மின்சார பாதுகாப்பு கட்டுரை

Minsara Pathukappu Katturai In Tamil

அன்றாட வாழ்வில் மிகவும் அவசியமான “மின்சார பாதுகாப்பு கட்டுரை” பதிவை இதில் காணலாம்.

மின்சாரம் இல்லையென்றால் உலகின் சமநிலையை மாறிவிடும் என்ற அளவிற்கு உலகின் செயல்பாடுகள் காணப்படுகின்றன.

மின்சார பாதுகாப்பு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. அறிமுகம்
  2. மின்சாரத்தின் பயன்பாடுகள்
  3. மின் விபத்துக்கள் ஏற்படக் காரணங்கள்
  4. மின் விபத்துக்களைத் தடுக்கும் வழிமுறைகள்
  5. மின்சிக்கனம்
  6. முடிவுரை

அறிமுகம்

மின்சாரம் இன்றி இன்று உலகத்தின் பல செயற்பாடுகள் நடைபெறாது என்ற நிலையே உள்ளது. அந்த அளவு அன்றாட வாழ்க்கையில் மின்சாரம் நம்முடன் இரண்டறக் கலந்துள்ளது. மின்சாரம் இல்லையெனில் உலகம் ஸ்தம்பிதம் அடைந்துவிடும் என்றால் அதுமிகையல்ல.

மின்சாரம் மனிதனுக்கு எவ்வளவு பயன்படுகிறதோ அந்த அளவிற்கு மின்சாரம் ஆபத்தானதும் கூட. எனவே மின்சாரப் பாதுகாப்பு மிகவும் அவசியமானது.

மின் சாதனங்களின் அருகில் பணி செய்யும் போது மின்சாரத்தால் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டும் மின்சாரப் பாதுகாப்பு வழிமுறைகளைப் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும். அந்த வகையில் மின்சாரப் பாதுகாப்பு பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

மின்சாரத்தின் பயன்கள்

வீடுகளில் இருளை நீக்கி ஒளி தருவதற்கு மின்சாரம் பயன்படுகின்றது. அன்றாட வேலைகளை இலகுபடுத்துவதற்கும் மின்சாரம் பயன்படுகின்றது.

குறிப்பாக சமையல் அறையில் மின் உபகரணங்கள் இயங்குவதற்கு மின்சாரம் உதவியாக உள்ளது. இதனால் விரைவாகச் சமைத்து விடலாம். நேரமும் மீதப்படும்.

மின்விசிறிகள் மூலமும் ஏர்கண்டிஷனர்கள் மூலமும் வெப்பத்தை தணித்து குளிர்ச்சி பெற மின்சாரம் உதவுகின்றது. தொழிற்சாலைகள் இயங்கவும்⸴ தொழில் துறைகள் செயற்படுவதற்கும் மின்சாரம் பயன்படுகின்றது.

மின் விபத்து ஏற்பட காரணங்கள்

வீடுகள்⸴ அலுவலகங்கள் போன்ற இடங்களில் மின் விபத்துகள் அதிகம் இடம் பெறுவதைக் காண முடிகின்றது. இதன் முக்கிய காரணங்கள் தரமான மின்சாதனங்களை பொருத்தாது விடுதலே ஆகும்.

மின் கருவிகள் தரமாக இருந்தாலும் அவற்றை மிகச் சரியாக பொருத்தாது விடுதல்⸴ பாதுகாப்பின்றி பயன்படுத்துதல்⸴ ஈர உடலோடு மின் கருவிகளைத் தொடுதல்⸴ சரியான வகையில் வயரிங் செய்யாது விடல் போன்ற பல்வேறு காரணங்களினால் மின் விபத்துகள் நடைபெறுகின்றன.

மின் விபத்துகளை தடுக்கும் வழிமுறைகள்

வயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்றுள்ள ஒப்பந்ததாரர் மூலம் செய்ய வேண்டும். தரமான மின் சாதனங்களைப் பயன்படுத்தல் வேண்டும். நாம் மின்விளக்குகள் பொருத்தும் முன்பும் எடுப்பதற்கு முன்பும் ஆளிகளை நிறுத்துதல் (ஆப்) வேண்டும்.

மின்கசிவுத் தவிர்ப்பானை வீடுகளில் உள்ள பிரதான ஆளி பட்டியில் (மெயின் ஸ்விட்ச் போர்டில்) பொருத்தி விபத்துக்களை தடுக்கலாம். பழுது பார்க்கும் போது ரப்பர் காலணியை அணிந்து இருத்தல் சிறந்தது.

மின் கம்பங்களில் கால் நடைகளைக் கட்டுவதனைத் தவிர்க்க வேண்டும். குளியலறைகள்⸴ ஈரமான இடங்களில் ஆளி பட்டியை (சுவிச் போட்டைப) பொருத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

மின் சிக்கனம்

மின்சாரத்தை சேமிப்பது 2 யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு சமம் என்று கூறப்படுகின்றது. இதனை கருத்தில் கொண்டு வீட்டில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தினால் மின் கட்டணம் குறைவாகும். வருங்காலத்திற்கு மின்தடை ஏற்படாச் சூழலை ஏற்படுத்திக் கொடுக்கலாம்.

தேவையற்ற மின் சாதனங்களைப் பயன்படுத்துவதை தவிர்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு மின் சிக்கனத்தை பேணும் போது நமக்கு மட்டுமல்லாது வருங்கால சந்ததியினருக்கும் பயன் கிடைக்கும்.

முடிவுரை

மின்சாரம் மனிதனுக்கு பலவழிகளிலும் உதவுகின்றது. அதனைச் சிக்கனமாக பயன்படுத்துவது எவ்வளவு முக்கியமோ அதுபோல் மின்சாரப் பாதுகாப்பு மிகவும் அவசியமானது என்பதை உணர்ந்து செயல்பட்டு விபத்துக்களை தவிர்த்து உயிர் காப்போமாக.

You May Also Like:

ஓசோன் படலம் கட்டுரை
மழைநீர் சேகரிப்பு கட்டுரை