பெண்களின் சிறப்பு கட்டுரை

pengalin sirappu in tamil katturai

இந்த பதிவில் “பெண்களின் சிறப்பு கட்டுரை” பதிவை காணலாம்.

வெறுமனே வீடுகளில் மட்டுமல்லாது பல்வேறு துறைகளிலும் ஆண்களிற்கு நிகராக பெண்கள் புரியும் சாதனைகள் எண்ணில் அடக்க முடியாதவை.

பெண்களின் சிறப்பு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • பெண்களின் பெருமை
  • பாரதிகண்ட புதுமைப்பெண்கள்
  • இந்தியாவின் சாதனைப்பெண்கள்
  • பெண்களிற்கெதிரான தடைகள்
  • முடிவுரை

முன்னுரை

“மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும்” என்கின்றார் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை.

பெண்கள் பல்வேறு சிறப்புக்களை கொண்டவர்கள். தாயாக, மகளாக, மனைவியாக சமூகத்தின் ஒற்றுமைக்கு, அதன் நிலைத்திருத்தலிற்கு அவர்கள் அளிக்கும் பங்கு அளப்பரியது.

வெறுமனே வீடுகளில் மட்டுமல்லாது பல்வேறு துறைகளிலும் ஆண்களிற்கு நிகராக அவர்கள் புரியும் சாதனைகள் எண்ணில் அடக்க முடியாதவை. இக்கட்டுரையில் பெண்களின் சிறப்பு பற்றி நோக்கலாம்.

பெண்களின் பெருமை

பெண்களின் சிறப்பானது பல நூற்றாண்டுகளிற்கு முற்பட்டது. கால காலமாக தமிழ் இலக்கியங்களில் பெருமைக்குரிய பெண்கள் பலரை குறிப்பிட்டு வந்துள்ளனர்.

சங்ககாலத்திற்குரிய புலவராக போற்றப்படும் ஒளவையார் ஒரு தமிழ்பெண் புலவராவார். ஆத்திசூடி, கொன்றை வேந்தன் போன்ற நூல்களை எழுதி இன்றளவும் பெருமைக்குரியவராக விளங்குகின்றார்.

அறிவில் மட்டுமின்றி வீரத்தில் சிறந்து விளங்கிய வேலு நாச்சியார், ஜான்சி ராணி என ஆதிகால பெண்களின் பெருமையை கூறிக்கொண்டே போகலாம்.

இன்று கல்வி, பொருளாதாரம், வானியல் ஆராய்ச்சிகள், தொல்லியல் மட்டுமின்றி உடலுழைப்பு அதிகம் தேவைப்படுகின்ற துறைகளிலும் சாதனை புரிந்து ஆண்களிற்கு பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதனை நிரூபித்துள்ளார்கள்.

பாரதிகண்ட புதுமைப் பெண்கள்

ஆரம்ப காலத்தில் பெண்களிற் கெதிரான அடக்கு முறைகள் அதிகரித்து காணப்பட்ட காலப்பகுதியில் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்களில் முதன்மையானவராக விளங்குபவர் மகாகவி பாரதியார்.

அவர் தனது கவிதைகளில் பெண்விடுதலையையும், பெண் உயர்வையும் வலியுறுத்துகின்றார்.

“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம். எட்டு மறிவினில் ஆணிக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி” என்று பெண்விடுதலைக்காக கனவு கண்டார் பாரதியார்.

இந்தியாவின் சாதனைப் பெண்கள்

பெண்களின் பெருமையைப் பற்றி பேசும் போது இந்தியத் திருநாட்டில் சாதனை புரிந்த மகளீரைப் பற்றி பேசுவது அவசியமாகும்.

இந்தியாவின் பன்னிரண்டாவது குடியரசுத் தலைவராக பிரதிபா பாட்டில் தெரிவு செய்யப்பட்டார். இவரே இந்தியாவின் முதலாவது பெண் குடியரசு தலைவராவார்.

அதன் பிறகு 1966ல் இந்திரா காந்தி முதல் பெண் பிரதமராக தெரிவு செய்யப்பட்டு பெண்களிற்கு பெருமை சேர்த்தார்.

1979ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்ற முதல் பெண்மணியாக அன்னை தெரேசா விளங்குகின்றார்.

அதனைத் தவிர இந்தியாவின் முதல் பெண் விண்வெளி வீராங்கனையாக கருதப்படும் கல்பனா சௌலா இந்தியாவின் சாதனைப் பெண்களிற்கு சிறந்த எடுத்துக் காட்டு.

பெண்களிற்கு எதிரான தடைகள்

பெண்கள் சாதிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஆண்களைப் போல் பெண்களால் அவ்வளவு எளிதாக பொதுவெளியில் சாதித்து விடமுடியாது.

அவர்கள் வேலை செய்யும் இடங்களில் காணப்படும் பாலின பாகுபாடுகள், பாலின அடக்கு முறைகள், வீட்டு வன்முறைகள் மற்றும் குடும்பப் பொறுப்புக்களை தாண்டியே தம்மை நிலைப்படுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது.

இந்நிலையை மாற்றி அவர்களிற்கான இடைவெளியை வழங்குவதும், முன்னேறுவதற்கான வழிகளை ஏற்படுத்தி கொடுப்பதும்சாதனை புரிவதற்கான உத்வேகமாய் அமையும்.

முடிவுரை

பெண்களின் பெருமை என்றுமே போற்றுதலிற்குரியது. தடைகளை உடைத்து அவர்கள் புரியும் சாதனைகள் கொண்டாட்டத்திற்குரியன.

ஒவ்வொரு வீடுகளிலும் பெண்கள் தனித்து செயற்படுவதற்கான சூழல் ஏற்படுத்தி தரப்பட வேண்டும். அன்பு, கனிவு மட்டுமின்றி விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு கொண்ட பெண்களை நாமும் பெருமைபடுத்துவோமாக.

You May Also Like:
காலம் பொன் போன்றது கட்டுரை
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு கட்டுரை