அன்றாட வாழ்வில் அறிவியல் கட்டுரை

Andrada Vazhvil Ariviyal Katturai In Tamil

இந்த பதிவில் உள்ள அன்றாட வாழ்வில் அறிவியல் கட்டுரை பதிவு விஞ்ஞானத்தின் வளர்ச்சி மனித வாழ்வில் எந்தளவு செல்வாக்கு செலுத்துகின்றது என்பதை காணலாம்.

அறிவியலின் வளர்ச்சி இன்று உச்சத்தை தொட்டுள்ளது இதனால் வாழ்க்கை முறையிலும் பெரும் மாற்றம் உண்டாகியுள்ளது.

அன்றாட வாழ்வில் அறிவியல் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. அறிவியல் அறிமுகம்
  3. கல்வியில் அறிவியல்
  4. மருத்துவத்தில் அறிவியல்
  5. அன்றாட வாழ்வில் அறிவியல்
  6. போக்குவரத்தில் அறிவியல்
  7. முடிவுரை

முன்னுரை

இன்றைய வாழ்வில் அறிவியலானது இன்றியமையாததாகும். அன்றாட வாழ்வியலில் ஒவ்வொரு தருணத்திலும் அறிவியல் ஏதோவொரு வகையில் பின்னிப்பிணைந்துள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அறிவியலை ஆதாரமாகக் கொண்டே வாழ்கின்றனர் என்றால் அது மிகையாகாது.

அன்றாட வாழ்வில் அறிவியலானது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வருகின்றது. அறிவியலின்றி உலகமில்லை எனும் அளவிற்கு உலகச் செய்முறைகளில் அறிவியல் தாக்கம் செலுத்துகின்றது. இவ்வகையில் அன்றாட வாழ்வியலில் அறிவியல் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

அறிவியல் அறிமுகம்

அறிவியலானது இயற்கையுடன் தொடர்புபட்டதாகும். இத்தகைய அறிவியலின் தோற்றம் இன்றோ நேற்றோ இடம்பெற்றதில்லை. அதன் தோற்றமானது பல நூற்றாண்டுகளின் முன்னரேயாகும்.

கிரேக்கமே அறிவியலின் தோற்றமாகக் கருதப்படுகின்றது. வானியல் ஆராய்ச்சிகள்⸴ மருத்துவ ஆராய்ச்சிகள்⸴ தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் போன்ற பல ஆராய்ச்சிகளும் அறிவியலை அடிப்படையாகக் கொண்டே மேற்கொள்ளப்படுகின்றன.

இன்றைய நவீன உலகில் பல வியத்தகு சாதனைகளை மனிதன் படைத்து வருகிறான் என்றால் அதற்கு துணை நிற்பது அறிவியலே.

கல்வியில் அறிவியல்

கல்வியானது சமுதாயத்தின் தேவைப்பாடாகும். இத்தகைய கல்வி வளர்ச்சியில் அறிவியலின் பங்களிப்பு அளப்பரியதாகும்.

இன்று நாம் பயிலும் நூல்கள் யாவும் அறிவியல் கண்டறிந்த அச்சுப்பொறியின் ஆக்கங்களேயாகும். வானொலி⸴ தொலைக்காட்சி⸴ இணையதளம் என்பன மாணவர்களுக்கு கல்வி வளர்ச்சியில் பெரிதும் பங்காற்றுகின்றன.

கல்விக்கு உதவும் ஆய்வுக் பரிசோதனைக் கருவிகள் அறிவியல் கண்டுபிடிப்புகளேயாகும். இவை அனைத்தும் அறிவியல் கல்விக்கு அளித்த நன்கொடைகளாகும்.

மருத்துவத்தில் அறிவியல்

மருத்துவத் துறையானது ஆராய்ச்சியின் உச்சத்தைத் தொட்ட துறையெனலாம். உயிர்காக்கும் இத்துறையில் வளர்ச்சியானது உலகிற்கு மிகவும் தேவைப்படும் ஒன்றாகும்.

கடவுளுக்கு அடுத்தபடியாக மருத்துவர்களையே நம்புகின்றனர். மனிதனின் உயிர் மூச்சை மீண்டும் உலகிற்கு கொண்டுவரும் வகையில் மருத்துவக் கண்டுபிடிப்புகள் வளர்ச்சி கண்டுள்ளன.

மருத்துவ நுண்ணுயிர் கண்டுபிடிப்பு⸴ மருத்துவ ஆய்வுகள்⸴ அறுவைச் சிகிச்சை முறை போன்றவற்றில் பயன்படுத்தப்படும் புதிய புதிய கருவிகளும்⸴ முறைகளும் அறிவியல் அம்சங்களே. செயற்கை முறை கருத்தரிப்பு⸴ நோய்த்தடுப்பு⸴ செயற்கை இரத்தம்⸴ செயற்கை எலும்பு போன்றன அறிவியலின் பங்களிப்புக்களாகும்.

அன்றாட வாழ்வில் அறிவியல்

பெரிய பெரிய கட்டிடங்கள் யாவும் இன்று புதிய முறையில் கட்டப்படுகின்றன. செங்கலிற்கு பதிலாக அவற்றை விட உறுதியாகவும்⸴ சிக்கனமாகவும் கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஒளி விளக்குகள்⸴ கோடை காலங்களில் குளிர் தரும் மின் விசிறிகள்⸴ தட்ப வெப்ப பொருள்கள்⸴ உணவுப் பொருட்கள் கெடாமல் பாதுகாக்கும் குளிர்சாதனப் பெட்டிகள்⸴ சமையலுக்கு உதவும் மின் அடுப்புகள் என பலவும் அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் அறிவியல் ஆக்கங்களாகும்.

இவையாவும் நம் வேலையை சுலபமாக்குகின்றன. நேரத்தை மீதப்படுத்துகின்றன. நவீன உலகின் கால ஓட்டத்தில் நம்மையும் இணைத்துக் கொள்ள உதவுகின்றன.

போக்குவரத்தில் அறிவியல்

மண்ணிலும் விண்ணிலும் நீரிலும் பலவகை போக்குவரத்து கருவிகள் அன்றாடம் பயணிக்க பயன்படுத்தப்படுகின்றன.

பயணத்தை இலகுபடுத்தும் வகையிலும் விரைவாக பயணிக்க கூடிய வகையிலும் புகையிரதம் உட்பட பல போக்குவரத்து சாதனங்கள் உதவுகின்றன.

மிதிவண்டி⸴ புகைவண்டி⸴ மகிழுந்து முதலிய பல போக்குவரத்து சாதனங்கள் அன்றாடம் நம் வாழ்வில் அதிகம் இடம்பெறும் அறிவியல் சார் பொருட்களாகும்.

முடிவுரை

இவ்வாறான அன்றாட வாழ்வில் அனைத்துப் பொருட்களும் அறிவியல் படைப்புக்களாகின்றன. கலை⸴ மருத்துவம்⸴ பொறியியல்⸴ போக்குவரத்து⸴ கல்வி⸴ பொழுதுபோக்கு⸴ இணையத்தளம் முதலிய துறைகள் தோறும் அறிவியலின் இடமானது அளவற்றது.

இதனால் எதிர்மறை விளைவுகளை மனிதன் சந்திக்கின்ற போதிலும் அதிக நன்மை நமக்கு அளிக்கின்றது அறிவியல் என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் கட்டுரை