சிக்கனமும் சிறுசேமிப்பும் கட்டுரை

sikkanamum sirusemippum katturai in tamil

இந்த பதிவில் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய பழக்கவழக்கங்களில் ஒன்றான “சிக்கனமும் சிறுசேமிப்பும் கட்டுரை” பதிவை காணலாம்.

மற்றவர்களிடம் கையேந்தாமல் கௌரவத்துடன் வாழ சிக்கனமும் சேமிப்பும் நமக்கு துணை புரிகின்றன.

சிக்கனமும் சிறுசேமிப்பும் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. ஆடம்பரச் செலவுகள்
  3. காந்தியின் சிக்கன வாழ்க்கை
  4. சிக்கனம் மற்றும் சிறுசேமிப்பின் நன்மைகள்
  5. இன்றைய சேமிப்புப் பழக்கவழக்கம்
  6. முடிவுரை

முன்னுரை

சிக்கனமும்⸴ சேமிப்பும் நம் வாழ்வில் முக்கிய அம்சங்களாகும். ஏனெனில் சிக்கனம் வீட்டைக் காக்கும்⸴ சேமிப்பு நாட்டைக் காக்கும். சேமிப்பு செழித்து வளர சிக்கனம் சிறந்த வழியாகும்.

அனைவரும் கடைப்பிடிக்க வேண்டியது சிக்கனமும் சிறுசேமிப்பும் தான். இத்தகைய சிக்கனமும் சிறுசேமிப்பும் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

ஆடம்பரச் செலவுகள்

உலக மக்கள் வறுமையில் வாடுகின்ற போதிலும் ஆடம்பரத் திருமணம்⸴ பூப்புனித நீராட்டு விழா⸴ கோயில் திருவிழாக்கள் போன்றவற்றை வெகு விமர்சையாகக் கொண்டாடி வீண் செலவு செய்கின்றனர். சேமிப்புப் பழக்கத்தினை மறந்து போய் விடுகின்றார்கள்.

உலகில் எத்தனையோ கோடி மக்கள் வறுமையில் வாடுகின்றனர். ஆனால் ஒரு சிலரோ தம்மிடமுள்ள செல்வத்தை ஊதாரித்தனமாகச் செலவு செய்கின்றனர். திரைப்படம் பார்ப்பது⸴ தேவைக்கு அதிகமான பொருட்களை⸴ ஆடை⸴ அணிகலன்களை வாங்கிக் குவிப்பதில் செலவுக்கு மேல் செலவு செய்கின்றனர்.

இதனால் எதிர்காலத்தில் தமக்கென சேமிப்பு எதுவும் இருக்காது என்பதை அவர்கள் மறந்து விடுகின்றார்கள்.

காந்தியின் சிக்கன வாழ்க்கை

நம் தேசத் தந்தையான காந்தியடிகள் சிக்கனமான முறையில் தனது வாழ்க்கையை வாழ்ந்த மகான் ஆவார். பல் துலக்கப் பயன்படுத்தும் குச்சியை கூட சிக்கனமாய் பயன்படுத்த வேண்டும் என்றார்.

முதல் நாள் பல் துலக்கியதும் குச்சியின் மறுமுனையை வெட்டிவிட்டு அதே குச்சியை மறுநாள் பயன்படுத்த வேண்டும் என்றார்.

தென்னாப்பிரிக்காவில் இருந்த போது சிக்கனத்தின் பொருட்டு தன் உடைகளைத் தானே சலவை செய்து கொண்டார்.

சிக்கனம் மற்றும் சிறுசேமிப்பின் நன்மைகள்

சிக்கனமும்⸴ சிறுசேமிப்பும் நம் வாழ்வை முன்னேற்றும். மனிதனுக்கு வரும் பொருளாதாரப் பிரச்சினைகளைச் சமாளிக்கவும்⸴ தொழில் முன்னேற்றத்தை அடையவும் சேமிப்பு பெரிதும் துணைபுரிகின்றது.

இவ்வுலகிற் பிறக்கும் எல்லோருமே பிறவிப் பணக்காரர் இல்லை. ஆகவே ஏழைகளின் முன்னேற்றம் என்பது சிக்கனத்திலும்⸴ சேமிப்பிலுமே தங்கியுள்ளது.

மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை பணம் முக்கிய பங்காற்றுகின்றது. இன்று உயிர்காக்கும் மருத்துவத்திற்கு கூடப் பணம் தேவைப்படுகின்றது. இதனைச் சீர்செய்ய சேமிப்புத் துணை புரிகின்றது.

ஆபத்தான நிலைகளில் சேமிப்புப் பணம் நமக்கு உதவுகின்றது. மற்றவர்களிடம் கையேந்தாமல் கௌரவத்துடன் வாழ சிக்கனமும் சேமிப்பும் நமக்கு துணை புரிகின்றன.

இன்றைய சேமிப்புப் பழக்கவழக்கம்

இன்று சேமிப்பதற்காகப் பல வழிமுறைகள் உள்ளன. வங்கிகள்⸴ தனியார் ஆயுட் காப்புறுதி நிறுவனங்கள்⸴ சிறு சேமிப்புத் திட்டங்கள் என பலவுள்ளன. இவை அனைத்தும் மக்கள் சேமிப்பை ஊக்கப்படுத்துபவையாகும்.

உழைப்பின் ஒரு தொகைப் பணத்தைச் சேமிக்கும் பழக்கம் இன்று பெரும்பாலும் அனைவரிடத்திலும் அதிகரித்துள்ளது. சிக்கனம் மற்றும் சேமிப்பு பழக்க வழக்கத்தின் நன்மையை அறிந்து அப்பழக்கத்தை மென்மேலும் வளர்ப்பது சிறப்பு.

முடிவுரை

சிக்கனமாய் வாழ்ந்து சேமித்துக்கொண்டால் ஆபத்தான நேரங்களில் பிறர் உதவியை நாடாமல் தன் கையே தனக்குதவி என வாழலாம். சிறுதுளி பெருவெள்ளமாகும் எனவே சிறுகச் சிறுக சேமித்து வாழ்வில் முன்னேறலாம்.

சேமிப்புப் பழக்கம் எப்போதும் நம்மைக் கைவிடாது. சிக்கனம் எப்போதும் நம்மை மற்றவர்களிடம் கையேந்த விடாது. எனவே சிறுகச்சிறுக சேமிப்போம்⸴ சிக்கனமாய் செலவு செய்வோம்⸴ வாழ்வில் வளம் பெறுவோம்.

You May Also Like:
சுற்றுச்சூழல் பாதுகாப்பு கட்டுரை
உழைப்பே உயர்வு கட்டுரை