தீபாவளி பண்டிகை பற்றிய கட்டுரை

Deepavali Katturai In Tamil

உலகில் வாழும் அனைத்து இந்து மக்களாலும் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் “தீபாவளி பண்டிகை பற்றிய கட்டுரை” பதிவை இதில் காணலாம்.

பல நாடுகளில் தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக விடுமுறை தினமாக இருக்கின்றது. அத்துடன் இந்த பண்டிகை குழந்தைகளால் அதிகம் விரும்பி கொண்டாடப்படுகிறது.

தீபாவளி பண்டிகை பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. தீபாவளி என்பதன் அர்த்தம்
  3. தோற்றம்
  4. தீபாவளியின் சிறப்பு
  5. முடிவுரை

முன்னுரை

பண்டிகைகள் நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட நிகழ்வாகும். தனி மனித சமூகத்தின் நல்வாழ்வை கருதி மிகுந்த சிந்தனையுடன் முன்னோர்கள் பண்டிகைகளை ஏற்படுத்தியுள்ளனர். மனிதநேய ஒருமைப்பாட்டை தமது வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ்வதற்கு பண்டிகைகள் துணைபுரிகின்றன.

உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களால் பல்வேறுபட்ட பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அவ்வகையில் தீபாவளிப் பண்டிகையும் ஒன்றாகும்.

இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும்⸴ சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காகக் கொண்டாடுகின்றனர். தீபாவளி பண்டிகை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

தீபாவளி என்பதன் அர்த்தம்

தீபாவளி என்பதன் பொருளை நோக்குவோமாயின் தீபம்⸴ ஆவளி என இரு சொல் இணைந்ததே தீபாவளி ஆகும். தீபம் என்பது “விளக்குˮ என்றும்⸴ ஆவளி என்றால் “வரிசைˮ என்றும் பொருள் அதாவது தீபங்களை வரிசையாக ஏற்றி ஒளிமயமாக இறைவனை வழிபடும் புண்ணிய தினமே தீபாவளியாகும்.

வாழ்வில் இருள் (தீமைகள்) அகன்று ஒளி (நன்மைகள்) வீசும் என்பது இந்துக்களின் நம்பிக்கை ஆகும்.

தோற்றம்

தீபாவளிப் பண்டிகையின் தோற்றம் பற்றி இந்துக்கள் மத்தியில் பல்வேறு ஐதீகங்கள் நிலவுகின்றன.

அந்தவகையில் இராமன் 14 ஆண்டுகள் வனவாசம் முடித்து நாடு திரும்பும் போது மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர் இதனையே தீபாவளியாகக் கொண்டாடுவதாக கருதும் நிலை காணப்படுகின்றது.

யமனை போற்றும் வகையில் தோன்றியதாகவும் கூறப்படுகின்றது. பவிச்சக்கரவர்த்தியைப் போற்றும் வகையில் தோன்றியது என்ற ஐதீகமும் உண்டு.

நரகாசுரன் என்னும் பழைய மரபுக் கதையின் அடிப்படையில் தோன்றியது எனவும் கூறப்படுகின்றது. இதுவே பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

நரகாசுரன் கடும் தவத்தினால் பல ஆற்றல்களைப் பெற்றமையால் தானே கடவுளிலும் மேலானவன் என்ற மமதை ஏற்பட்டது. இதனால் தேவர்களையும்⸴ ரிஷிகளையும் கொடுமைப்படுத்தினான்.

இவனது கொடுமைகளைத் தாங்க முடியாமல் தேவர்களும் ரிஷிகளும் தம்மைக் காத்தருள வேண்டுமென மகாவிஷ்ணுவிடம் வேண்டினர்.

வேண்டுதலுக்கிணங்க மகாவிஷ்ணு கண்ணன் அவதாரம் எடுத்து அந்தி சாயும் நேரத்தில் சத்யபாமாவின் உதவியுடன் நரகாசுரனை சம்ஹாரம் செய்தார். இவ்வாறு வதம் செய்த நாளே இருள் நீங்கி ஒளி பெற்ற நாளாக எண்ணி தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது.

தீபாவளியின் சிறப்பு

தீபாவளிப் பண்டிகையானது பல சிறப்புகளை பெற்றுள்ள பண்டிகையாகும். தீபாவளியன்று நீராடுவதை விசேடமாகக் சொல்லப்படுகின்றது. அதாவது “புனித நீராடல்ˮ என்று சொல்லப்படுகின்றது.

நன்மையின் வெற்றி தீமையின் அழிவு என்பதனைத்தான் கிருஷ்ண பகவான் நரகாசுரன் அழிவின் மூலம் உலகத்திற்கு உணர்த்தியுள்ளார்.

தீபாவளியின் சிறப்புகளில் ஒன்றாக சிங்கப்பூரில் தீபாவளிப் பண்டிகையை சிறப்பித்து தபால் தலை வெளியிடப்பட்டுள்ளமையைக் கூறலாம்.

திருமணமான தம்பதியினர் திருமணத்திற்கு பின் வரும் முதல் தீபாவளியைத் தல தீபாவளி என்று சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.

தீபாவளி அன்று அனைத்து நதிகள்⸴ ஏரிகள்⸴ குளங்கள்⸴ கிணறுகளிலும் நீர்நிலைகளிலும் கங்கா தேவி வியாபித்து இருப்பதாக ஐதீகம் உண்டு. இன் நாளில் எண்ணை தேய்த்து நீராடுபவர்கள் கங்கையில் நீராடிய புனிதத்தையும்⸴ திருமகளின் அருளையும் பெறுவர்.

முடிவுரை

தீபாவளித் திருநாளில் எல்லா உறவுகளும் ஒன்றிணைந்து மகிழ்கின்றனர். இதனால் பிரிந்த உறவுகள் இணைகின்றன.

ஒளியினால் நிறைந்து அழகாக காட்சியளிக்கும் இந்நாளின் மூலம் தீமைகள் நீங்குவதால் மன நிறைவு பெறுகின்றது.

பண்டிகையானது தத்துவம் நிறைந்ததாகவும்⸴ ஒழுக்கவியல் கருத்துக்களை கொண்டதாகவும் உள்ளது. அவ்வகையில் இது வெறும் பண்டிகை மட்டுமல்லாது வாழ்வினைச் செம்மையாக்கும் அழகிய தீபத் திருநாளாகவும் அமைகின்றது.

You May Also Like:

கல்வியின் சிறப்பு கட்டுரை

தமிழர் பண்பாடும் கலாச்சாரமும்