உலக தாய்மொழி தினம்

சர்வதேச தாய்மொழி தினம்

உலக தாய்மொழி தினம்பிப்ரவரி 21
International Mother Language DayFebruary 21

எந்தவொரு மொழியும் உலகில் சாதாரணமாக உருவாகுவதில்லை. ஒவ்வொரு மொழியும் பல நூற்றாண்டுகளாக மக்களின் வாழ்வாதாரத்துடன் கலந்து அவர்களின் அனுபவங்களில் முதல் வார்த்தைகளாக உருவெடுக்கின்றன.

பின்னர் இலக்கியங்களால் பெருமை சேர்க்கப்பட்டு அவற்றை நாம் கற்றுக் கொள்ளவும், அடுத்த தலைமுறைக்கு அவற்றைக் கற்றுக் கொடுக்கவும் அந்த மொழியே கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றது.

ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்பு வயிற்றில் இருக்கும்போதே தன் தாயின் மொழியை தாய்மொழி வடிவில் கற்றுக் கொள்கின்றது. அந்த தாய்மொழி என்பது ஒவ்வொருவருக்கும் விழி போன்றது.

ஒருவர் பல மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் ஏதேனும் ஒன்றை பகிர்ந்து கொள்ள முதலில் பயன்படுத்துவது தாய்மொழியையே ஆகும். தாய்மொழியின் அடித்தளத்தின் மீதே பிற மொழிகள் கட்டப்படுகின்றன.

உலக தாய்மொழி தினம் வரலாறு

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஒருங்கிணைந்து இருந்த இந்தியா 1947 இல் இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளாகப் பிரிந்தன.

மத அடிப்படையில் பிரிந்த பாகிஸ்தான் கிழக்கு பாகிஸ்தான், மேற்கு பாகிஸ்தான் என இரு தனித்தனி நிலப்பரப்பைக் கொண்டது.

கிழக்கு பாகிஸ்தானை விட மேற்கு பாகிஸ்தான் மக்கள் தொகை நிலப்பரப்பு அதிகம். அங்கு உருது மொழி பேசுபவர்கள் தான் பெரும்பான்மை. அதற்குப் பதிலாக கிழக்கு பாகிஸ்தான் பகுதியின் மொழி வங்காளம் மட்டுமே.

பாகிஸ்தான் தலைநகரம் மற்றும் நிர்வாகம் யாவும் மேற்குப் பாகிஸ்தானில் இருந்தது. இந்நிலையில் உருது மட்டுமே பாகிஸ்தானில் ஆட்சி, தேசிய மொழி என அறிவித்தார் அப்போதைய பாகிஸ்தானிய ஜனாதிபதி முகமது அலி ஜின்னா.

அதுமட்டுமல்லாது பாகிஸ்தான் பணியாளர் தேர்வுகள் ஆட்சி மொழியான உருது மொழியில் மட்டும் தான் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து 1952 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் திகதி ‘வங்க மொழி இயக்கம்’ உருவானது. இதனைத் தொடர்ந்து வங்க மொழி இயக்க மாணவர்கள், அரசியல் தலைவர்கள் உட்படப் பலரும் தங்கள் மொழிக்கு உரிமை கேட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 4 மாணவர்கள் மொழிக்காக உயிர் தியாகம் செய்தனர். போராட்டம் தீவிரமாகப் பரவியது. 1956 ஆம் ஆண்டு கிழக்குப் பாக்கிஸ்தான் மொழியாக வங்க மொழி அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து உயிரிழந்த மாணவர்கள் நினைவாக ஆண்டுதோறும் பிப்ரவரி 21ஆம் திகதியை உலக தாய்மொழி தினமாகக் கடைப்பிடிக்க வேண்டுமென்று தீர்மானத்தை வங்கதேச அறிஞரான ரபீக்குல் இஸ்லாம் 1998 ஆம் ஆண்டு யுனெஸ்கோவில் முன்மொழிந்தார்.

பின்பு கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் பெப்ரவரி 21 ஆம் திகதி உலக தாய்மொழி தினமாக ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனஸ்கோ) அறிவித்தது.

அதனடிப்படையில் உலகெங்கிலும் உலக தாய்மொழி தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 21 கொண்டாடப்பட்டு வருகின்றது.

தாய்மொழி தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம்

மொழிக்காக உயிரிழந்தவர்களின் நினைவாகவும், தாய்மொழியைப் போற்றும் விதமாகவும் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகின்றது.

உலக நாடுகளில் வாழும் மக்கள் அனைவரும் தாங்கள் வாழும் பகுதி மட்டுமல்லாது ஒவ்வொருவரும் பிறந்த நாள் முதல் பழகி வரும் மொழியை பேணிக் காக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் உலக தாய்மொழி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

உலக தாய்மொழி தினம் முக்கியத்துவம்

உலகளவில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு 7000ற்கும் அதிகமாக இருந்த மொழிகள் தற்போது மூவாயிரத்துக்கும் குறைவாக உள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் வார்த்தை வடிவம் பெறாமல் பேச்சு மொழியாக மட்டுமே உள்ளன.

நூற்றுக் கணக்கான வளமான மொழிகள் கூட இன்றும் கல்வி மொழியாக அறிவிக்கப்படவில்லை. எனவே தாய்மொழிகளுக்கான அங்கீகாரத்தையும், மதிப்பையும் இந்நாள் நினைவுபடுத்துகின்றது.

இந்நாள் பன்மொழிப் பயன்பாட்டை முன்னேற்றவும், உலகிலுள்ள அனைத்து மொழிகளையும் பாதுகாப்பதற்கும் ஓர் வாய்ப்பை வழங்குகின்றது.

You May Also Like:
தமிழ் மொழியின் சிறப்புகள் கட்டுரை
உலக தாய்மொழி தினம் கட்டுரை