ஒழுக்கம் உயர்வு தரும் கட்டுரை

Olukkam Uyarvu Tharum Katturai In Tamil

இந்த பதிவில் “ஒழுக்கம் உயர்வு தரும் கட்டுரை” பதிவை காணலாம்.

செல்வத்திலும், அந்தஸ்திலும் குறைந்த நிலையில் உள்ளவர்களாக இருந்தாலும் தங்கள் ஒழுக்கமான வாழ்க்கையினால் உயர் நிலையை அடைவார்கள்.

ஒழுக்கம் உயர்வு தரும் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. ஒமுக்கம் பற்றி வள்ளுவரின் கருத்து
  3. ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதற்கு ஏதுவான வழிமுறைகள்
  4. ஒழுக்கத்தால் கிடைக்கும் நன்மைகள்
  5. ஒழுக்கமின்மையின் இழிவு
  6. முடிவுரை

முன்னுரை

நம் முன்னோர்கள் வாழ்வில் ஒழுக்கத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வழங்கியுள்ளனர். கல்வி, செல்வம், பதவி போன்றவை எதுவுமே ஒழுக்கத்திற்கு ஈடாக முடியாது. ஒழுக்கம் என்பது சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நற்பண்புகளின் சேர்க்கையாகும்.

வெள்ளை காகிதத்தில் சிறு கரும்புள்ளி இருந்தால் கரும்புள்ளி மட்டுமே கண்ணில்ப்படும். அதேபோல் எத்தனை பெருமைகள், திறமைகள் இருந்தாலும் ஒழுக்கம் இல்லை என்றால் வாழ்வில் எவருக்கும் மதிப்பதில்லை.

வாழ்வில் உயர்வு பெற வேண்டுமெனில் ஒழுக்கமுள்ளவர்களாக வாழ்தல் வேண்டும். ஒழுக்கமே வாழ்வில் உயர்வு தரும். ஒமுக்கம் தரும் உயர்வு பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

ஒமுக்கம் பற்றி வள்ளுவரின் கருத்து

“அழுக்கா றுடையான்கண் ஆக்கம் போன்று இல்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு”

அதாவது பொறாமையுடையவனுக்கும்இ நல்லெழுக்கம் இல்லாதவனுக்கும் அமையும் வாழ்வு உயர்வான வாழ்வாகக் கருதப்பட மாட்டாது.

“ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி”

எனும் குறலின் ஊடாக ஒழுக்கத்தால் எல்லாரும் மேன்மை அடைவார்கள். ஒழுக்கக் கேட்டால் அடையத்தகாத பழியை அடைவார்கள் எனக் கூறுகின்றார்.

“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்”

இக்குறள் மூலம் வள்ளுவர் ஒழுக்கம் மேன்மையைத் தருவதனால் அந்த ஒழுக்கமே உயிரினும் மேலானதாகக் காக்கப்படும் என்கின்றார்.

ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதற்கு ஏதுவான வழிமுறைகள்

போதுமான அளவு விளையாட்டு, மகிழ்ச்சியான பயனுள்ள பொழுதுபோக்குகள் ஒழுக்கத்தைப் பேணுவதில் உதவியாக இருக்கும்.

தர்மத்தை, நீதியை, ஒழுக்கத்தைப் போதிக்கும் கதைகளை வாசித்தல் இனிமையான சங்கீதம், இசை நிகழ்ச்சிகளைக் கேட்டல், சித்திரம் வரைதல், நாட்டியப் பயிற்சி, தியானம் ஆகியன சிறுவர்களிடையே ஒழுக்கமுள்ள மனப்பான்மையை வளரச் செய்யும் பயிற்சிகளாகும்.

ஒழுக்கத்தால் கிடைக்கும் நன்மைகள்

செல்வத்திலும், அந்தஸ்திலும் குறைந்த நிலையில் உள்ளவர்களாக இருந்தாலும் தங்கள் ஒழுக்கமான வாழ்க்கையினால் உயர் நிலையை அடைவார்கள். ஒழுக்கமானது நற்பெயரினைப் பெற்றுத் தரும்.

மற்றவர்கள் மத்தியில் கௌரவத்தையும், நன்மதிப்பையும், மரியாதையையும் வழங்கும். எம் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தும்.

உடல் நலத்தையும், உள நலத்தையும் பெற்றுத்தர வல்லது. ஒழுக்கம் எப்போதும் மேன்மையைத் தருவதாகும். நல்ல ஒழுக்கமானது இன்பமான நல்வாழ்வுக்கு வித்தாக இருக்கும்.

ஒழுக்கமின்மையின் இழிவு

ஒழுக்கமில்லாத வாழ்வானது என்றென்றும் துன்பத்தையே தரும். எவ்வளவு உயர்ந்த அந்தஸ்தில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தாலும் ஒழுக்கம் இல்லையெனில் அந்த வாழ்வில் பயன் இல்லை.

ஒழுக்கம் தவறி வாழ்ந்தால் அவனது பிறப்பையே தாழ்த்திவிடும். பிறரிடமிருந்து மரியாதையும், கௌரவமும் கிடைக்கப் பெறாது. மற்றவர்கள் எம்மை இழிவாகப் பார்க்கும் நிலையே இருக்கும்.

வாழ்வில் உயர்ந்த நிலையை அடைந்தாலும் ஒழுக்கம் இல்லை எனில் அந்த உயர்ந்த நிலைக்கு அர்த்தம் இருக்காது.

முடிவுரை

வருந்தியேனும் ஒழுக்கத்தைப் போற்றிக் காக்க வேண்டும். தனி மனித ஒழுக்கம் சமுதாய ஒழுக்கமாகும். சமுதாய ஒழுக்கம் நாட்டின் ஒழுக்கமாகும்.

எனவே வாழ்வில் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் தான் நாம் தலைச்சிறந்து வாழ வழிவகுக்கும். எனவே சிறுவயதிலிருந்தே ஒழுக்கத்தை கற்றுக்கொண்டு வாழ்வில் உயர்வோமாக!

You May Also Like:
ஒழுக்கம் பற்றிய கட்டுரை
அறம் பற்றிய கட்டுரை