சிறுதுளி பெருவெள்ளம் கட்டுரை

siru thuli peru vellam katturai in tamil

இந்த பதிவில் “சிறுதுளி பெருவெள்ளம் கட்டுரை” பதிவை காணலாம்.

தேனீக்களை எடுத்துக் கொண்டால் அவை ஒவ்வொரு பூவிலிருந்தும் தேனை எடுத்து தேனடையில் சேர்த்து வைக்கின்றன.

சிறுதுளி பெருவெள்ளம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • சேமிப்பு பழக்கம்
  • முன்னுதாரணங்கள்
  • சேமிப்பின் நன்மைகள்
  • சிக்கன வாழ்வு
  • முடிவுரை

முன்னுரை

“சிறுதுளி பெருவெள்ளம்” என்பது எம்முடைய சேமிப்பு சிறியதாக இருந்தாலும் பிற் காலத்தில் அது தரக்கூடிய பயன்கள் அதிகம் என்பதாகும். அதாவது எமது உழைப்பில் ஒரு பகுதியை பயன்படுத்தாது வைத்தல் சேமிப்பு ஆகின்றது.

உழைப்பில் ஒரு பகுதி என்கிற போது அது எஞ்சியதாக இருக்க கூடாது. மாறாக சேமிப்புக்கு என்று ஒதுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இக்கட்டுரையானது சேமிப்பு தொடர்பான விடங்களை விளக்குவதாக அமைகின்றது.

சேமிப்பு பழக்கம்

சேமிப்பு பழக்கமானது சிறு வயது முதலே பழக்கப்படுத்தி கொள்ள வேண்டிய பழக்கமாகும். இது பெற்றோர்கள் கைகளிலேயே தங்கியுள்ளது. சேமிப்பு என்பது சிரமமான நடவடிக்கையாகவே காணப்படும்.

எமது வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்ளல், சிரமமான நேரங்களை சமாளித்து கொள்ளல் ஆகிய சந்தர்ப்பங்களை சமாளிக்கும் வகையில் எதிர்காலத்தை திட்டமிடுவதற்கு சேமிப்பு பழக்கத்தை வளர்த்துக்கொள்ள நாம் முன்வர வேண்டும்.

முன்னுதாரணங்கள்

இறைவனின் படைப்பில் மனிதர்களாகிய நமக்கு பல நல்ல முன்னுதாரணங்களை இறைவன் உருவாக்கியுள்ளார்.

சேமிப்பு பற்றி நினைக்கின்ற போது நாம் மட்டுமல்ல எறும்புகள் கூட சேமிக்கின்றன. தேனீக்களை எடுத்துக் கொண்டால் அவை ஒவ்வொரு பூவிலிருந்தும் தேனை எடுத்து தேனடையில் சேர்த்து வைக்கின்றன.

எலியானது நெற்கதிர் விளையும் காலத்திலே தனக்கு தேவையானவற்றை தன் வளையில் சேமித்து விளைச்சல் இல்லாத காலத்திலும் உண்கின்றது. நாம் மட்டும் சேமிக்காமல் வாழ்ந்து துன்பப்படாமல் சேமிக்க பழகுவோம்.

சேமிப்பின் நன்மைகள்

சேமிப்பு ஒரு சிறந்த பழக்கமாகும். இப்பழக்கமானது ஆடம்பர செலவுகளை குறைக்க கற்றுத் தருகின்றது. சிக்கனத்தை கடைப்பிடிக்க வழிவகை செய்கின்றது. அவசர தேவைகளுக்கு பிறரிடம் கையேந்தி நிற்காமல் நாமே நமது தேவையை பூர்த்தி செய்ய சேமிப்பு பழக்கம் உதவுகின்றது.

சடுதியாக ஏற்படும் மருத்துவ செலவுகளுக்கு உதவுகின்றது. மாணவர்கள் சிறு செலவுக்காக பெற்றோரை துன்புறுத்தாமல் இருக்க சேமிப்பு பணம் உதவுகின்றது. வீட்டிற்கு மட்டுமன்றி நாட்டிற்கும் சேமிப்பது துணை புரிகின்றது.

சிக்கன வாழ்வு

மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வு சிறக்க சிறு சேமிப்பு திட்டங்களில் சேர்ந்து பயன்பெற்றிட வேண்டும்.

சிக்கனம் மற்றும் சேமிப்பின் அவசியத்தை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் ஆண்டு தோறும் அக்டோபர் 30 ஆம் நாள் “உலக சிக்கன தினம்” கொண்டாடப்படுகின்றது.

சிக்கனம் என்கின்ற போது அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய ஆடம்பர களிப்புகளுக்காக பணத்தை செலவழிக்காது மிச்சப்படுத்துதல் ஆகும். பெற்றோர்கள் தாமும் சிக்கன வாழ்வு வாழ்ந்து பிள்ளைகளுக்கும் அதனை பழக்கப்படுத்த வேண்டும்.

முடிவுரை

‘இன்றைய சேமிப்பு நாளைய பாதுகாப்பு’ என்பதையும் ‘சிறு துரும்பும் பல் குத்த உதவும்’ என்பதால் அனைவருமே தமது மிகச்சிறிய சேமிப்புக்களின் மூலமாக சேமிப்பாளர் ஆகலாம்.

நமது சேமிப்புக்கள் எதிர்காலத்தில் எம்மை தலை நிமிர்ந்து நிற்கச் செய்யக் கூடியது. எனவே நாம் “சிறு துளி பெரு வெள்ளம்” என்ற பழமொழிக்கேற்ப சேமிப்பின் அவசியத்தை உணர்ந்து சேமித்து நலம் பெற்று வாழ்வோம்.

“சிக்கனம் வீட்டை காக்கும்
சேமிப்பு நாட்டை காக்கும்”

You May Also Like:
மின் சிக்கனம் கட்டுரை
சிக்கனமும் சிறுசேமிப்பும் கட்டுரை