காந்தியின் அகிம்சை கட்டுரை

mahatma gandhi katturai in tamil

இந்த பதிவில் “காந்தியின் அகிம்சை கட்டுரை” பதிவை காணலாம்.

மனித சமுதாயம் அதுவரை கண்டிராத வழியின் மூலம் தாயகம் உய்வுற வழி செய்தவர் மகாத்மா.

காந்தியின் அகிம்சை கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. காந்தியடிகளும் அகிம்சையும்
  3. அகிம்சையின் இன்றைய தேவை
  4. வள்ளுவர் வழியில் மகாத்மா
  5. உலக அகிம்சை தினம்
  6. முடிவுரை

முன்னுரை

அகிம்சையின் அடையாளம் காந்தியடிகள். காந்தியடிகளின் அடையாளம் அகிம்சை இதுவே உலகம் அறிந்த உண்மை ஆகும். காந்தியடிகள் அகிம்சையின் சக்தியை மக்கள் மத்தியில் பரப்பி அதனை உலகறியச் செய்தவர் ஆவார்.

காந்தி வெறுமனே அகிம்சையை போதிப்பவராக மட்டுமில்லை. அந்த அகிம்சையை நடைமுறையில் பிரயோகித்து அதில் ஏற்படும் முரண்களைச் சமரசம் செய்துகொண்டு அகிம்சையைத் தொடர்ந்து உயிருள்ள ஒரு கோட்பாடாக வைத்திருந்தார்.

காந்தியோ, அகிம்சையை ஒரு சக்தியாக, மகத்தான அன்புக்கான ஆயுதமாகப் பிரயோகித்தார். காந்தியின் அகிம்சை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

காந்தியடிகளும் அகிம்சையும்

அகிம்சையே ஆயுதங்களில் வலிமையானது. சத்தியம் வாழ்வில் நிலையானது, உயர்வானது என்பதனை அனைவருக்கும் உணர்த்தியவர் காந்தி அடிகள் ஆவார்.

மனித சமுதாயம் அதுவரை கண்டிராத வழியின் மூலம் தாயகம் உய்வுற வழி செய்தவர் மகாத்மா. காந்தியின் அகிம்சை என்னும் அறவழி கொள்கைக்கு உலக நாடுகள் பலவும் தலை வணங்குகின்றன.

ஐ. நா வும் மகாத்மா காந்தியின் கொள்கையான அறவழியினைப் பின்பற்றுமாறு உலக நாடுகளுக்கு வலியுறுத்துகின்றது.

அகிம்சையின் இன்றைய தேவை

உலகம் முழுக்க இன்று அகிம்சை தேவைப்படுகிறது. உலகம் முழுவதும் தேசம், இனம், மதம், மொழி, பண்பாடு, பொருளாதாரம் போன்றவற்றின் அடிப்படையிலான பிளவுகள், போர்கள், வன்முறைகள் பெருத்துக்கொண்டே போகின்றன.

இவற்றிலிருந்து உலக மக்களை காத்துக்கொள்வதற்கு அகிம்சை தேவைப்படுகின்றது. சமூகத்தை நல்வழிப்படுத்துவதற்கு தனிமனித வாழ்க்கையில் நிம்மதியைப் பெறுவதற்கும் அகிம்சை அவசியமாகின்றது.

முரண்பாடுகளை தீர்த்துக் கொள்வதற்கும் ஒரே சமூகமாக ஒற்றுமையாக வாழ்வதற்கும் அகிம்சையே தேவைப்படுகின்றது.

வள்ளுவர் வழியில் மகாத்மா

மகாத்மா காந்தியின் கொள்கைகளிலேயே தலையாய கொள்கை என்பது அகிம்சைக் கொள்கைதான். பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவரால் மகாத்மா போற்றிய அகிம்சைக் கொள்கை பேசப்பட்டிருக்கின்றது.

அகிம்சை என்ற வார்த்தையைத் திருவள்ளுவர் பயன்படுத்தவில்லையே தவிர அந்தக் கொள்கையை வலியுறுத்தும் பல குறட்பாக்களை அவர் எழுதிச் சென்றிருக்கிறார். காந்தியின் அகிம்சைக் கொள்கைக்கு நேரடிச் சாட்சிபோல பல திருக்குறள்கள் அமைந்துள்ளன.

உதாரணமாக “சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா செய்யாமை மாசற்றார் கோள்” அதாவது சிறப்பைத் தருகிற பெரிய செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும் சரி ஒருபோதும் அடுத்தவர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாகும் என்று கூறியுள்ளார்.

உலக அகிம்சை தினம்

இந்தியாவின் சார்பில் ஜூன் 15, 2007ல் ஐ.நா. பொதுச் சபையில் மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினமான அக்டோபர் 2ம் தேதியை உலக அகிம்சை தினமாக அனுசரிக்க வேண்டும் என்று கோரி தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இத்தீர்மானம் 142 நாடுகளின் ஆதரவுடன் பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் 2ம் தேதியை ஐ.நா. உறுப்பு நாடுகள் உலக அகிம்சை தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டது.

முடிவுரை

அகிம்சை என்னும் அறவழி உலகெங்கிலும் பரவுவதற்கு ஆணிவேராக திகழ்ந்தவர் மஹாத்மா காந்தி.

இவர் இம்மண்ணை விட்டு நீங்கினாலும் அவரது அகிம்சை கொள்கையின் மூலம் இன்று வரை நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

அகிம்சைத் தத்துவத்தை காந்தி தான் வாழும் காலம் முழுவதும் போதித்ததோடு நில்லாமல், ஒரு மாபெரும் நாட்டின் சமூக, அரசியல் விடுதலைக்காக அதனையே கருவியாக்கி, அதில் வெற்றியும் கண்டார். காந்தியின் அகிம்சை வழி நாமும் வாழ்வோமாக.!

You May Also Like:
மகாத்மா காந்தி பற்றிய கட்டுரை
மகாத்மா காந்தி பேச்சு போட்டி