மகா சிவராத்திரி பற்றிய கட்டுரை

Maha Shivratri Katturai In Tamil

இந்த பதிவில் சிவனின் சிறப்பு விரதமான “மகா சிவராத்திரி பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

இந்துக்களின் விரதங்கள் பலவும் சிறப்பு பெற்ற விரதங்களாக காணப்படுகின்றன அவற்றுள் ஒன்றே மகா சிவராத்திரி ஆகும்.

மகா சிவராத்திரி பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. சிவராத்திரியின் தோற்றம்
  3. சிவராத்திரியின் வகைகள்
  4. விரதம் இருக்கும் முறை
  5. சிவராத்திரியின் மகிமை
  6. முடிவுரை

முன்னுரை

இந்துக்களின் விரதங்கள் பலவும் சிறப்பு பெற்ற விரதங்களாக காணப்படுகின்றன அவற்றுள் ஒன்றே மகா சிவராத்திரி ஆகும். ஆதியும், அந்தமும் இல்லாத அரும்பெரும் ஜோதியான சிவபெருமானுக்குரிய விரதங்களுள் தலையாய விரதமே மகா சிவராத்திரி விரதமாகும்.

ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச தேய்பிறை சதுர்த்தி திதியில் இரவில் கொண்டாடப்படுகின்ற நோன்பாகும். யுகம் யுகமாய் நடைபெற்று வரும் சிவராத்திரி வழிபாடானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

வருடத்தில் ஒருமுறை வரும் மகா சிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவனை ஆதரித்தால் மங்களம் கிடைக்கும். சிறப்புக்கள் மிக்க மகா சிவராத்திரி பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

சிவராத்திரியின் தோற்றம்

பிரளய காலத்தின் போது பிரம்மனும் அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்துவிட்ட நிலையில் இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள். நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்சனை செய்தார்.

பூஜையின் முடிவில் அதாவது சிவராத்திரி அன்று சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை தங்களை சிவபூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்கவேண்டும் என்று அருள் புரியுங்கள் என அம்பிகை வேண்டிக்கொண்டார்.

சிவபெருமானும் அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார். அந்த இரவே சிவராத்திரி என வழங்கப்பட்டு அனைவராலும் கொண்டாடப்படுகிறது.

சிவராத்திரியின் வகைகள்

ஐந்து வகையான சிவராத்திரிகள் உள்ளன. அவையாவன மகா சிவராத்திரி, யோக சிவராத்திரி, நித்ய சிவராத்திரி, பக்ஷ சிவராத்திரி, மாத சிவராத்திரி என்பவையாகும். மகா சிவராத்திரிக்கு “வருட சிவராத்திரி” என்ற பெயரும் உண்டு.

யோக சிவராத்திரி என்பது 24 மணி நேரமாகப் பகுக்கப்பட்டிருக்கும் ஒரு நாளை நம் முன்னோர்கள் 60 நாழிகையாகப் பிரித்தார்கள். சூரிய உதயம் முதல் இரவு வரை அமாவாசைத் திதி இருந்தால் அன்று யோக சிவராத்திரி.

தை மாதம் தேய்பிறை பிரதமையில் ஆரம்பித்து பதின்மூன்று நாட்கள், மிகுந்த கட்டுப்பாட்டுடன் ஒருபொழுது மட்டுமே உணவு உண்டு, சிவனை பூஜித்து பதினான்காவது நாளான சதுர்த்தசி அன்று முறைப்படி விரதம் இருந்து மறுநாள் விரதத்தை முடிப்பது பக்ஷ சிவராத்திரி ஆகும்.

மாத சிவராத்திரி என்பது ஒவ்வொரு மாதமும் வரும் வளர்பிறை சதுர்த்தசி, மற்றும் தேய்பிறை சதுர்த்தசி தினங்கள் மாத சிவராத்திரிகள் ஆகும்.

விரதம் இருக்கும் முறை

அதிகாலையிலேயே தூய நன்னீரில் நீராடி, தூய உடை உடுத்தி நெற்றியில் நீறணிந்து, சிவனுக்குரிய மந்திரமான ஓம் நமசிவாய என்ற பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

பின்னர் கோயிலுக்குச் சென்று நாலு கால பூஜையிலும் கலந்து கொண்டு பகலில் கண்டிப்பாக உறங்கக் கூடாது. இரவிலும் கண் விழிக்க வேண்டும்.

சிவ புராணம் படிக்கலாம். அன்று முழுவதும் தண்ணீர் கூட குடிக்காமல் உண்ணாமல் இருப்பது சிறந்தது.

சிவராத்திரியின் மகிமை

யோக சிவராத்திரியின் போது விரதம் இருந்து பூஜை செய்தால், அது மூன்று கோடி மற்ற சிவராத்திரி விரதம் இருந்த பலனுக்கு சமம் என்பது ஐதிகம்.

சிவராத்திரி அன்று அறியாமல் செய்த பூஜை கூட அமோக பலன் அளிக்கும் என்பதை மகாபாரதத்தில் வரும் ஒரு கதை விளக்குகிறது.

பெண்கள் சிவராத்திரி விரதமிருந்து பூஜை செய்தால் மிகச் சிறந்த கணவன் வாய்க்கப் பெறுவார்கள்.

முடிவுரை

விரதங்கள் நம்மை நல்வழிப்படுத்துவது மட்டுமன்றி நற்பயன்களையும் எமக்களிக்கின்றன. இறைவனை ஒன்றித்து வாழும் போது மனம் அமைதி கிடைக்கின்றது.

எனவே ஆதியும் அந்தமும் இல்லா சிவபெருமானை மனதில் நினைத்து சிவராத்திரி விரதத்தை கடைப்பிடித்து பலன் பெறுவோமாக.

You May Also Like:
உலக மகளிர் தினம் கட்டுரை
சரஸ்வதி பூஜை பற்றிய கட்டுரை