காசநோய் விழிப்புணர்வு கட்டுரை

kasanoi vilipunarvu katturai in tamil

இந்த பதிவில் “காசநோய் விழிப்புணர்வு கட்டுரை” பதிவை காணலாம்.

விழிப்புணர்வுடன் செயற்பட்டால் மட்டுமே இந்நோயில் இருந்து காத்துக்கொள்ள முடியும்.

காசநோய் விழிப்புணர்வு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. காச நோய் என்பது
  3. உலக காசநோய் தினம்
  4. காசநோய் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள்
  5. காச நோயை தடுப்பதற்கான வழிமுறைகள்
  6. முடிவுரை

முன்னுரை

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பர். நம் வாழ்வில் செல்வச் செழிப்போடு இருந்தாலும் நோயற்று இருப்பதே வாழ்வின் குறைவற்ற செல்வமாகக் கருதப்படுகின்றது.

அந்த வகையில் உலக மக்கள் தொகையில் சுமார் 300 கோடி பேர் காசநோயால் பாதிக்கப்படுகின்றனர். இதில் மூன்று கோடிப் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் இந்நோயினால் 50 லட்சம் பேர் இறக்கின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் என்னவெனில் இந்நோய் தொடர்பான விழிப்புணர்வு இன்மையே ஆகும். காசநோய் விழிப்புணர்வு பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

காச நோய் என்பது

காச நோய் என்பது ஆங்கிலத்தில் T.B (TUBERCULOSIS) என அழைக்கப்படுகிறது. காசநோய் மைக்ரோ பாக்டிரியம் டியுபர் குளோசிஸ் என்ற கிருமியினால் தொற்றக்கூடிய நோயாகும்.

இது பரம்பரை நோய் இல்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரையும் தாக்கும் நோய்களில் காசநோயும் ஒன்று. இது காற்றின் மூலம் பரவும் ஒருவகை தொற்று நோய்.

தலைமுடி, நகம், பல் தவிர உடம்பின் அனைத்து பாகங்களையும் தாக்கக்கூடியது. மற்ற தொற்று நோய்களை காட்டிலும் காசநோயால் ஏற்படும் மரணங்கள் அதிகம். காசநோய் முக்கியமாக நுரையீரல், மூளை மற்றும் தண்டுவடத்தை தாக்குகிறது.

உலக காசநோய் தினம்

ஆண்டு தோறும் மார்ச் 24–ந் தேதி அன்று உலக காசநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. அன்றைய நாளில் பொதுமக்களிடம் காசநோய் பற்றி விழிப்புணர்பு ஏற்படுத்தப்படுகின்றது.

உலக காசநோய் எழுச்சியை ஒழிக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தவும், சுகாதார சமூக மற்றும் பொருளாதாரத்தில் காச நோய் ஏற்படுத்தும் விளைவுகள் பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வை அதிகரிக்கவும் உலக காசநோய் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

காசநோய் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள்

காசநோயால் பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து பரவலாம். அதாவது இந்நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் வாய்மூடாமல் தும்மினாலோ அல்லது இருமினாலோ காச நோய் ஏற்படுத்தும் கிருமிகள் காற்றில் வெளிப்படுகின்றன.

இப்படி பாதிக்கப்பட்ட காற்றை சுவாசிக்கும் யாரை வேண்டுமானாலும் பாதிக்கும். இரவு நேரத்தில் காய்ச்சல், ஒருவருக்கு இரண்டு வாரங்களுக்கு மேல் சளியுடன் கூடிய இருமல், மாலை நேரக் காய்ச்சல், பசியின்மை, உடல் எடை குறைவு , சளியுடன் ரத்தம் வருதல். மார்புவலி இருப்பது காசநோயின் அறிகுறிகளே.

காச நோயை தடுப்பதற்கான வழிமுறைகள்

தேவையான காலங்களுக்கு முறையான சிகிச்சைகளை எடுத்துக் கொண்டால் இந்நோயினை முழுமையாக குணப்படுத்திவிடலாம்.

காச நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் இருமும் போது அல்லது தும்மும் போது வாயை மூடிக்கொள்ள வேண்டும். கண்ட இடங்களிலும் எச்சில் துப்பக்கூடாது.

பீடி, சிகரெட், புகையிலை, மதுபானம் அல்லது மற்ற போதை தரக்கூடிய பொருட்கள் உட்கொள்வதை தவிர்க்கவேண்டும் மற்றும் குளிர்ச்சியான பொருட்களை தவிர்த்தல் வேண்டும்.

தொடர்ந்து மூன்று வாரம் சளி அல்லது இருமல் இருந்தால் உடன் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

முடிவுரை

காசநோயானது குணப்படுத்த கூடிய ஒரு நோய் என்பதனை அனைவரும் விளங்கிக் கொள்வதுடன் இந்நோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

எனவே இவற்றைக் கவனத்தில் கொண்டு காசநோய் தொடர்பாக விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். விழிப்புணர்வுடன் செயற்பட்டால் மட்டுமே இந்நோயில் இருந்து காத்துக்கொள்ள முடியும்.

மிகப்பெரிய அளவில் உயிரிழப்புகளை ஏற்படுத்திவரும் காசநோய் குறித்த விழிப்புணர்வை பெறுவோம், காசநோயை ஒழிப்போம்.

You May Also Like :
உடல் நலமும் உள நலமும் கட்டுரை
உலகை அச்சுறுத்தும் கொரோனா தொற்று