ஆசிரியர் பணி கட்டுரை

Asiriyar Pani Katturai In Tamil

உலகில் பல தொழில்கள் இருந்தாலும் பணிகளில் உன்னதமான பணியான ஆசிரியர் பணி கட்டுரை பதிவை இதில் காணலாம்.

ஆசிரியர்கள் அறிவை மட்டுமின்றி நற்பண்புகளையும் போதித்து சமூகத்தில் சிறந்த பிரஜைகளை உருவாக்கி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கின்றார்கள்.

ஆசிரியர் பணி கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. யார் ஆசிரியர்கள்
  3. ஆசிரியர் தின வரலாறு
  4. நல்லாசிரியரின் பண்பு
  5. ஆசிரியர் பணியின் சிறப்பு
  6. முடிவுரை

முன்னுரை

தாய்⸴ தந்தைக்கு அடுத்தபடியாகப் போற்றப்படுபவர்கள் ஆசிரியர்களே. இதனால் தான் “மாதா, பிதா, குரு, தெய்வம்ˮ எனக் கூறுகின்றனர். உலகின் உன்னத பணிகளில் ஆசிரியர் பணியும் ஒன்றாகும்.

மனித உயிர்களுக்கு கல்வியைப் போதிப்பதில் ஆசிரியர்களே முதன்மை வகிக்கின்றனர். சாதாரண குடிமக்களை கூட சாமானியர்களாக மாற்றும் வல்லமை படைத்தவர்கள்.

செல்வங்களில் சிறந்த செல்வமான கல்விச் செல்வத்தை நமக்களிக்கும் ஆசிரியர்களும்⸴ அவர்களது ஆசிரியப் பணியும் போற்றுதற்குரியதாகும். இக்கட்டுரையில் ஆசிரியர் பணி⸴ அதன் சிறப்பு பற்றி காண்போம்.

யார் ஆசிரியர்கள்

“சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும்ˮ எனும் பழமொழிக்கிணங்க மனிதன் பகுத்தறிவு எனும் அறிவுடன் பிறந்து இருந்தாலும் அதனைப் பயன்படுத்த ஓர் வழிகாட்டி வேண்டும். ஏனெனில் மனிதன் தன்னகத்தே நல் மற்றும் தீய பண்புகளைக் கொண்டுள்ளான்.

மற்றவர்களின் நடத்தை⸴ செய்கைகளைக் கண்டு தானும் தன் வாழ்வில் பிரதிபலிக்க வேண்டுமென எண்ணுகின்றான். எனவே எது சரி? எது தவறு? என்பதை வழிகாட்டி சரியான பாதையில் நடக்க கற்றுக் கொடுப்பவரே ஆசிரியர்களாவர்.

ஆசிரியர் தின வரலாறு

தன் வாழ்நாள் முழுவதும் ஒரு நல்லாசிரியராக வாழ்ந்து காட்டிய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ஆம் நாளைத்தான் ஆசிரியர் தினமாக கொண்டாடுகின்றோம்.

ஆசிரியர் தினமானது பல்வேறு நாடுகளிலும் பல்வேறு விதமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்திய நாட்டில் 1962ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ஆம் நாள் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு ஆசிரியர்கள் கௌரவிக்கப்படுகின்றனர்.

நல்லாசிரியரின் பண்பு

கற்பதற்கு ஆயிரம் உலகில் இருப்பினும் எவை கற்க உகந்ததெனப் பிரித்து வழங்குபவர் ஆசிரியர்கள். அவர் நற் பழக்கவழக்கங்களை உடல் மொழியாலும்⸴ கருத்தாலும் உணர்த்தும் பண்பினை கொண்டிருப்பர்.

அறிவிற்கேற்ப அனுபவத்தினை வெளிப்படுத்தக் கூடியவர்களாக இருப்பர். குழப்பங்களைத் தெளியச் செய்யவும் நன்மை தீமையை கற்றுத்தரவும் வல்லவர்களாய் இருப்பார்கள். கனிவான பேச்சு, கள்ளங் கபடமற்ற வெள்ளை உள்ளம் கொண்டவர்களாக ஆசான்கள் திகழ்வார்கள்.

ஆசிரியர் பணியின் சிறப்பு

ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பதில்லை. ஒழுக்கம்⸴ பண்பு⸴ ஆன்மீகம்⸴ பொது அறிவு⸴ நுண்ணறிவு போன்ற அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறுவது மட்டுமல்லாது அவர்களை சிறந்த மனிதர்களாக்கும் பணியினையும் செய்கின்றனர்.

“எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்ˮ என்ற கூற்றிற்கேற்ப ஒரு மனிதனுக்கு யாரெல்லாம் கல்வி அறிவினை போதிக்கின்றார்களோ அவர்கள் இறைவனுக்கு நிகராக போற்றப்படுகின்றனர்.

அறிவற்றுக் கிடப்பவர்களைக் கூட அறிவாளியாக்கி உலகில் வாழ வைக்கும் உன்னத பணியே ஆசிரியர் பணியாகும்.

அழியாச் செல்வம் கல்விச் செல்வம் ஒன்று மட்டுமே அதனை உலகிற்கு அளிக்கும் பெரும் பணியே ஆசிரியர் பணியாகும். நாட்டில் கல்வி அறிவு வளர்ச்சிக்கும்⸴ நவீன வளர்ச்சிக்கும் பின்புலத்தில் ஆசிரியர்களேயுள்ளனர்.

முடிவுரை

பல சவால்கள் நிறைந்த ஒன்றாக ஆசிரியர் பணி காணப்படுகின்றது. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மாணவர்களிடையே கல்வி மீதுள்ள நாட்டம் குறைவடைந்துள்ளது.

இத்தகைய நிலையை மாற்றி மாணவர்களை நல்வழிப்படுத்துவதில் ஆசிரியர்கள் பாடுபடுகின்றனர். இன்று உலகமே எதிர்கொள்ளும் கொரோனா பிரச்சனையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இதனால் மாணவர்களின் கல்வி இடை நிறுத்தப்பட்ட நிலையில்கூட இணைய வழி கற்கையை ஆசிரியர்கள் தொடர்ந்தனர். இதனால் மாணவர்கள் கல்வி கற்பதில் இருந்து விலகிச் செல்லாமல் பாதுகாக்கப்பட்டனர்.

எனவே ஆசிரியர் பணி அற்புதமான பணியாகும். ஏட்டுக் கல்வியை மட்டுமன்றி சமூகக் கல்வியையும் ஆசிரியர்கள் வழங்குகின்றமை பெருமைக்குரியதாகும்.

எனது கனவு நூலகம் கட்டுரை