உழைப்பே உயர்வு கட்டுரை

Ulaipe Uyarvu Katturai In Tamil

இந்த பதிவில் வாழ்வில் உயரத்தை அடைய உதவும் “உழைப்பே உயர்வு கட்டுரை” பதிவை காணலாம்.

“முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்” என்பது சான்றோர் வாக்கு ஆகும். இது அனைவருக்கும் பொருந்தும் கூற்றாகும்.

உழைப்பே உயர்வு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. உழைப்பின் முக்கியத்துவம்
  3. உழைப்பின் மகிமை
  4. உழைப்பாளிகள் தினம்
  5. மாணவர்களின் உழைப்பு
  6. முடிவுரை

முன்னுரை

உலகில் பிறந்த அனைவருமே வாழ்க்கையில் உயர வேண்டும், முன்னேற வேண்டும், வளர வேண்டும் என்று விரும்புகின்றனர். இதற்கு உயர்ந்த குறிக்கோள் ஒன்றை வரையறுத்துக் கொண்டு உழைக்கத் தயாராகி விடவேண்டும்.

உழைப்பு இல்லையெனில் உயர்வு இல்லை. கடுமையான உழைப்பைத் தவிர வெற்றிக்கு ரகசியம் வேறு இல்லை எனலாம். பெரிய மனிதர்கள் பலர் உயர்ந்த நிலையை அடைந்தார்கள் என்றால் அதன் பின்னணியில் உழைப்பே இருக்கும்.

உழைப்பின் அவசியத்தை உணர்ந்த விவேகானந்தர் அவர்கள் “மகத்தான செயல்கள் கடின உழைப்பு இல்லாமல் தாமாக ஒருபோதும் நடப்பதில்லை” எனக் கூறியுள்ளார். உழைப்பின் உயர்வு பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

உழைப்பின் முக்கியத்துவம்

ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் நல்ல பாதையில் செல்ல வேண்டும் எனில் கடுமையாக உழைக்க வேண்டும். வாழ்க்கைப் பயணத்தில் நாம் சாதனைச் சிகரத்தை அடைய நாம் செய்ய வேண்டிய மூலதனம் உழைப்பு ஆகும்.

ஒருவன் தான் ஆசைப்படுவதை அடைந்து கொள்வதற்கு உழைப்பு முக்கியம் ஆகிறது. புதிய கண்டுபிடிப்புகளுக்கும் புதிய சிந்தனைகளுக்கும் உழைப்பே முக்கியத்துவம் பெறுகின்றது. பலரது சாதனை மிக்க கண்டுபிடிப்புக்களின் பின்னால் உழைப்பே உள்ளது.

உழைப்பின் மகிமை

எந்த செயலும் உழைப்பினால் தான் சிறப்பு அடைகிறது. வெற்றியை உருவாக்குவதில் உழைப்பு மிகப் பெரிய மூலதனம் ஆகும். உழைப்பு ஒன்றுதான் ஒருவனை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும்.

வெற்றி பெறுவதற்கு ஒரே வழி உழைப்புத் தான். எனவே வெற்றியை உருவாக்குவதில் உழைப்பு மிகப்பெரிய மூலதனம் எனலாம். எவ்வளவுக்கெவ்வளவு உழைக்கின்றோமோ அந்த அளவிற்கு நமது முன்னேற்றம் உயரும்.

உழைப்பாளிகள் தினம்

மே மாதம் முதலாம் திகதி உழைப்பாளர் தினமாகும். உழைப்பை மகிமைப்படுத்தும் தினமாக மே தினம் காணப்படுகின்றது.

மே தினம் உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையையும், உறுதியையும் குறிக்கும் தினமாகும். தொழிலாளர்களினால் தான் உலகமே இயங்குகின்றது. உழைப்பு இன்றி எந்தப் பொருளும் உருவாகுவது இல்லை.

மாணவர்களின் உழைப்பு

“முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்” என்பது சான்றோர் வாக்கு ஆகும். இது அனைத்து மாணவர்களுக்கும் பொருந்தும் கூற்றாகும்.

ஒரு தேர்வில் மட்டும் முதல் மாணவனாக இருந்தால் போதாது. எல்லாத் தேர்வுகளிலும் முதல் மாணவனாகத் திகழ முயற்சியும் பயிற்சியும் தேவை. இந்த முயற்சியும் பயிற்சியுமே உழைப்பாகும்.

மாணவர்கள் ஒவ்வொருவரும் ஓர் உயர்ந்த குறிக்கோளை மனதில் நிறுத்தி அக்குறிக்கோளில் வெற்றிபெற உழைக்க வேண்டும்.

சோம்பல், சலிப்பு, மறதி போன்றவற்றை ஒழித்து விட்டு முழு மனதுடன் உழைக்க வேண்டும். அப்போது தான் வாழ்வில் உயர்வு பெற முடியும்.

முடிவுரை

நாம் ஒரு செயலைச் செய்ய வேண்டும் என எண்ணுவது பெரிதல்ல அதைச் செயல்படுத்தி அதற்கேற்ப எல்லோரும் உழைக்க வேண்டும். கடுமையான உழைப்பிற்கு ஈடு இணை எதுவுமில்லை.

அயராத உழைப்பு, கடினமான உழைப்பு இதுதான் ஒருவனுடைய உயிர் மூச்சாக விளங்க வேண்டும்.

உழைப்பே உயர்வினைத் தரும். அதுவே நிம்மதியான, நிலையான, சந்தோஷமான வாழ்க்கையை தரும். எனவே உழைப்போம் உயர்வோம்.

You May Also Like:
அறம் பற்றிய கட்டுரை
கல்வியால் உயர்ந்தவர்கள் கட்டுரை