கல்வியால் உயர்ந்தவர்கள் கட்டுரை

Kalviyal Uyarnthavargal Katturai

கல்வி ஒரு மனிதனை முழுமை அடைய செய்து அவனை வாழ்வின் உயரத்தை அடைய உதவுகின்றது. இதைப்பற்றி இந்த கல்வியால் உயர்ந்தவர்கள் கட்டுரை பதிவில் காண்போம்.

எந்த சூழ்நிலையிலும் ஒருவர் கல்வி கற்பதை நிறுத்தி விடக்கூடாது. அனைவரும் கல்வியின் மகத்துவத்தை நன்கு உணர்ந்து கொண்டால் தான் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க முடியும்.

கல்வியால் உயர்ந்தவர்கள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. கல்வியின் முக்கியத்துவம்
  3. கல்வியின் சிறப்பு
  4. டாக்டர் அப்துல் கலாம்
  5. கல்பனா சாவ்லா
  6. முடிவுரை

முன்னுரை

கல்வி அறிவில் சிறந்தவர்கள் சமூகத்தில் உயர்வாக மதிக்கப்படுவார்கள். ஒரு செல்வந்தன் காலச் சூழ்நிலையால் ஏழையாகலாம். ஆனால் கல்வி அறிவுடையவன் அவ்வாறில்லை. தனது நிலையை மேலும் உயர்த்தி கொள்வான்.

இதனையே ஒளவையார் “மன்னனும் மாசற கற்றோனும் சீர்தூக்கின் மன்னனில் கற்றோன் சிறப்புடையன் மன்னற்குத் தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு” என்று கூறி கற்றவர்களின் பெருமையைப் பாடுகிறார்.

நாட்டின் அரசனையே வழிநடாத்தும் அமைச்சர் சிறந்த கல்வி அறிவுடையவராகவே இருப்பர். உயர்பதவிகள் பொறுப்புக்கள் கல்வி அறிவுடையவர்களுக்கே சாத்தியமாகும். ஆகவே கல்வி ஒரு மனிதனை எப்போதும் மேன்மையடைய செய்யும்.

சிறந்த தலைவர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள் அனைவரும் முனைப்புடன் கல்வி பயின்றவர்களே. கல்வியால் உயர்ந்தவர்கள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

கல்வியின் முக்கியத்துவம்

தனிமனித⸴ சமூக மற்றும்⸴ சுற்றுச்சூழல் மாற்றத்திற்கு அனைத்து விதத்திலும் அச்சாணியாக திகழ்வது கல்வியாகும். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும்⸴ முன்னேற்றத்திற்கும் கல்வி அவசியமானதாகும்.

புதிய வேலை வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வதற்கும்⸴ சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தைப் பெறவும் கல்வி முக்கியமானதாகும். திறமையும்⸴ ஆளுமையும்⸴ அறிவையும் பெற கல்வி மிகமிக அவசியமாகும்.

வறுமையிலிருந்து விடுபடவும்⸴ அறியாமையிலிருந்து விலகவும்⸴ பதவி⸴ புகழ்⸴ பட்டம் பெற்றுக் கொள்ளவும் கல்வி முக்கியமானதாகும்.

கல்வியின் சிறப்பு

கல்வி ஒருவனை எப்போதும் மேன்மையடையச் செய்யும். எப்போதும் அழிவில்லா செல்வமாகும். கற்றவர்களால் மட்டுமே மூடப்பழக்க வழக்கங்களிலிருந்து விடுபட்டு வாழ்வில் முன்னேற முடியும்.

கல்வி வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களைப் போக்க வல்லது. சமூகத்தில் மதிப்பையும்⸴ அந்தஸ்தையும்⸴ செல்வத்தையும் வழங்கவல்லது.

டாக்டர் அப்துல் கலாம்

ஏவுகணை நாயகன் என வர்ணிக்கப்படும் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் கல்வியால் உயர்ந்தவராவார். இவர் இந்தியாவின் 11ஆவது குடியரசுத் தலைவராகப் பணியாற்றிய இந்திய அறிவியலாளரும்⸴ நிர்வாகியுமாவார்.

இயற்பியல்⸴ விண்வெளிப் பொறியியல் போன்ற பல புகழ் பெற்ற முனைவர் பட்டங்களைப் பெற்றவர். இவர் சிறுவயதிலேயே குடும்ப வருமானத்திற்கு வேலைக்குச் சென்ற போதும் கல்வி கற்பதைக் கைவிடவில்லை.

தனது பள்ளிப் பருவத்தில் சராசரி மதிப்பெண்களே பெற்றாரெனினும் பிரகாசமான மாணவனாகவும்⸴ கற்பதில் திடமான ஆர்வமும் படிப்பிற்காகப் பல மணி நேரங்கள் செலவு செய்பவராகவுமிருந்தார்.

இதனால் தான் உயர்வான நிலைக்கு சென்றார். உலகமே அவர் பற்றி பேசும் அளவிற்கு உயர்ந்துள்ளார். இவரின் கல்வியறிவே இவர் பல சாதனைகள் நிகழ்த்த காரணமாகியது.

கல்பனா சாவ்லா

விண்வெளிக்குப் பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவர். பல பெண்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கின்றார். ஒரு சாதாரணப் பள்ளியில் படித்து பலர் வியக்கும்படி வாழ்ந்து காட்டினார்.

விமான ஊர்தியியல் துறையில் கல்வி பயின்று இளங்கலைப் பட்டமும்⸴ விண்வெளிப் பொறியியல் துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றார். கோலோரேடா பல்கலைக்கழகத்தில் இரண்டாவது முதுகலைப் பட்டமும்⸴ பின் விண்வெளிப் பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

இவ்வாறு இவர் தனது கல்வித் தகுதியை உயர்த்திக் கொண்டதால் தான் உயர் நிலையை அடைந்தார். கல்வியறிவு இவரை உலகைத்தையே திரும்பிப் பார்க்கச் செய்தது. பல விருதுகளைப் பெறவும் புகழ் பெறவும் கல்வியே காரணமாகும்.

முடிவுரை

கல்வியால் உயர்ந்தவர்கள் வழி நாமும் நடக்க வேண்டும். கல்வியை ஒவ்வொரு மனிதனும் பெற்றுக் கொள்ள வேண்டும். கல்வியால் உயர்ந்தவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு அழியாச் செல்வமான கல்வியைப் பெறுவோம் வாழ்வில் நாமும் உயர்வோம்.

You May Also Like:

கல்வியின் சிறப்பு கட்டுரை
அன்றாட வாழ்வில் அறிவியல் கட்டுரை