எனது கனவு நூலகம் கட்டுரை

Enathu Kanavu Noolagam Katturai In Tamil

இந்த பதிவில் “எனது கனவு நூலகம் கட்டுரை” பதிவை காணலாம்.

தேனிருக்கும் இடத்தினைத் தேடி மெய்க்கும் வண்டுகள் போல நாமும் நூலிருக்கும் இடமான நூலகத்தை நாடிச் சென்று கற்போமாக.

எனது கனவு நூலகம் கட்டுரை

எனது கனவு நூலகம்

குறிப்புச் சட்டகம்

  1. முன்னுரை
  2. நூலகத்தின் வகைகள்
  3. நூலகத்தின் அமைப்பு
  4. நூலகத்தில் படிக்கும் முறை
  5. நூலகத்தின் பயன்கள்
  6. முடிவுரை

முன்னுரை

“நூலளவே ஆகுமாம் நுண்ணறிவுˮ எனும் கூற்றிற்கேற்ப நாம் அறிவினை வளர்த்துக் கொள்ளவும்⸴ மேம்படுத்தவும் பாடசாலைகளுக்கு அடுத்தபடியாக நூல் நிலையங்கள் பெரும் பங்காற்றுகின்றன.

19ஆம் நூற்றாண்டிலே தோற்றம் பெற்ற அச்சகங்கள் நூல் வரலாற்றிலே பெரும் புரட்சியினைத் தோற்றுவித்தன. இதன் தொடர்ச்சியே நூலகங்களின் உருவாக்கமாகும்.

நூலகம் அறிவை விருத்தி செய்யும் அறிஞர் பெருமக்களின் நூல்களைத் தொகுத்து வைக்கும் இடமே நூலகம்.

இத்தகைய நூலகங்கள் நவீன கட்டமைப்போடும்⸴ அழகிய சூழ்நிலையோடும் இருத்தல் நாம் படிப்பதற்கு ஏதுவாக அமையும். இவ்வாறான தனித்துவமான ஒரு நூலகம் தான் என்னுடைய கனவு நூலகம். என் கனவு நூலகம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

நூலகத்தின் வகைகள்

தேசிய நூலகம்⸴ மாவட்ட நூலகம்⸴ கிளை நூலகம்⸴ பகுதி நேர நூலகம்⸴ தனியார் நூலகம்⸴ பள்ளி நூலகம்⸴ கல்லூரி நூலகம்⸴ பல்கலைக்கழக நூலகம்⸴ நடமாடும் நூலகம்⸴ பொது நூலகம்⸴ இணைய நூலகம் போன்ற பலவகை நூலகங்கள் உள்ளன.

இவற்றில் என் கனவு நூலகமும் ஒன்று. ஆயினும் என் கனவு நூலகம் இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்.

நூலகத்தின் அமைப்பு

“கற்றது கையளவு கல்லாதது உலகளவுˮ என்பார்கள். தமக்குத் தேவையான நூல்களை எல்லோராலும் பணம் கொடுத்து இலகுவில் வாங்க முடியாது. இதனால் அவர்களுக்கு தேவையான நூல்களை இரவல் வாங்கிப் படிக்க நூல் நிலையங்கள் பெரிதும் துணைபுரிகின்றன.

நூலக அமைப்பானது சிறப்பிற்குரியதாக அமைய வேண்டும். எப்போதும் நூலகம் காற்றோட்டம் உடையதாகவும்⸴ வெளிச்சம் உடையதாகவும் இருத்தல் வேண்டும். இருக்கை வசதிகள் கொண்டதாகவும் அமைதியான சூழலைப் பிரதிபலிக்கக் கூடிய வகையிலும் இருப்பது சிறப்பாகும்.

மேலும் என் கனவு நூலகம் பல்லாயிரக்கணக்கான நூல்களைத் தன்னகத்தே கொண்டதாக அமைய வேண்டும். நூல்கள் துறைவாரியாக ஒழுங்குபடுத்தி அடுக்கப்பட்டதாகவும்⸴ தேவைப்படும் நூல்களைத் தேர்ந்தெடுத்து படிக்க கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.

புதிய புதிய தகவல்களை நாம் உடனுக்குடன் அறிந்து கொள்வதற்கு மின்னணு நூல்களைப் பயன்படுத்த ஏதுவாக கணினி வசதியும் என் கனவு நூலகத்தில் இடம் பெற வேண்டும்.

நூலகத்தில் படிக்கும் முறை

வாசகர்கள் மனதை ஒருமுகப்படுத்தி அமைதியைப் பின்பற்ற வேண்டும். நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்து படித்தல் வேண்டும். தினமும் நூலகத்திற்கு சென்று படிப்பதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். அறிவை வளர்த்துக்கொள்ள பல்வேறு துறை சார்ந்த நூல்களைப் படித்தல் அவசியமாகும். புதிய புதிய படைப்புகளை ஆர்வத்துடன் விரும்பிப் கற்பது சிறப்பு.

ஏனையவர்களுக்கு இடையூறின்றி அமைதியான முறையில் எமது அறிவுத் தேடலை பூர்த்தி செய்தல் நன்று. கற்பனைத்திறனை மேம்படுத்தி படைப்பாற்றலை வளர்த்துக்கொள்ளும் இடமே நூலகம் ஆகும். எனவே அனைவரும் நூலகத்தை பயிற்சிப் பட்டறையாக எண்ண வேண்டும்.

நூலகத்தின் பயன்கள்

அனைத்து மக்களும் பயன் பெறும் இடமாக எனது கனவு நூலகம் இருக்கும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எனது கனவு நூலகத்தில் பயன்பெற முடியும்.

ஏழை மக்களாலும் விலை உயர்ந்த புத்தகங்களை படித்து பயன் பெறவும் அறிவினை விருத்தி செய்யவும்⸴ புதிய அறிவுத் தேடல்களை மேம்படுத்தவும் எனது கனவு நூலகம் உதவும்.

எனது கனவு நூலகத்தில் உள்ள நூல்கள் அனைவருக்கும் ஏற்படும் பிரச்சினைகளை தீர்ப்பதாக அமையும்.

முடிவுரை

“புனிதமுற்று மக்கள் புது வாழ்வு வேண்டில் புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்ˮ என்ற பாரதிதாசனின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் நூலக வளர்ச்சியில் அரசு அக்கறை காட்ட வேண்டும்.

உலகின் அழியா வரம் பெற்றவை என்று நூல்களைக் கூறினால் அது மிகையாகாது. அத்தகைய நூல்களின் அமைவான நூலகம் எப்போதும் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும். தலை குனிந்து புத்தகத்தை நாம் பார்த்தால் தான் அவை தலை நிமிர்ந்து எம்மை நடக்க வைக்கும்.

எனவே பல்துறை நூல்களின் தொகுப்பான நூலகத்தை பேணிப் பாதுகாப்பது அனைவரினதும் கடமையாகும் ஆறு இல்லாத ஊர் மட்டுமல்ல நூலகம் இல்லாத ஊரும் பாழானதே.

தேனிருக்கும் இடத்தினைத் தேடி மெய்க்கும் வண்டுகள் போல நாமும் நூலிருக்கும் இடமான நூலகத்தை நாடிச் சென்று கற்போமாக.

You May Also Like:

எனது கனவு பள்ளி கட்டுரை

நீரின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரை