்றுக் கொள்ளும் இடமாகவும் பள்ளி இருக்க வேண்டும் என்பது எனது கனவாகும்.

அவ்வாறு நான் விரும்பும் எனது கனவுப் பள்ளியின் சிறப்பை இக்கட்டுரையில் காண்போம்.

பள்ளி

பள்ளியின் அமைப்பு

எனது கனவு பள்ளி ஏனைய பள்ளிகளை விட தனித்துவமானதாக இருக்கும். வகுப்பறைகள் வளர்ந்துவரும் தொழில்நுட்ப வசதிகளை உள்வாங்கியதாகவும்⸴ மாணவர்களின் கற்கும் எண்ணத்தை தூண்டும் வகுப்பறைகளாகவும் இருக்க வேண்டும். கணினியைப் பயன்படுத்தி இன்முகத்தோடு கற்பிக்கும் ஆசிரியர்கள் எனது கனவு பள்ளியில் இருப்பார்கள்.

வகுப்பறைகள் இயற்கையான காற்றோட்டம் நிறைந்ததாகவும் இருத்தல் நன்று. அத்தோடு அனைத்து வகுப்பறைகளிலும் மின்விசிறி வசதிகள்⸴ மின்குமிழ் வசதிகள் என்பனவும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

பள்ளியின் முகப்பில் வரிசையாக மரங்கள் இருக்க வேண்டும். பள்ளியின் அமைப்பு பாதுகாப்பானதாகவும்⸴ கண்களைக் கவரும் வகையிலும் இருக்க வேண்டும் என்பது எனது கனவு.

மைதானம்

பிரம்மாண்டமான அழகிய மைதானத்துடன் எனது கனவு பள்ளி இருக்க வேண்டும். ஒவ்வொரு விளையாட்டிற்கும் திறன் மிக்க பயிற்சி ஆசிரியர்கள் தனித்தனியாக பயிற்சியினை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.

பள்ளியின் ஒரு புறத்தில் அழகிய பூந்தோட்டம் அதன் நடுவே ஆரம்பக் கல்வி பயிலும் மாணவர்களுக்கான விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டிருக்க வோண்டும்.

மாணவர்கள் விழுந்தாலும் அடி படாத வகையில் மைதானம் புற்களாலும்⸴ கடற்கரை மணலாலும் நிரப்பப்பட்டு இருக்க வேண்டும். மாணவர்கள் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் விளையாடும் சூழலை விளையாட்டு மைதானம் ஏற்படுத்த வேண்டும்.

எனது கனவு ஆசிரியர்கள்

ஆசிரியர்கள் பெற்றோர்களின் அரவணைப்பில் இருப்பது போன்ற பாதுகாப்பை மாணவர்களுக்கு தர வேண்டும். நல்லவை எவை தீயவை எவை என சொல்லித் தந்து வழிநடத்த வேண்டுமென எதிர்பார்க்கின்றேன்.

“கேடில் விழுச் செல்வம் கல்வி…ˮ என்கின்றார் திருவள்ளுவர். அத்தகைய அழியாத சிறந்த செல்வத்தை ஆர்வமுடன் கற்கும் வகையில் கனிவுடனும்⸴ இன்முகத்துடன் பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் இருக்க வேண்டும். இதனால் மாணவர்கள் ஆர்வத்துடன் தினமும் பள்ளி செல்வார்கள்.

அத்தோடு அச்சமின்றி ஆசிரியரிடம் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற இயலும். ஐயம் திரிபுற கற்பதற்கு இத்தகைய வகுப்பறைச் சூழல் பெரிதும் துணைபுரியும் என எண்ணுகின்றேன்.

ஓவியம், பாட்டு, நடனம், விளையாட்டு, அறிவியல் ஆர்வத்தை ஊக்குவித்தல், களப்பயணம், கலைப் பொருட்கள் தயாரித்தல், கல்விச்சுற்றுலா, விவசாயம் செய்தலில் மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துதல் போன்றவற்றை ஆசிரியர்கள் ஊக்குவிப்பவர்களாக எனது கனவு ஆசியர்கள் இருக்க வேண்டும்.

வகுப்பறை நண்பர்கள்

என்னுடைய நண்பர்கள் எப்போதும் எனக்கு உறுதுணையாகவும்⸴ என்னுடன் ஒற்றுமையாக இருப்பவர்களாகவும்⸴ நல்ல பழக்கவழக்கம் உடையவர்களாகவும் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

அவர்களோடு இணைந்து நானும் என் பண்பை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். அவர்களுடன் இணைந்து படங்கள் வரைந்து வண்ணம் தீட்ட வேண்டும். ஓய்வு நேரங்களில் ஆடிப்பாடி மகிழ்ந்து கல்வியைக் கற்க வேண்டும்.

அடிப்படை வசதிகள்

எனது கனவு பள்ளியில் எல்லா விதமான அடிப்படை வசதிகளும் போதுமான அளவு கிடைக்கப்பெற வேண்டும்.

தரமான கருவிகளைக் கொண்ட அறிவியல் ஆய்வகங்கள், அறிவுத் திறனை மேம்படுத்திக் கொள்ளவும் அறிவுத் தேடலை ஊக்கப்படுத்திக் கொள்ளவும் நூலகம் இருக்க வேண்டும்.

எனது கனவு பள்ளியின் சிற்றுண்டிச்சாலை சுத்தமானதாகவும் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை கொண்டதாகவும் இருத்தல் வேண்டும்.

கழிவறைகள் சுத்தமானதாகவும் சுகாதார வசதிகளை பின்பற்றியதாக அமைக்கப்பட்டு இருத்தல் வேண்டும். கழிவறைகளைச் சுத்தம் செய்வதற்கென ஊழியர்கள் நியமிக்கப்படல் அவசியம்.

முடிவுரை

“எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்ˮ என்கின்றார் ஒளவையார். ஒருவரின் கண்களாக விளங்கும் கல்வியை பெற்றுத்தரும் பள்ளி கடவுள் வாழும் ஆலயமாக போற்றப்பட வேண்டும்.

பள்ளி என்பது உள்ளார்ந்த விருப்பங்களை நிறைவேற்றி மாணவர்களை நல்வழிப்படுத்தி உயர்ந்த இடத்திற்கு இட்டுச் செல்ல வேண்டும்.

ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்ˮ என்பதனை உணர வைப்பதாக எனது கனவு பள்ளி காணப்படும் என்பதில் சந்தேகமில்லை.

You May Also Like:

தமிழர் பண்பாடும் கலாச்சாரமும் கட்டுரை