தமிழர் பண்பாடும் கலாச்சாரமும் கட்டுரை

Tamilar Panpadu Katturai In Tamil

நமது முன்னோர்கள் சிறந்த பண்பாடுகளையும் கலாச்சாரத்தையும் பின்பற்றி ஆரோக்கியமான ஒழுக்கமான வாழ்வை வாழ்ந்தார்கள். ஆனால் இன்று மேலைநாட்டு நவநாகரிகத்தால் ஈர்க்கப்பட்டு நமது பண்பாடு கலாச்சாரங்களை மறந்து விட்டோம்.

இன்றைய தலைமுறையினரில் பெரும்பான்மையானவர்கள் தமிழர் கலைகள், கலாச்சாரங்கள் மற்றும் பண்பாடுகள் பற்றியும் அதன்பின் இருக்கும் அறவியல் பற்றியும் அறியாதவர்களாகவும் அதனை அறிய விரும்பாதவர்களாகவுமே இருக்கின்றனர்.

உலகில் உள்ள பல பண்பாடு கலாச்சாரங்களில் தமிழர் பண்பாடும் கலாச்சாரமும் சிறப்பினை பெறுகின்றது. ஒரு இனத்தின் அடையாளமாக இருக்கும் இவற்றை பாதுகாத்து நம் அடுத்த தலைமுறையினருக்கு கடத்த வேண்டியது நமது பொறுப்பாகும்.

தமிழர் பண்பாடும் கலாச்சாரமும் கட்டுரை

குறிப்புச் சட்டகம்

  1. முன்னுரை
  2. பண்பாடு
  3. கலாச்சாரம்
  4. எதிர்நோக்கும் சவால்கள்
  5. இளைய தலைமுறையினரது கடமை
  6. முடிவுரை

முன்னுரை

உலகில் உள்ள பல பண்பாடுகளில் சிறந்ததும்⸴ தொன்மையானதும் தமிழ் மக்களின் பண்பாடு ஆகும். பண்பாடும் கலாச்சாரமும் தமிழர் வாழ்க்கையில் ஆழமாக வேரூன்றியுள்ளது.

தமிழர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே பண்பாட்டிலும் கலாச்சாரத்திலும் சிறந்து விளங்கியுள்ளனர் என்பதனை சங்ககால இலக்கியங்கள் விளங்குகின்றன.

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பல காலமாகப் பேணப்பட்டு திருத்தப்பட்டு மேம்படுத்தப்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளன. இக்கட்டுரையில் தமிழர் பண்பாடும் கலாசாரமும் பற்றிக் காண்போம்.

பண்பாடு

பண்பாடு என்பது பண்படுவது எனலாம். பொதுவாகப் பண்பாடு மனிதனின் நடவடிக்கைகளை குறிக்கின்றது. நாகரிகத்தையும் பண்பாட்டையும் கற்றுக் கொடுத்த பெருமை தமிழுக்கு உண்டு.

மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை விட எவ்வாறு வாழக்கூடாது என்ற வாழ்வியலைக் கற்றுக்கொடுத்தது தமிழர் பண்பாடாகும். மொழிக்கு இலக்கணம் வகுத்த தமிழர்கள் மனித வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்து வாழ்ந்தனர்.

தமிழர் வாழ்வை அகவாழ்வு, புறவாழ்வு என இரண்டாக இலக்கணம் வகுத்து வாழ்ந்து வந்தமை உலகின் பண்பாடுகளின் சிகரமாக கருதப்படுகின்றது.

தமிழ் மொழி தோன்றிய காலம் முதலே மக்களின் பண்பாடு கலாச்சாரம் என்பன வளர்ச்சி அடைந்தன. பண்பாட்டின் கூறுகளாக வீரம்⸴ கலை⸴ விருந்தோம்பல்⸴ கற்புடமை⸴ வாழ்வியல்⸴ கொடை போன்ற பலவற்றை குறிப்பிடலாம்.

கலாச்சாரம்

தமிழர்களின் கலாச்சாரமானது தமிழ் மக்களின் மத்தியில் மட்டுமன்றி ஏனையவர்களிடமும் மதிப்புக்குரிய ஒரு கலாச்சாரமாக திகழ்கின்றது.

தமிழர் கலாசாரம் மொழி, இசை, ஆடை, பாரம்பரியம், கோவில்கள், நடனம்⸴ கல்வெட்டுகள்⸴ இலக்கியங்கள்⸴ பழக்கவழக்கங்கள்⸴ விருந்தினர் உபசரிப்பு⸴ சமய விழாக்கள் கைவைத்தியம் போன்ற பலவற்றில் மேலோங்கி காணப்படுகின்றது.

தமிழர்களின் கலாச்சாரத்தில் முன்னோர்கள் மிகப்பெரிய பங்களிப்பு செய்துள்ளனர். தமிழ் நாட்டில் உள்ள பல கோவில்களில் தமிழ்க் கலாச்சாரம் பிரதிபலிக்கின்றன. உதாரணமாக தஞ்சாவூர் கோவிலினைக் கூறலாம். கோவில்கள் தமிழர்களின் கட்டிடக் கலையின் சிறப்பினை வெளிப்படுத்துகின்றன.

அறிவியல் முறைகளுடன் கூடிய பழக்கவழக்கங்கள் என்பனவும் தமிழர் கலாச்சாரத்தின் மற்றுமொரு சிறப்பம்சமாகும். பாரம்பரியமான சமையல் முறைகள்⸴ விருந்து பரிமாறும் முறை⸴ விருந்தினரை உபசரிக்கும் முறை என்பனவும் உணவுப் பழக்க வழக்கங்களின் பெருமையை கூறுகின்றன.

இயல், இசை, நாடகம் போன்றன நம் கலாச்சாரத்தில் முக்கிய இடம் வகிக்கின்றது. கோலாட்டம்⸴ கும்மி⸴ காவடி, தெருக்கூத்து⸴ ஜல்லிக் கட்டு போன்றனவும் தமிழர்களுக்கே உரித்தான அம்சங்களாகும்.

எதிர்நோக்கும் சவால்கள்

இன்றைய உலகமயமாக்கல், மேலைநாட்டு கலாச்சார ஊடுருவல்⸴ தொடர்பாடல் வளர்ச்சி⸴ பயணம் போன்ற பல்வேறு அம்சங்கள் தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன.

ஆடைகள்⸴ வைத்திய முறை⸴ சமய விழாக்கள்⸴ பழக்க வழக்கங்கள் போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் தமிழர்களின் தூய பண்பாட்டுக் கலாச்சாரத்தினை காண்பது அரிதாக உள்ளது.

மேலை நாட்டு கலாச்சாரத்தின் ஊடுருவல் காரணமாகத் தமிழ்க் கலாசார உடைகள் மாறுபட்டு விட்டன. வைத்திய முறைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சித்த வைத்தியம் இன்று கிராமப்புறங்களில் ஒரு சில இடங்களில் மட்டுமே காணமுடிகின்றது.

வாழை இலையில் உணவு போடும் முறை தமிழர்களின் கலாச்சாரம் ஆகும். ஆனால் இன்று அம்முறை பெரிதளவு மாறிவிட்டது. விரதங்களைக் கடைப்பிடிக்கும் போது மட்டும் வாழை இலைகளில் உண்ணும் பழக்கம் ஏற்பட்டுவிட்டது. விருந்தோம்பல் முறையில் கூட மேலைத்தேய கலாச்சாரம் பின்பற்றப்படுவதைக் காணமுடிகின்றது.

தனது இனத்தினுடைய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டினை விட்டுக் கொடுப்பது பிறப்புரிமையை விட்டுக் கொடுப்பதற்கு சமம் ஆகும்.

இளைய தலைமுறையினரது கடமை

நம் முன்னோர்கள் பாதுகாத்து கடைப்பிடித்த பண்பாட்டுக் கலாச்சாரங்களை நாம் பேணிப் பாதுகாப்பது நமது தலையாய கடமையாகும்.

பிற கலாச்சாரங்களின் ஊடுருவலைத் தவிர்த்தல்⸴ நமது பண்பாட்டு விழாக்கள்⸴ பண்டிகைகளைக் கொண்டாடுதல்⸴ பாரம்பரிய நிகழ்வுகளை நடாத்துதல்⸴ விருந்தோம்பல் பண்பை வளர்த்தல்⸴ நமது கலாச்சாரம் பண்பாடு பற்றிய புரிதலை ஏற்படுத்தல்⸴ இவற்றை அடுத்த சந்ததியினருக்கு கற்பித்தல் என்பன எமது கடமையாகும்.

முடிவுரை

உலகின் மூத்த குடியான தமிழரினுடைய பண்பாடு மற்றும் கலாசாரம் தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு பேணப்படல் வேண்டும். பல தலைமுறை கடந்தாலும் அதன் தனித்துவம் மங்காது தலைசிறந்ததாகப் போற்றப்படும்.

பண்பாடு அழியக்கூடாது கலாச்சாரம் மாற்றப்படக் கூடாது. என்பதனை மனதிற் கொண்டு நாம் அனைவரும் செயற்படல் வேண்டும்.

You May Also Like:

நீரின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரை