நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் கட்டுரை

Noyatra Valve Kurai Vatra Selvam Katturai

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

எவ்வளவு செல்வங்கள் இருந்தாலும் நோய்களும் பிணிகளும் நம்மை சூழ்ந்து கொண்டால் வாழ்க்கையை நிறைவாக வாழ முடியாது போய் விடும்.

எமது வாழ்க்கை முறையை ஆரோக்கியமாக பேணி ஆரோக்கியமான வாழ்வை வாழ்வதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. நோய் ஏற்படக் காரணங்கள்
  3. நோய் தீர்க்கும் வழிகள்
  4. உணவும் மருந்தும்
  5. உடற்பயிற்சியின் தேவை
  6. முடிவுரை

முன்னுரை

உடல்நலம் தான் மனித வாழ்வின் முக்கிய பங்கினை வகிக்கின்றது. இதனால்தான் “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்ˮ என்பர்.

நாம் வாழ்வில் பெற்ற செல்வங்களை அனுபவிப்பதற்கு உடல்நலம் மிக அவசியமாகும். உலகில் மனிதன் தனக்கான ஆயுட்காலம் முழுவதும் சிரமம் இல்லாமல் நலமுடன் வாழ வேண்டுமாயின் நோய்களை அண்டவிடாது ஆரோக்கியமாக வாழ்ந்தால் மட்டுமே முடியும்.

எனவே நோயின்றி வாழ நாம் என்ன செய்ய வேண்டும் என இக்கட்டுரையில் காண்போம்.

நோய் ஏற்படக் காரணங்கள்

நமது உடலில் நோயை ஏற்படுத்தப் பல காரணங்கள் உள்ளன. நோயானது தொற்று நோய்⸴ தொற்றா நோய்கள் என இரு வகை நோய்கள் காணப்படுகின்றன.

மனிதன் இயற்கையை விட்டு வெளியே வந்தது தான் நோய்கள் ஏற்படுவதற்கு முதன்மைக் காரணமாக விளங்குகின்றது. மாறிப்போன உணவுப் பழக்கவழக்கங்கள் நோய் ஏற்பட மற்றுமோர் முக்கிய காரணமாக விளங்குகின்றது.

இன்றைய நவீன உலகில் வேலைச் சுமையை குறைப்பதற்கும்⸴ இலகுவாகச் சமையலை மேற்கொள்ளவும் பொதி செய்யப்பட்ட பொருட்களையும் உணவுகளையும் சமையலில் பயன்படுத்துகின்றனர். இவற்றின் மூலமும் நோய் ஏற்படுகின்றது.

மாசு நிறைந்த சுற்றுச்சூழல்⸴ மன அழுத்தம் இவையும் குறிப்பிடத்தக்க காரணங்களாகும். இன்றைய வாழ்க்கைச் சூழலில் ஓய்வின்றி வேலை செய்தல்⸴ காலம் தவறிய உணவு⸴ உடற்பயிற்சியின்மை போன்ற பல்வேறு காரணங்களும் நோய் ஏற்படக் காரணமாகின்றன.

நோய் தீர்க்கும் வழிகள்

நமது உடலில் ஏற்படும் நோய்களிற்கு பெரும்பாலானவை தவறான வாழ்க்கை முறைதான் காரணமாகின்றன. எனவே நமது வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை கொண்டு வருதல் மூலம் நோயற்ற ஆரோக்கியமான வாழ்வை வாழலாம்.

முடிந்தளவு இயற்கை உணவுகளை உட்கொள்வது அவசியமாகின்றது. கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளைத் தினமும் சேர்த்துக் கொள்ளாமல் விட்டமின்கள் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதன் மூலம் நோயைத் தீர்க்க முடியும்.

உணவினை உரிய நேரத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி தினமும் தவறாமல் மேற்கொள்ள வேண்டும். மேலும் சரியான தூக்கம் நமது நோய்களைக் குணப்படுத்தும் வழிமுறைகளில் ஒன்றாகும்.

காய்கறிகள்⸴ தானியங்கள்⸴ கீரைவகைகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமும் நோய் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

உணவும் மருந்தும்

நாம் உண்ணும் உணவு புரதம்⸴ கொழுப்பு⸴ மாவுச் சத்து⸴ கனிமங்கள்⸴ நுண்ணூட்டச் சத்துக்கள் போன்ற அனைத்தும் கலந்த சமச்சீர் உணவுகளாக இருக்க வேண்டும். உணவில் இவற்றை தேவையான அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உணவை நன்றாக மென்று விழுங்குதல் வேண்டும்⸴ அப்போதுதான் வாயிலுள்ள உமிழ்நீர் வேண்டிய அளவு சுரந்து உணவுடன் கலந்து எளிதில் செரிமானம் அடைந்து உணவிலுள்ள சத்தானது உடலில் சேரும்.

காய்கறிகளை முக்கால் வேக்காட்டில் வேகவைத்து உண்ண வேண்டும்⸴ அப்போதுதான் காய்கறிகளில் உள்ள ஊட்டச்சத்து முழுமையாக கிடைக்கும். இப்படி உண்டால் உணவே மருந்தாகும்.

உடற்பயிற்சியின் தேவை

நமது நோயற்ற வாழ்விற்கும் ஆரோக்கியமான உடல் அமைப்பிற்கும் உடற்பயிற்சி அவசியமாகின்றது.

நாம் உட்கொள்ளும் உணவில் கொழுப்புச் சத்துக்கள் உடலில் படிந்து பல்வேறுபட்ட நோய்கள் ஏற்படக் காரணமாகின்றது. எனவே கொழுப்பினை உடற்பயிற்சியின் மூலம் குறைக்க முடியும்.

உடற்பயிற்சியானது உடலின் வளர்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. அதிகப் பசியைக் கட்டுப்படுத்தும்⸴ ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி வைத்திருப்பதற்கும் உடற்பயிற்சி அவசியமாகும். எனவே தினமும் உடற்பயிற்சி என்பது மிகத் தேவையான ஒன்றாகும்.

முடிவுரை

இறைவன் நமக்குக் கொடுத்த இந்த மானுட வாழ்வினை வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியத்துடன் வாழ்வது சிறந்ததாகும். எனவே உடலை நோயின்றி பாதுகாத்து ஆரோக்கியமான வாழ்வினை வாழ வேண்டும்.

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பது போல் உடலை வைத்துத்தான் உயிரை பாதுகாத்து ஆரோக்கியமான வாழ்வை வாழ முடியும்.

எனவே உடல் ஆரோக்கியத்தினைப் போணுவோம் உயிரைப் பாதுகாப்போம். நோயற்ற ஆரோக்கியமான வாழ்வினை வாழ்ந்து மகிழ்வோம்.

You May Also Like:

தமிழர் பண்பாடும் கலாச்சாரமும்

தமிழ் மொழியின் தொன்மையும் சிறப்பும்