நாட்டின் முதுகெலும்பு விவசாயம் கட்டுரை

Vivasayam Katturai In Tamil

இந்த பதிவில் நம்மை வாழ வைக்கும் “நாட்டின் முதுகெலும்பு விவசாயம் கட்டுரை” பதிவை காணலாம்.

விவசாயம் என்பது மக்களின் வாழ்க்கைத் தரம், மக்களின் நல்வாழ்வு மற்றும் நாட்டின் உணவுப் பாதுகாப்பை நிர்ணயிக்கும் மிக முக்கியமான தொழிலாகும்.

நாட்டின் முதுகெலும்பு விவசாயம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. விவசாயத்தின் முக்கியத்துவம்
  3. இயற்கை விவசாயம்
  4. இயற்கை விவசாயத்தின் நன்மைகள்
  5. வேளாண்மையின் இன்றைய நிலை
  6. முடிவுரை

முன்னுரை

மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் என்ற மூன்றில், முதலில் குறிப்பிடப்படும் உணவு தான் மிகவும் முக்கியம் பெறுகின்றது.

உணவு இல்லையென்றால் மனிதனால் உயிர்வாழ முடியாது. விவசாயி “சேற்றில் கால் வைத்தால்தான், நாம் சோற்றில் கைவைக்க முடியும்”.

“தாளாற்றி தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தல் பொருட்டு” என விவசாயத்தின் மகத்துவத்தை திருவள்ளுவர் கூறுகிறார்.

உலகத்தில் எத்தனை தொழில்கள் இருந்தாலும் எல்லோர்க்கும் உணவளிக்கும் மேன்மையான தொழிலாக விவசாயம் காணப்படுகிறது. இதுவே நாட்டின் முதுகெலும்பாகும் இதைப்பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

விவசாயத்தின் முக்கியத்துவம்

விவசாயம் உலகின் மிகப் பழமையான மற்றும் மிக முக்கியமான தொழில்களில் ஒன்றாகும். வேளாண்மை என்பது மக்களின் வாழ்க்கைத் தரம், அதன் நல்வாழ்வு மற்றும் நாட்டின் உணவுப் பாதுகாப்பை நிர்ணயிக்கும் மிக முக்கியமான தொழிலாகும்.

மனித குலத்ததின் இருப்பிற்கு விவவசாயம் அவசியமாகும். மனிதன் உயிர்வாழ்வதற்கு உணவு அவசியமாகும். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்பவும் பசிப் பிரச்சனையைப் போக்கி கொள்ளவும் விவசாயம் இன்றியமையாததாகும்.

இன்று உலகில் பல நாடுகளில் பசியால் வாடும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்கின்றனர். இதனைப் போக்கிக்கொள்ள தான் உலக நாடுகள் உற்பத்தித்திறனை அதிகரிக்கின்றன.

போர் காலநிலை, அனர்த்தங்கள், அழிவுகள் ஏற்படும் போது உணவின் அவசியம் மேலும் அதிகரிக்கும். இக்காலப் பகுதியில் விவசாயமே அவசியமானதாக உணரப்படும்.

இயற்கை விவசாயம்

இயற்கை விவசாயம் என்பது செயற்கை உரம், பூச்சிக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட கழிவுகளை முற்றிலுமாக தவிர்த்து பயிர்சுழிச்சி, பசு உரம், மக்கிய குப்பை, கால்நடை கழிவுகள் ஆகியவற்றை நிலத்தில் விளையும் பயிர்களுக்கு உரமாக பயன்படுத்துவது ஆகும்.

பழைய காலத்தில் தமிழ் மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு இயற்கை வேளாண்மை (இயற்கை விவசாயம்) முக்கிய பங்கு வகித்தது.

இயற்கை விவசாயத்தின் நன்மைகள்

இயற்கை விவசாயத்தின் மூலம் தூய்மையான, ஆரோக்கியமான பயிர்களை பெறலாம். பஞ்ச பூதங்களையும் பாதிக்காமல் இயற்கை முறையில் வேளாண்மை செய்யும் பொழுது நாம் நமது அடுத்த தலைமுறைக்கு நஞ்சற்ற வேளாண் முறையை தருவதோடு ஆரோக்கியமான உணவுக்கும் வழிவகை செய்கின்றோம்.

மேலும் விவசாயச் செலவு குறைந்து, உற்பத்தி மற்றும் லாபம் அதிகரிக்கும். பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்க முடியும்.

வேளாண்மையின் இன்றைய நிலை

நவீன உலகத்தில் அனைவரும் வேகமான வாழ்க்கையைத் தான் வாழ்ந்து வருகின்றனர். அதுபோல் விவசாயத்திலும் நவீனம் தாக்கம் செலுத்தியுள்ளது.

விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மரபணு மாற்றப்பட்ட விதை, உரம், பூச்சி மருந்து, புதிய விவசாய உபகரணங்கள் போன்றவற்றை அறிமுகப்படுத்தி அதிக விளைச்சல் உற்பத்தி செய்கின்றனர்.

இவற்றின் மூலம் லாபம் ஈட்டப்படுவதுடன் தொழில்நுட்பம் மூலமாக அதிகபரப்பளவில் பயிர் செய்யவும் முடிகிறது. எனினும் விவசாயத்தில் பயன்படுத்தப்படுகின்ற நவீன கிருமிநாசினிகள் உணவை நஞ்சாக்குகின்றது. ஏராளமான நோய்கள் ஏற்படுவதற்கும் காரணமாக அமைகின்றது.

முடிவுரை

நம் முன்னோர்கள் விவசாயத்தை கௌரவ தொழிலாகச் செய்து வந்தனர். இன்று எமது நாட்டின் முன்னேற்றத்திற்கு விவசாயமானது பெரிதும் பங்களிப்புச் செய்கின்றது. இத்தகைய உழவுத் தொழிலை நாம் மதிக்க வேண்டும்.

உழவன் கணக்குப் பார்த்தான் என்றால், உலகத்து உயிர்கள் அதாவது மனிதன் உட்பட ஒன்றுகூட மிஞ்சாது’ என்பது புதுமொழி. இத்தகைய உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்.

You May Also Like:
மழைநீர் சேகரிப்பு கட்டுரை
காற்று மாசுபாடு பற்றி தமிழ் கட்டுரை