உடைந்த கைத்தொலைபேசியின் சுயசரிதை

உடைந்த தொலைபேசியின் சுயசரிதை

இந்த பதிவில் “உடைந்த கைத்தொலைபேசியின் சுயசரிதை கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு (02) கட்டுரைகளை காணலாம்.

நம் அன்றாட வாழ்வில் பின்னிப்பிணைந்த ஒரு பொருளாக தொலைபேசிகள் மாறியுள்ளன.

தொலைபேசியின் சுயசரிதை கட்டுரை – 1

உலகின் தொழில்நுட்ப வளர்ச்சியின் மிகப்பெரியதொரு அங்கமாக விளங்கும் நான் ஒரு தொலைபேசியாவேன். மனிதர்களிடையே உறவை வளர்க்கவும், தகவல்களை பரிமாறவும் தூண்டுகோலாய் உள்ள நான், அனைவரின் நட்பிற்கும் பாத்திரமானவனாக விளங்குகின்றேன்.

தற்போது உடைந்த நிலையில் அலங்கோலமாகக் காட்சி தரும் நான் ஒரு காலத்தில் அழகிய தொலைபேசியாக விளங்கினேன். தொழிற்சாலை ஒன்றில் நூற்றுக்கணக்கான தொலைபேசிகளுடன் உருவாக்கப்பட்ட நான் விற்பனைக்காக கடையொன்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டேன்.

ஒருநாள் பெரியவர் ஒருவர் அவரது வீட்டு பயன்பாட்டிற்காக என்னை கொள்வனவு செய்து அவரது வீட்டின் வரவேற்பறையில் உள்ள அழகிய மேசையில் என்னை வைத்தார்.

அன்றிலுருந்து அந்த வீட்டிலுள்ள அனைவரும் பயன்படுத்தும் ஒரு பொருளாக மாற்றமடைந்தேன். மகிழ்ச்சியான செய்திகளை கூறும் போது அந்த வீட்டினர் மகிழ்ந்தைப் போலவே நானும் மகிழ்ந்தேன். துக்கமான செய்திகளை தாங்கிவரும் போது பெரும் துயர் என்னை ஆட்கொண்டது.

ஆனந்தத்திலும் துக்கத்திலும் வீட்டினரின் மனதிற்கு நெருக்கமானவனாக நான் மாறிப்போனேன். இவ்வாறு அழகாக சென்று கொணடிருந்த என் வாழ்க்கை திடிரென ஒருநாள் தலைகீழாக மாறியது.

அதிகமான மின்வழங்கலினால் என்னுடைய பாகங்கள் செயலற்று போயின. அதனால் பாவனைக்கு உதவாதவனாக வீட்டின் ஒரு பழைய அறையின் மூலையில் தூக்கி வீசப்பட்டேன்.

என்னுடைய வாழ்நாள் முழுவதும் அந்த வீட்டினருக்காக கடினமாக உழைத்திட்ட போதும், இறுதியில் என்னை தூக்கி வீசிய மனிதர்களின் நன்றி மறந்த தன்மையை நினைத்து அடிக்கடி கோபம் கொள்வதுண்டு.

அன்றுமுதல் என்னுடைய கடந்த காலத்தை எண்ணி வருத்தம் மேலிட்டாலும் அனைவருக்கும் உதவுவனாக வாழ்ந்ததை எண்ணி திருப்தி கொண்டவனாக என் வாழ்நாளை கழித்து வருகின்றேன்.

உடைந்த கைத்தொலைபேசியின் சுயசரிதை – 2

தொலைபேசிகள் இல்லையேல் மனித வாழ்க்கையின் இயல்புநிலை அற்று போய்விடும் அளவிற்கு மனிதர்களிற்கு தொலைபேசிகள் மிகமுக்கியமாக விளங்குகின்றன. அத்தகைய சிறப்பு வாய்ந்த நான் ஒரு தொலைபேசியாவேன்.

தற்போது பழுதடைந்து உடைந்த நிலையில் காணப்படும் நான் ஒரு காலத்தில் என்னுடைய எஜமானர்களால் பொக்கிசமாக பாதுகாக்கப்பட்டேன். காற்று, மழை அண்டாமலும், கள்வர்களால் திருடமுடியாத வகையிலும், சிறுவர்களின் கைபடாமலும் அவர்கள் என்னை பேணி பாதுகாத்தனர்.

தங்களுடைய அத்தியாவசிய தேவைகளிற்கு மட்டும் என்னை பயன்படுத்தி என்னுள் சிறு பிழையேனும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டனர். அனைவரிற்கும் நன்மைகளை மட்டும் பெற்றுத்தரும் நோக்கிலே நான் உருவாக்கப்பட்டேன்.

தூரதேசத்தில் இருப்பவர்கள் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும், ஒருவரிற்கு ஒருவர் அன்பை பகிர்ந்துகொள்ளவும் உதவுவதே என் பிரதான வேலையாக காணப்பட்டது.

தபால்கள் கிடைக்கப்பெறுவதற்கு அதிகநாட்கள் எடுத்துக் கொள்வதால், நேரவிரயத்தை குறைப்பதற்காகவும் உடனடி தொலை தொடர்பாடலிற்காகவும் பணம் படைத்தவர்கள் என்னை கொள்வனவு செய்து வீட்டில் வைத்திருந்தனர்.

நானும் என்னால் முடிந்தளவு பயனை வழங்கி மனிதர்களின் அபிமானத்தைப் பெற்று விளங்கினேன். எந்தளவிற்கு மனிதர்களால் விரும்பப்பட்டவனாக இருந்தேனோ, அந்தளவிற்கு மனிதர்கள் என்னை வெறுக்கவும் தொடங்கினர்.

தங்களுடைய பிள்ளைகள் என்னுடன் அதிக நேரம் செலவு செய்வதாக என்மேல் கோபம் கொள்ளத் தொடங்கினர். மகிழ்ச்சியான செய்திகள் தாங்கி அழைப்புக்கள் வந்தபோது கொண்டாடித் தீர்த்த மனிதர்கள் துக்கமான செய்திகளைக் கேட்கும் போது என்னை கடுமையாகத் திட்டித் தீர்த்தனர்.

இன்னொரு சாரார் குற்றச் செயல்கள் அதிகம் நடைபெறுவதற்கு என்னையும் ஒரு காரணமாகக் பழி கூறினர். இவ்வாறு மனிதர்கள் அறியாமையினால் பழிகூறும் போது மிகுந்த வருத்தம் அடைந்ததுண்டு.

இன்று ஒரு உடைந்த தொலைபேசியாக பரிதாபமாகக் காட்சிதரும் நான், என் கடந்தகாலத்தை எண்ணும் போது மகிழ்ச்சியையும் துக்கத்தையும் ஒருங்கே அனுபவிப்பேன்.

You May Also Like:
நான் ஒரு ஓவியர் ஆனால் கட்டுரை
நான் ஒரு கதைப்புத்தகம் கட்டுரை